சிரியா ஜனாதிபதி பஷார் அல்-அசாத் நாட்டைவிட்டுத் தப்பியோடியுள்ளார். அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் ரஷ்யா அடைக்கலம் வழங்கியுள்ளது.
பஷார் அல்-அசாதின் ஆட்சியின்போது சிரியாவின் முக்கிய நட்பு நாடாக ரஷ்யா இருந்தது.
ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் என்ற கிளர்ச்சிக் குழு, அசாதின் ஆட்சியை நேற்று (08) கவிழ்த்ததை அடுத்து அவர் நாட்டைவிட்டு வெளியேறினார்.
இந்நிலையில், சிரியா தலைநகர் டமாஸ்கஸிலிருந்து தப்பிச் சென்ற அவரையும் அவரது குடும்பத்தினரையும் தாம் ஆதரிப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
அசாத் குடும்பத்தின் சுமார் 50 ஆண்டுகள் ஆட்சி முடிவுக்கு வந்ததை சிரியா மக்கள் பெரிய அளவில் வீதிகளில் கொண்டாடினர்.
மேலும், டமாஸ்கஸ் நகரில் உள்ள சிரியா ஜனாதிபதி அரண்மனைக்குள் மக்கள் புகுந்துள்ளனர். மகிழ்ச்சி வெள்ளத்தில் சிரியர்கள் சிலர் அசாதின் அரண்மனைக்குள் உலா வந்தனர். ஒவ்வோர் அறையாகச் சென்று சுற்றிப்பார்த்த அவர்களில் சிலர் அங்கு செல்ஃபி எடுத்தனர். இன்னும் சிலர் நாற்காலி உள்ளிட்ட தளவாடப் பொருள்களை அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.
மேலும், சிலர் வீட்டிலிருந்த துணிமணிகள், தட்டுகள் உள்ளிட்ட பொருள்களை எடுத்துக்கொள்வது இணையத்தில் பரவும் காணொளியில் தெரிகிறது. “அனைத்தும் விற்பனைக்கே!” என ஆண் ஒருவர் கூச்சலிட்டார்.
சுமார் 13 ஆண்டுக்கு முன்பு சிரியாவில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களால் உள்நாட்டுப் போர் தொடங்கியது. அதில் அரை மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பெரும்பாலானோர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டனர்.