அஜித் குமாரின் திரையுலக பயணத்தில் அவருக்கு திருப்புமுனை ஏற்படுத்திய படைப்புகளில் ‘பில்லா’வும் ஒன்று. ஸ்டைலிஷ்ஷான திரை தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்த அஜித்குமாரின் ‘பில்லா’- அவரது பிறந்த நாளான மே ஒன்றாம் திகதியன்று பட மாளிகையில் மீண்டும் வெளியிடப்படுகிறது. ஜி பி என்டர்டெயின்மென்ட் எனும் பட நிறுவனத்தை சார்ந்த அரவிந்த் சுரேஷ்குமார் மற்றும் டொக்டர் ஞானபாரதி ஆகியோர் இணைந்து இத்திரைப்படத்தை பட மாளிகையில் வெளியிடுகிறார்கள்.
தமிழ் திரையுலகத்தில் இளம் படைப்பாளிகள் பலரும் குறும்படத்தை இயக்கி வெற்றி பெற்று, முழு நீள திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பினை பெறுகிறார்கள். ஆனால் முழு நீள திரைப்படத்தை இயக்குவதற்கான அனுபவமின்மையால் அவர்களது படைப்புகள் தோல்வி அடைகிறது . இது ஒரு புறமமிருக்க… மறுபுறம் அனுபவிக்க திறமைசாலிகளான இயக்குநர்கள்- ஒரு படத்தை இயக்கினால் அந்தத் திரைப்படம் பான் இந்திய அளவில் வெளியாகி 500 கோடி முதல் 1000 கோடி ரூபாய் வரை வசூலிக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துக் கொண்டிருப்பதால்… அவர்கள் படத்தை இயக்குவதில் தாமதம் காட்டுகிறார்கள். இதனால் தமிழ் திரையுலகில் ஐந்து முதல் பத்து கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு படத்தை தயாரித்து ஐம்பது கோடி ரூபாய் வணிகம் செய்து லாபம் ஈட்டும் படங்கள் வெளியாவது கணிசமாக குறைந்து விட்டது. இதனை பூர்த்தி செய்யும் வகையில் படமாளிகை அதிபர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஒன்றிணைந்துரசிகர்களிடம் வெற்றி பெற்ற திரைப்படத்தை மீண்டும் திரையிட தொடங்கியிருக்கிறார்கள். அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’ திரைப்படம் மீண்டும் படமாளிகையில் வெளியான போது வசூலில் பெரிய வெற்றியை பெற்றது. திரையுலகத்தில் ‘எம்ஜிஆர் -சிவாஜி’,’ ரஜினி -கமல்’, ‘விஜய்- அஜித்’ எனும் ‘இரு துருவ மோதல்’ இலக்கணப்படி விஜயின் ‘கில்லி’ வெற்றி பெற்றது போல அஜித்தின் ‘பில்லா’வும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் அப்படத்தினை மே ஒன்றாம் திகதி அவரது பிறந்த நாளன்று வெளியிடுகிறார்கள்.
இந்தத் திரைப்படம் அவருடைய ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தாலும் இளம் தலைமுறை ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் எம்மாதிரியான அனுபவத்தை வழங்கும் என்பதை மே முதல் திகதியன்று படமாளிகைக்கு வருகை தரும் ரசிகர்களின் கூட்டமே நிர்ணயிக்கும்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் நயன்தாராவின் கலக்கலான கவர்ச்சியில் உருவான ‘பில்லா’ திரைப்படம் மீண்டும் வெளியிடப்படுவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.