நாவாந்துறைப் பகுதியைச் சீர்செய்வதற்காக கரையாம்பிட்டி மண்மேடு வெட்டப்பட்ட போது அங்கு காணப்பட்ட பண்பாட்டு எச்சங்களை மையமாகக் கொண்டு 1980 இல் பேராசிரியர்களான கா.இந்திரபாலா, பொ.இரகுபதி ஆகியோர் தலைமையில் அகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் இரண்டு சதுர மைல் பரப்பில் ஆறு குடியிருப்பு மையங்களும், இரண்டு ஏக்கர் பரப்பில் பெருங்கற்கால ஈமச்சின்னங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அகழ்வின்போது இரு இடங்களில் பெருங்கற்கால மக்களது ஈமச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்விரு ஈமச் சின்ன மையங்களும் பத்து அடி இடைவெளியில் நான்கு அடி உயரம் கொண்ட மண்மேட்டில் கண்டுபிடிக்கப்பட்டன.
ஈமச் சின்ன மையங்களில் 5 அடி உயரமுடைய இரு மனித எலும்புக்கூடுகள் கிழக்கு, மேற்கு திசையை நோக்கிய வண்ணமாக அடக்கம் செய்யப்பட்டிருந்தன. இதில் இரு கைகளும் கட்டப்பட்ட எலும்புக்கூட்டைச் சுற்றிவைக்கப்பட்ட மட்பாண்டங்களில் கறுப்பு, சிவப்பு , தனிக் கறுப்பு நிறக் கிண்ணங்கள், பானைகள் என்பன காணப்படடன. சில மட்பாண்டங்களில் சுறா மீன், மிருக எலும்புகள், நண்டின் ஓடுகள் என்பவற்றுடன் சிற்பி , சங்கு போன்ற பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன. இங்கு இரும்பின் பயன்பாடு புழக்கத்தில் வந்ததனை உறுதிப்படுத்த இரும்புக் கருவிகளும், கழிவிரும்புகளும் கிடைத்துள்ளன.
எலும்புக்கூட்டின் தலை மாட்டின் அருகில் கிடைக்கப் பெற்ற கோவேத முத்திரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் காலம் கி.மு. 3 நூற்றாண்டு 1.7 , 1.5 சென்றிமீற்றர் நீள அகலம் உடையது. இதன் மேல் வரிசையில் 3 குறியீடுகளும், கீழ் வரிசையில் 3 பிராமி எழுத்துக்களும் உள்ளன. இது மோதிரத்தின் முன் பகுதியாக இருக்கலாம் எனக் கருதப்டுகின்றது.
இந்தக் கோவேத முத்திரை பற்றி பொ.இரகுபதி (1987), இந்திரபாலா (1981), ஐராவதம் மகாதேவனும் (2003), பேராசிரியர் சி. பத்மநாதனும் (2006), பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் (2023)ஆகியோர் ஆதாரபூர்வமான கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
ஆனைக்கோட்டையில் பெருங்கற்காலப் பண்பாட்டை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கக்கூடிய தொல்லியல் சான்றுகள் கிடைக்கப் பெறும் அகழ்வாராய்ச்சிப் பணிகள் இன்று காலை 9 மணியளவில் 40 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
– கந்தசாமி கிரிகரன்