ஒரு இனத்தின் புலம்பெயர் சமூகமானது தமது தாயாக உறவுகளுக்கு எவ்வாறான பலத்தினை வழங்க முடியுமென்பதில் பல்வேறு பட்ட முயற்சிகள் உலகமெங்கும் இடம்பெறுகின்ற போதிலும். தமிழ் சமூகமானது அதிலும் குறிப்பாக ஈழத்தமிழ் சமூகமானது கல்விசார்ந்த பல்வேறு பட்ட முனைப்புக்களை முன்னெடுத்து வருகின்றது.
அண்மையில் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அதிபர் திருமதி மீனலோஜினி இதயசிவதாஸ் அவர்கள் இலண்டன் வருகை தந்திருந்தார். அவருடன் உருத்திரபுரம் பிரதேச உறவுகள் இணைந்து ஒரு கலந்துரையாடலினை ஒழுங்கு செய்திருந்தனர்.
மேற்படி கல்வியியலாளர் திருமதி மீனலோஜினி இதயசிவதாஸ் அவர்கள் தனது ஆசிரியப் பணியின் தொடர்ச்சியாக அதிபராக கிளிநொச்சி உருத்திரபுரம் மகா வித்தியாலயத்திலும் தற்போது கிளிநொச்சி இந்துக் கல்லூரியிலும் கடமையாற்றுகின்றார். நீண்ட காலப்பகுதியில் உருத்திரபுர பிரதேச சுற்றாடலில் இவ்விரு பாடசாலைகளிலும் அதிபராக கடமையாற்றுவதன் மூலம் அப்பிரதேச மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தனது முழுமையான பங்களிப்பினை வழங்கிவருகின்றார். இதன் நீட்சியாக அண்மையில் நடைபெற்ற உருத்திரபுர உறவுகளின் சந்திப்பானது ஒரு உறவுப்பாலமாக அமைந்ததுடன், உருத்திரபுர பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியில் புலம்பெயர் உறவுகளின் பணிமீதான கரிசனையை அதிகரித்தது எனலாம்.
முன்னாள் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள்,நலன் விரும்பிகள் எனப் பலர் கலந்துகொண்டதுடன் கல்வியியலாளர் திருமதி மீனலோஜினி இதயசிவதாஸ் அவர்களை கௌரவித்து வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.