‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ எனும் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி இந்திய மதிப்பில் நூறு கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது. இதன் மூலம் தமிழ் சினிமாவின் வசூல் நட்சத்திர நடிகர்களின் பட்டியலில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இடம் பிடித்திருக்கிறார்.
‘தென்மேற்கு பருவக்காற்று’ எனும் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் விஜய் சேதுபதி ‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சூது கவ்வும்’ ஆகிய திரைப்படங்களில் கதையின் நாயகனாக நடித்து கவனிக்கத்தக்க நட்சத்திர நடிகராக உயர்ந்தார். அதன் பிறகு ஏராளமான படங்களில் கதாநாயகனாகவும், கதையின் நாயகனாகவும் நடித்து தன்னுடைய நட்சத்திர அந்தஸ்தை தக்க வைத்துக்கொண்டார்.
‘விக்ரம் வேதா’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். அதன் பிறகு ‘செக்கச் சிவந்த வானம்’, ‘பேட்ட’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘ஜவான்’ ஆகிய வசூல் ரீதியாக பிரம்மாண்ட வெற்றி பெற்ற திரைப்படங்களிலும் தன்னுடைய பங்களிப்பை வழங்கி வசூல் நாயகனாகவும் ஜொலித்தார்.
இருப்பினும் அவர் கதையின் நாயகனாக நடித்த திரைப்படங்கள் திரையுலகினரின் இன்றைய கள நிலவரப் படி நூறு கோடி ரூபாய் கிளப்பில் இணையாததால் அவரை ‘வசூல் நட்சத்திர நாயகன்’ எனும் பட்டியலில் இணைக்காமல் இருந்தனர். இந்தத் தருணத்தில் அவரின் நடிப்பில் ஐம்பதாவது படமாக வெளியான ‘மகாராஜா’ எனும் திரைப்படம், நூறு கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து தமிழ் திரையுலகில் வசூல் நட்சத்திர நடிகர்களான சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- உலக நாயகன் கமல்ஹாசன்- தளபதி விஜய் -அஜித் குமார்- சூர்யா- தனுஷ் – சிலம்பரசன்- சிவகார்த்திகேயன்- சீயான் விக்ரம் – விஷால் – கார்த்தி ஆகியோரின் பட்டியலில் விஜய் சேதுபதியும் இணைந்திருக்கிறார். இதனை திரையுலகினரும், விஜய் சேதுபதியின் ரசிகர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
இதனிடையே ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தற்போது ‘விடுதலை – பார்ட் 2’ படத்திலும், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.