இந்தியா – மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் நேற்று (12) இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து மணிப்பூர் மாநிலத்தின் பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பொலிஸார் தொடர்ந்து ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படையினர் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களுடன் மோதியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சிறுபான்மை குக்கி சமூகத்தினர் பொலிஸ் நிலையமொன்றைத் தாக்கியதாகக் கூறப்பட்டது. அதில் நேர்ந்த துப்பாக்கிச்சூட்டில் சிலர் உயிரிழந்துள்ளனர். பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமுற்றார். சில ஆயுதங்களைப் பறிமுதல் செய்திருப்பதாக மணிப்பூர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆனால், குக்கி சமூகத்தைச் சேர்ந்த ஓர் அமைப்பு அதிகாரிகளின் கூற்றுகளை மறுத்திருக்கிறது. பாதுகாப்புப் படையினரும் மெய்தெய் கிளர்ச்சியாளர்களும் கிராமத் தொண்டூழியர்களைத் திட்டமிட்டுக் கொலை செய்ததாக அமைப்பு கூறுகிறது.
மணிப்பூரில் கடந்த ஆண்டிலிருந்து அங்காங்கே வன்முறை நடந்து வருகின்றது.
நீண்டகாலமாகவே பெரும்பான்மை மெய்தெய் சமூகத்திற்கும் குக்கி சமூகத்திற்கும் இடையே பதற்றம் நிலவுகிறது.