சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற நற்பெயரை சம்பாதித்திருக்கும் நடிகர் குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘போத்தல் ராதா’ (பாட்டில் ராதா) எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான சிலம்பரசன் மற்றும் ஆர்யா ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘போத்தல் ராதா’ (பாட்டல் ராதா) எனும் திரைப்படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன், ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை பலூன் பிக்சர்ஸ் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் டி என் அருண்பாலாஜி மற்றும் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. இதில் கதையின் நாயகனான குரு சோமசுந்தரம் குடும்பத்தை கவனிக்காமல் மதுவுக்கு அடிமையாகிறார். அதிலிருந்து மீட்பதற்காக போதை மறுவாழ்வு நிலையத்தில் அவர் சேர்கிறார். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது? என்பதுதான் இப்படத்தின் கதையாக இருக்கும் என டீசர் உணர்த்துகிறது. மது பிரியர்களின் கோணத்தில் இப்படத்தின் திரைக்கதை அமைந்திருப்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.