நூற்றி இருபது ஆண்டுகள் பழமைவாய்ந்த அந்தப் புளியமரத்தின் உச்சாணிக் கொம்பில் நின்று கொண்டிருக்கிறார் எண்பத்து நான்கு வயது அய்யர்த்தேவர். அவரது தாத்தா வைத்த மரம் அது. இத்தனை காலமாக இந்த மரக்ககிளைகளில் ஏறித் திரிவதைத் தனது தந்தையின் தோள்களில் ஆடித் திரிவதுபோல் உணர்ந்து வந்தார். ஆனால் இன்று அப்படி இல்லை. இந்த மரத்தில் ஏறுவது இதுவே கடைசி முறையாக இருக்குமோ என்ற அச்சம் அவரை வாட்டியது. அப்படியொரு ஆபத்து இந்த மரத்திற்கு இன்று வந்துள்ளது. கடந்த காலங்களில் முதலைத் தோல்போன்று சொரசொரப்பாக இருக்கும் இம்மரக் கிளைகளில் சுவற்றில் ஏறும் பல்லியின் லாவகத்துடன் ஏறிக் கொண்டிருந்தார்.
அய்யர் என்பதும் தேவர் என்பதும் வெவ்வேறு சமுகங்களைக் குறிக்கும் சொற்கள். இரண்டையும் இணைத்து ஒரே பெயராக வைத்திருக்கிறாரே எப்படி! அதாவது அந்தப் பகுதியில் அவர் சார்ந்த இனத்திற்கென்று பல குலதெய்வங்கள் இருக்கின்றன. அனைத்துக் குலதெய்வக் கோயில்களிலும் சிவனே ஆட்சி செய்கிறார். அவருக்கு பரிவார தெய்வங்கள் பொதுவாக இருபத்தொரு எண்ணிக்கையில் இருக்கும். பரிவார தெய்வங்களுள் பிரதானமாகக் கருதப்படும் ஒரு தெய்வத்தின் பெயரில் ஒவ்வொரு கோயிலும் வழங்கப்படும். ஆனால் கற்பக் கிரகங்களுக்குள் சிவனே வீற்றிருப்பார். அந்த சிவனை “அய்யர்” என்று அழைப்பர். தெய்வத்தின் அந்தப் பெயருடன் தங்களது சாதி அடையாளச் சொல்லான “தேவர்” என்பதையும் பின்னொற்றாகச் சேர்த்து அய்யர்த்தேவர் என்று அந்தப் பகுதியில் பெயர் வைத்துக் கொள்வார்கள். அப்பபடித்தான் இவருக்கும் அய்யர்த்தேவர் என்ற பெயர் வந்தது.
சற்று குள்ளமான கட்டையான உடலமைப்பைக் கொண்டவர் அவர். கருத்த நிறம்; முதுகிலும் வயிற்றுப் பகுதியிலும் தோல் சுருக்கு விழுந்து வரிவரியாகத் திறண்டிருந்தது. மானத்தை மறைக்க ஒரு லங்கோடும் இடுப்பில் ஒரு நாலுமுழ வேட்டியும்தான் அவரது நிரந்தர உடை. அவர் தனது வாழ்வில் ஒருநாள் கூட மேற்சட்டை போட்டவரில்லை.
இதுவே அவருடைய கடைசி ‘’உலுப்பு’ வாக இருக்கக் கூடும். ஒவ்வொரு கிளையாக ஏறி பழங்களை உலுக்கிக் கொண்டிருந்தார். அந்த மரத்தின் தூர் முப்பது அடி விட்டம் கொண்டது. அடிமரத்திலிருந்து நான்கு கிளைகள் பிரிந்து அவை ஒவ்வொன்றும் பல உப கிளைகளாகப் பிரிந்திருந்தன. முன்பு இந்த மரத்தடியில்தான் ஊர்மந்தை கூடும். பத்துக்கு நான்கடி அளவுள்ள மூன்று கருங்கல் பலகைகள் “ப” வடிவில் போடப்பட்டிருந்தன. மூன்றடி உயரத்திற்கு பெரும் பெரும் கற்கள் அந்தப் பளகைக் கற்களுக்கு அண்டக் கொடுக்கப் பட்டிருந்தன. எப்பொழுதாவது ஊர் பஞ்சாயத்து அதில் நடப்பதுண்டு. பெரும்பாலான நேரங்களில் ஊரிலுள்ள ஆண்கள் அந்த அம்பலக் கல்லில் அமர்ந்து பொழுது போக்குவார்கள். அந்தக் கல்லில் ஆடுபுலி ஆட்டம் எப்பொழுதும் நடந்துகொண்டே இருக்கும்.
அய்யர்த்தேவர் எப்போதும் கல்லில் அமர மாட்டார். மரத்தடியில் தரையில் துண்டை விரித்துப் படுத்திருப்பார். தனக்குச் சொந்தமான இந்த இடத்தை, தனக்குச் சொந்தமான மரத்தடி நிழலை பொதுமக்கள் புழக்கத்திற்குத் தனது குடும்பம் விட்டிருப்பதை நினைத்து மனதிற்குள் கர்வம் கொண்டிருந்தார் அய்யர்த்தேவர். இந்த கர்வம் ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே கலைந்து விட்டது. ஆம்! மந்தையும் அம்பலக் கற்களும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எதிர் திசையில் இருநூறு அடி தள்ளி ஊருக்குப் பொதுவான இடத்தில் சமீபத்தில் பெரிதாக வளர்ந்திருந்த இச்சி மரத்தடிக்குச் சென்று விட்டன.
தற்பொழுது இந்தப் புளியமரத்தை வெட்டிச் சாய்க்க கிராமப் பஞ்சாயத்து தீர்மானம் நிறைவேற்றி விட்டது. இந்தத் தீர்மானம் அய்யர்த்தேவர் வயிற்றில் புளியைக் கரைத்தது. அரசாங்க ஆவணங்கள் குறித்த எந்தப் புரிதலுற்றவராக இருந்தடியால் காலங்காலமாகத் தனது குடும்பத்தின் அனுபவத்தில், தனது வீட்டிற்குப் பின்புறத்தில் இருந்து வந்த புளியமரமும் அதைச் சுற்றி இருந்த பதினைந்து செண்ட் காலி இடமும் தங்களுக்குச் சொந்தமானது என்றே நம்பி வந்தார். அதில் அவருக்கு சந்தேகமே எழுந்திருக்கவில்லை.
ஐந்தாம் வகுப்புவரை உள்ள அரசுப் பள்ளிக் கட்டிடம் ஒன்று மந்தைக்குத் தென்புறத்தில் இருந்தது. கற்களாலான அந்தக் கட்டிடத்தின் மேற்கூரை ஓடுகளால் வேயப்பட்டிருந்தது. அது 1927 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடம். தற்பொழுது அந்த அரசுப் பள்ளி எட்டாம் வகுப்புவரை அரசாங்கத்தால் தரம் உயர்த்தப்பட்டது. அது தொடர்பாக பஞ்சாயத்துத் தலைவர் ஒருநாள் அய்யர்த்தேவர் வீட்டிற்கு வந்தார்.
“ஏப்பா அய்யர்த்தேவரே! நம்ம ஊருக்கு எட்டாப்பு வர பள்ளிக்கொடம் வந்திருக்கப்பா” என்று பஞ்சாயத்துத் தலைவர் கூர
“ரெம்ப சந்தோசமப்பா! நம்ம பிள்ளைக எட்டாப்பு எருதியும் இங்கயே படிச்சுக்கிறலாம்ல” என்றார் அய்யர்த்தேவர்.
“அது சம்மந்தமாத் தானப்பா ஓங்கிட்ட கொஞ்சம் பேச வேண்டி இருக்கு” பஞ்சாயத்துத் தலைவர்.
“சொல்லப்பா!” என்றார் அய்யர்த்தேவர்.
“புதுசா பள்ளிக்கொடங் கட்டணும். ஊர்ல எடமே இல்ல. அதனால, மந்தப் புளியமரத்த வெட்டிட்டு அந்த எடத்ல கட்டடங் கட்டலாம்னு இருக்கமப்பா!
ஊர் நல்லதுக்குத்தான் இதச் செய்யயப் போறம். நீ கொஞ்சம் விட்டுக் குடுக்கணும்ப்பா! இப்ப இருக்குற காப்ப நீயே எடுத்துக்க. மரத்த வெட்டி ஏலத்துக்கு விடுவம். அதுல வார காசயும் ஒனக்கே குடுத்துடுறோம். பள்ளிக்கொடம் கட்டுனது போக மிச்சமிருக்குற எடத்துக்கு ஓம்பேர்ல பட்டா வாங்கித் தர வேண்டியது எங்க பொறுப்பு. என்ன சொல்ற?” என்று தலைவர் கேட்க வெடித்துச் சிதறினார் அய்யர்த்தேவர்.
“யாரு வீட்டுச் சொத்த யார்ரா ஏலம் விடுறது?. அந்த மரத்த வெட்றது என் கழுத்த வெட்றதுக்குச் சமம்டா. யார்கிட்ட வந்து என்ன பேச்சு பேசிக்கிருக்க?” என்று கட்டுக்கடங்காத கோபத்துடன் கத்தினார் அய்யர்த்தேவர்.
“இந்த எடம் ஓம்பேர்லயோ ஒங்கப்பன் பேர்லயோ இல்ல. இது அரசாங்கத்துக்குச் சொந்தமான நத்தம் பொறம்போக்கு. போனாப் போகட்டும்னு இவ்வளவுநாள் விட்டுவச்சது தப்பாப்போச்சு. நீ செய்றத செஞ்சுக்க. நாங்க மரத்த வெட்டுறது வெட்டுறதுதான். பள்ளிக்கொடம் கட்டுறது கட்டுறதுதான்.” என்று கடுமையாகப் பேசிவிட்டு தலைவர் சென்றுவிட்டார்.
தலைவர் சொன்னது உண்மைதான். பல பத்தாண்டுகளாக அய்யர்த்தேவர் குடும்பம் அந்தச் சொத்தை அனுபவித்து வந்தபோதிலும் அவர்கள் பெயரில் பட்டா எதுவும் இல்லை. நத்தம் புறம்போக்கில் அதாவது கிராமப் புறம்போக்கு நிலத்தில் வீடுகட்டிக் குடியிருக்கும் அளவுக்குத்தான் அரசாங்கம் பட்டா வழங்கும். மற்ற வெற்றிடங்கள் அனைத்தும் அரசாங்கத்திற்கே சொந்தம். இது போன்ற நுணுக்கமான விபரங்கள் எல்லாம் அய்யர்த்தேவருக்கு எங்கே தெரியப் போகிறது!. பாவம் அவரும் கிராம அதிகாரி தாசில்தார் என்று ஒரு சுற்று ஓடிப் பார்த்தார். கலெக்ட்டர் ஆபீசில் மனு கொடுத்துப் பார்த்தார். எங்கும் அவருக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை. ஊரே அவருக்கு எதிராக நின்றது.முடிவில் தோல்வியை ஏற்றுக் கொண்டு மௌனமானார்.
இப்படியொரு சூழ்நிலையில்தான் மரத்தின் உச்சியில் அவர் ஏறி நிற்கிறார். அதுவொரு ஏப்ரல் மாதம். புளியம் பழங்கள் கொத்துக் கொத்தாய்ப் பழுத்துத் தொங்குகிக் கொண்டிருந்தன. சின்ன வயதிலிருந்தே இந்த மரத்தில் ஏறி ஏறிப் பழக்கப்பட்டவர். மரத்தில் ஏறுவது அவருக்குத் தரையில் நடப்பதைப் போன்றது. அம்மரத்தைத் தனது முன்னோர்களின் அடையாளமாகவே எண்ணி வந்தார். அம்மரத்தைச் சுற்றியுள்ள காலி இடத்தை இழப்பதில் கூட அவருக்கு அவ்வளவு வருத்தம் இல்லை. அந்த மரத்தை இழக்க மட்டும் அவரது மனம் இடம் கொடுக்கவில்லை.
இந்நிலையிலதான் அவர் இன்று மரத்தில் ஏறி பழம் உலுக்கிக் கொண்டிருக்கிறார். இவ்வளவு முதுமையிலும் அவரால் மரத்தின் உச்சிக்கு ஏறமுடிகிறது. பழங்களை உலுக்கிக் கொண்டிருந்த அவரை கீழே மந்தையில் இருந்தவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். பழம் உலுக்கும் போது கீழே பழம் பொறுக்கும் அவரது குடும்பத்தாருடன் உற்சாகமாகப் பேசிக் கொண்டே இருப்பது அவரது சுபாவம். ஆனால் இன்று பழம் உலுக்கும் போது மிகவும் இறுக்கமாக யாரோடும் பேசாமல் இருந்தார். இரண்டு முறை சறுக்கினார். அதைக் கீழிருந்து கவனித்த அவரது மனைவி
“ஏ கெழவா எறங்கி வா, போதும்” என்று சொல்லி முடிப்பதற்குள் சடசடவென்ற சத்தத்துடன் உச்சியிலிந்து கொப்புகளை ஒடித்துக் கொண்டு “தொப்” என்று தரையில் வந்து விழுந்து மாண்டு போனார்.
கொப்பு முறிந்து கீழே விழுந்தாரோ அல்லது கொப்பை முறித்துக்கொண்டு கீழே விழுந்தாரோ, யாருக்குத் தெரியும்?
– மனோந்திரா
நன்றி : கீற்று இணையம்