‘கிழக்கு சீமையிலே’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகர் விக்னேஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் ‘ரெட் பிளவர்’ எனும் திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் பட மாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ரெட் பிளவர்’ எனும் திரைப்படத்தில் விக்னேஷ், மனிஷா ஜஷ்னானி, நாசர், வை. ஜி. மகேந்திரன், சுரேஷ் மேனன், ஜான் விஜய், அஜய் ரத்னம், லீலா சாம்சன், ‘தலைவாசல்’ விஜய், மோகன் ராம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கே. தேவ சூர்யா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் ராம் இசையமைத்திருக்கிறார். எக்சன் திரில்லர் ஜேனரிலான இந்த திரைப்படத்தை ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. மாணிக்கம் தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” மூன்றாம் உலகப்போருக்கு பின்னர் நடைபெறும் சர்வதேச மாற்றங்களின் பின்னணியில் பரபரப்பான கற்பனை கதையாக ‘ரெட் பிளவர்’ தயாராகிறது. இதில் இரட்டை சகோதரர்களான விக்கி மற்றும் மைக்கேல் எனும் இரண்டு கதாபாத்திரங்களை சுற்றி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த இரட்டையர்கள் ராணுவத்தில் சேர்வதற்காக ஆர்வமுடன் உள்ளனர். இவர்களால் ராணுவத்தில் சேர முடிந்ததா? இல்லையா? என்பதை பரபரப்பான திரைக்கதை மூலம் விவரித்திருக்கிறோம். தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து, படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறோம்.
வி எஃப் எக்ஸ் பணிகள் சர்வதேச தரத்தில் அமைய வேண்டும் என்பதற்காக திறமை வாய்ந்த கலைஞர்களுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். செப்டம்பர் மாதத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும்” என்றார்.