Thursday, September 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் முதியோர் காப்பகம் | சிறுகதை | மணிராம் கார்த்திக்

முதியோர் காப்பகம் | சிறுகதை | மணிராம் கார்த்திக்

3 minutes read

அன்று ஒருநாள், மாலை நேரம்.

அன்னை முதியோர் காப்பகம். அமைதியான சூழலில் காற்றோட்டமான வராந்தாவில் உள்ள இருக்கையில், சுந்தரம், மீனாட்சி அவர்களின் கண்களில் தெரிந்த ஏக்கம், எதிரில் அவர்களின் மகன் அபிஷேக்.

அமைதியான சூழலை தொலைத்த படி அபிஷேக்கின் குரல், “என்னமா நான் சொல்றது, உங்களுக்கு புரியுதா? புரியலையா?” என்ற அபிஷேக்கின் கேள்விக்கு விடை தெரியாமல், தவித்தபடி நின்ற சுந்தரமும் மீனாட்சியும்.

“யாருக்குபா புரியுதான்னு கேட்கிற? எங்களுக்கா? இல்ல உன் மனைவிக்கா?” என அப்பா சுந்தரம் பதில் கேள்வி கேட்க ,

மீனாட்சி கோவபட்டவாறு, “யாரப்பா? வாய மூடுன்னு சொல்ற. உங்க அப்பாவையா, நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்னுதான் உங்கப்பா இங்க தங்குறதுக்கு ஒத்துகிட்டார்.

அவர போய் வாயை மூடுங்கனு சொல்ற. போதும் இதுக்கு மேல பேச வேணாம். நீ கெளம்பு. நீ எந்த சமாதானமும் சொல்ல வேணாம்” என்று கோபமாக வாசலை நோக்கி கையை நீட்டியபடி  முறைத்துப் பார்த்தார் மீனாட்சி.

“அம்மா நீயாவது நான் சொல்றத புரிஞ்சுகோ. என் மேல கோவபடாதீங்க. தயவுசெய்து சொல்றத கேளுங்க.“

உங்களுக்கும் அர்ச்சனாக்கும்  எதுக்கெடுத்தாலும் பிரச்சனை வந்துகிட்டே இருக்கு, என்னோட நிம்மதியும் போகிறது.

என் நிலைமைய கொஞ்சம் புரிஞ்சுக்குங்க அம்மா. நம்ம வீட்ல இருக்கிறதை விட எல்லா வசதியும் இங்கே இருக்கு.

நேரத்துக்கு சாப்பாடு உங்கள தேடி வந்திரும். உங்களுக்கு என்ன தேவைன்னு சொன்னாலும் , உடனே செஞ்சு கொடுத்துடுவாங்க.

நீங்க நிம்மதியா ராஜா, ராணி மாதிரி இங்க இருக்க வேண்டியதுதானே? என்னோட பண கஷ்டத்திலும் சமாளிச்சுட்டு உங்க நல்லதுக்காக பண்றேன். ” என்று அபிஷேக் கூற,

இருக்கிறத சாப்பிட்டு உன்னை, என் பேரனை, மருமகள பார்த்துட்டு நிம்மதியா போய் சேர்ந்திருவோம். நாங்கள் இருக்கப் போற கொஞ்ச நாளைக்கு இந்த உதவி பண்ணுங்க” என சுந்தரம் கூறினார். .

“இல்ல நான் கிளம்புறேன். நீங்க சொன்னதே சொல்லிகிட்டே தான் இருப்பீங்க, என்னோட கஷ்டம் உங்களுக்கு புரிய மாட்டேங்குது. எவ்வளவு கஷ்டப்பட்டு , என் சக்தியை மீறி இவ்வளவு பணத்தை செலவு பண்ணி , உங்கள இங்க தங்க வச்சிருக்கேன். அதை புரிஞ்சுக்க முடியல.

நான் கிளம்புறேன். வாடா வருண்! தாத்தா பாட்டிக்கு பாய் சொல்லிட்டு வா” என தன் மகன் வருணை அழைத்தபடி கிளம்புகிறான் அபிஷேக்.

தங்களின் நிலைமை தான் பெற்ற பிள்ளைக்கே தெரியவில்லை. இதில் எப்படி மருமகளுக்கு தெரியும், என்ற வேதனையுடன் இருந்தனர் சுந்தரமும் மீனாட்சியும்.

அன்னை முதியோர் காப்பகத்திற்கு வெளியே நின்றிருந்த காரை நோக்கி நகர்ந்தான் அசோக். காரினுள் அபிஷேக்கின் மனைவி அர்ச்சனா அமர்ந்திருந்தாள்.

“என்னங்க உங்க அம்மா அப்பா புரிந்து கொண்டார்களா? இல்ல நான் போயி பேசணுமா சொல்லுங்க. நான் அவங்களுக்கு புரியிற மாதிரி பேசிட்டு வரேன். ஏன்னா உங்க முகம் சரியில்லை, அதான் சொன்னேன் ” என்று அர்ச்சனா கூறிக் கொண்டிருக்கும் போதே தனது காரை இயக்க துவங்கினான் அபிஷேக்.

“பெத்தவங்கள கஷ்டப்படுத்த கூடாது என்ற ஒரே காரணத்துக்காக தான் இவ்வளவு பணம் செலவு பண்ணி இங்க எவ்வளவு வசதியோட உங்க அம்மா அப்பாவை தங்க வச்சிருக்கோம். இது உங்களுக்கும் புரியல, உங்க அம்மா அப்பாக்கும் புரியல.

ஊருல எத்தனையோ பெத்தவங்கள கவனிக்காம ரோட்டில் விட்டுராங்க. நான் அந்த மாதிரி பண்ணல. அவங்கள தகுந்த பாதுகாப்போடு, நம்ம வீட்ல இருக்க எல்லா வசதி வாய்ப்போடு இங்கேயே தங்க வச்சிருக்கேன். இது தப்பா?” என்று அர்ச்சனா அபிஷேக்கை நோக்கி கேள்வியைக் கேட்டாள்.

“சரி விடு. எனக்குத் தலை வலிக்குது. இரண்டு பேரையும் சமாளிக்க முடியல. கொஞ்சம் அமைதியா இரு” என்று அர்ச்சனாவிற்கு பதில் அளித்தபடி, வாகனத்தை இயக்கிக் கொண்டு இருந்தான் அபிஷேக்.

சிறிது நேரம், அமைதியாக பயணம் தொடர்ந்தது.

தன் அம்மா, அப்பாவின் முகத்தைப் பார்த்து கொண்டிருந்த சிறுவயது மகன் வருண்,  “ஏன்மா? ரெண்டு பெரும் சண்டை போடுறீங்க.

அதான் தாத்தா பாட்டிய அங்க தங்க வச்சிட்டீங்கள!. பின்ன எதுக்கு நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுகிட்டு இருக்கீங்க” என்று வருண் கேட்டான்.

அதற்கு முகம் சுளித்தவாறு அர்ச்சனா, “நீ வாய மூடு. உனக்கு ஒன்னும் தெரியாது. சின்ன பையன். உன் வேலை என்னமோ அத மட்டும் பாரு.” என்றார்.

அம்மாவின் அதட்டலை கண்டுகொள்ளாமல், “இல்லம்மா, நான் உங்க ரெண்டு பேருக்கும் இந்த பிரச்சனை வராதபடி பார்த்துக் கொள்வேன்”, என்ற வருணின் பேச்சை கேட்டு, தன் மார்போடு அணைத்து கொண்டாள் அர்ச்சனா.

எதேச்சையான வருணின் பேச்சு, இருவருக்கும் சாட்டை அடியாய் விழுந்தது.

வருணின் பேச்சால் காரின் வேகம் குறைந்தது. அர்ச்சனா அபிஷேக் இருவரும் தவறை உணர்ந்தவர்களாக மாற, கார் வேகம் எடுத்தது, அன்னை முதியோர் காப்பகத்தை நோக்கி.

முதியோர் இல்லம் வளர வேண்டியது அல்ல.

பெற்றோரை இருக்கும் வரை கவனிப்போம்.

பிள்ளைகள் இருந்தும் முதியோர் இல்லம் மற்றும் அனாதை இல்லத்தில் தங்கி இருக்கும் பெற்றோர்களை நினைத்து வேதனை, வெட்கப்படபட வேண்டியது பிள்ளைகளே.

பெற்றோர் ஒரு போதும் பிள்ளைகளுக்கு தீங்கு இழைக்க மாட்டார்கள்.

 

– மணிராம் கார்த்திக்

 

நன்றி : இனிது இணைய இதழ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More