இந்தியத் தலைநகர் புதுடில்லியில் குறைந்தது 40 பாடசாலைகளுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக ANI செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட பாடசாலைகளில் பொலிஸார் உடனடிச் சோதனையை நடத்தினர்.
முன்னதாக நேற்றிரவு (08) இரு பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பாடசாலை கட்டடத்தின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் 30,000 டொலர் பணம் கொடுக்காவிட்டால் அவை வெடிக்கும் என்றும் மின்னஞ்சலில் மிரட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று (09) காலை முதல் அதே போன்ற மின்னஞ்சல் பல பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பிள்ளைகளை உடனே வந்து அழைத்துச் செல்லுமாறு பாடசாலைகள் பெற்றோரைக் கேட்டுக்கொண்டன.
இதனால் பல பாடசாலை வளாகங்களில் காலையில் நிலவரம் பரபரப்பாக இருந்ததைக் காண முடிந்ததாக ANI செய்தி குறிப்பிடுகிறது.
இந்த ஆண்டு இந்தியாவில் பாடசாலைகள், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் எனப் பல இடங்களில் நூற்றுக்கணக்கான வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை அனைத்தும் போலி மிரட்டல் என்பது பின்னர் உறுதிசெய்யப்பட்டது.
இந்தியாவிலுள்ள விமான நிலையங்களுக்கு மட்டும் இந்த ஆண்டு இதுவரை 999 வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் தொடர்பில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.