புதுமுக நடிகர் குங்கும ராஜ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வடக்கன் எனும் திரைப்படத்தின் பெயர் ‘ரயில்’ என மாற்றம் பெற்று, இம்மாதம் 21 ஆம் திகதியன்று பட மாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
கதாசிரியரும், வசனகர்த்தாவுமான பாஸ்கர் சக்தி திரைப்பட இயக்குநராக அறிமுகமாகும் ‘ரயில்’ எனும் திரைப்படத்தில் குங்கும ராஜ், வைரமாலா , வினோத் கேசவன், ரமேஷ் வைத்யா, பர்வேஸ் மெஹ்ரூ, சமீரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். ஜே. ஜனனி இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை டிஸ்கவரி சினிமாஸ் நிறுவனம் சார்பில் பதிப்பாளர் மற்றும் தயாரிப்பாளரான மு. வேடியப்பன் தயாரித்திருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தமிழகத்தில் புலம்பெயர்ந்து வாழும் வட இந்திய இளைஞர் ஒருவரின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு முதலில் ‘வடக்கன்’ என பெயரிடப்பட்டது. இந்த தலைப்பிற்கு தணிக்கைக் குழு கடும் எதிர்ப்பு தெரிவிக்க… தற்போது படக்குழுவினர் ‘ரயில்’ என பெயரை மாற்றம் செய்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படம் எதிர்வரும் 21 ஆம் திகதி அன்று பட மாளிகையில் வெளியாகிறது.
தமிழர்கள் மது அருந்தி தங்களது உடல் நலத்தை கெடுத்துக் கொள்வதுடன், சமூக அமைப்பையும் சேதப்படுத்துகிறார்கள் என்றும், இவர்களுக்கு உதவுவதற்காக வட இந்தியாவிலிருந்து வருகை தரும் வட இந்தியர்களால் தமிழர்களின் குடும்ப அமைப்பில் ஏற்படும் உளவியல் ரீதியிலான சிக்கலை விவரிக்கும் வகையில் இந்த திரைப்படம் உருவாகி இருப்பதால்… ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.