“இலங்கைத் தமிழினத்தின் பெருமைக்கும் இறுமாப்புக்கும் உடையதான ‘யாழ்ப்பாணம்’ என்ற பெயரை யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலைய விடயத்தில் அகற்றியமை எம்மை அவமதித்தமைக்க்குச் சமமாகும். இது இந்தியாவுக்கும் எமக்கும் இடையேயான நல்லுறவில் ஆழமான குழியாக அமைந்துவிடக்கூடாது என நாம் திடமாக நம்புகின்றோம். ‘யாழ்ப்பாணம’ என்பது விட்டுக் கொடுக்கப்பட முடியாத எம் இனத்தின் அடையாளம் ஆகும். எனவே, இந்த விடயத்தை உடனடியாக மீளாய்வுக்கு உட்படுத்தி சீர்செய்யுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.”
– இவ்வாறு யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் சாய்முரளியிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் நேரில் சென்று கையளித்த கடிதத்தில் தெரிவித்திருக்கின்றார்.
யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தின் திடீர் பெயர் மாற்றம் தொடர்பாகத் தமது கட்சியின் நிலைப்பாட்டை விளக்கும் கடிதத்தை அவர் நேற்று புதன்கிழமை கையளித்தார். அதில் கூறப்பட்டிருந்தவை வருமாறு:-
“யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு அருகாமையில் திறந்த வெளி அரங்கு அமைந்திருந்த – யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உரித்தான காணியில் அதற்குப் பதிலாக இந்திய மத்திய அரசின் நன்கொடையாக நிர்மாணிக்கப்பட்ட ‘யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம்’ 2023 ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கையின் ஜனாதிபதி,ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இணைந்து திறந்து வைக்கப்பட்டது யாவரும் அறிந்ததே.
இந்த நிறுவனத்தின் நிர்வாகம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மாநகர சபையின் நிதி வசதியீனத்தைக் காரணம் காட்டி அவ்வாறு செய்யப்படாமல் சில முக்கிய அரசியல் காரணங்களால் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது. இந்தக் கட்டடம் அதன் முழுமையான அம்சங்கள் ஆராயப்படாமல் நிர்மாணிக்கப்பட்டமையே இந்த நிலை உருவாக காரணமாகியது என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் சகலரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறிருக்கையில் கடந்த 18.01.2025 ஆம் திகதி சனிக்கிழமை இதன் பெயர் ‘திருவள்ளுவர் கலாசார மையம்’ என மாற்றப்பட்டதாக இலங்கையின் பிரதி கலாசார அமைச்சரும் இலங்கைக்கான இந்தியத் தூதுவரும் வேறு சிலரும் கலந்துகொண்ட சந்திப்பில் பெயர் மாற்றத்துடனான பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
இந்த நடவடிக்கை பற்றிய அறிதல் எதுவும் இந்த மண்ணின் அரசியல் தலைவர்களுக்கோ பிரதிநிதிகளுக்கோ சிறிதளவேனும் தெரிந்திருக்கவில்லை என்பது எமக்கு மிகவும் ஆச்சரியத்தையும் மன வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை மிகுந்த கவலையுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.
இந்த நடவடிக்கை பற்றிய ஆழமான அதிருப்தி உள்ளது என்பதை மட்டும் குறிப்பிட்டு, இது இந்தியாவுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையேயான ஓர் உணர்வுபூர்வமான விடயம் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அதனால் விவரமாக அதிருப்தியைப் பதிவு செய்வதைத் தவிர்க்கின்றோம்.
தெய்வப் புலவர் ஐயன் திருவள்ளுவருக்கு நாமாகவே இந்த மண்ணில் பல இடங்களில் உருவச்சிலைகள் அமைத்திருக்கின்றோம். அதுமட்டுமல்ல ஔவைக்கும், மாகாத்மா காந்திக்கும், பாரதிக்கும் நாமாக இங்கு சிலை எடுத்தவர்கள் நாங்கள். தெய்வப் புலவர் திருவள்ளுவருக்கு நாம் எதிரானவர்கள் அல்லர்.
இப்படியிருக்கையில் இலங்கைத் தமிழினத்தின் பெருமைக்கும் இறுமாப்புக்கும் உடையதான ‘யாழ்ப்பாணம்’ என்ற பெயரை அகற்றியமை எம்மை அவமதித்தமைக்குச் சமமாகும். இது இந்தியாவுக்கும் எமக்கும் இடையேயான நல்லுறவில் ஆழமான குழியாக அமைந்து விடக்கூடாது என நாம் திடமாக நம்புகின்றோம். ‘யாழ்ப்பாணம்’ என்பது விட்டுக் கொடுக்கப்பட முடியாத எம் இனத்தின் அடையாளம் ஆகும். எனவே, இந்த விடயத்தை உடனடியாக மீளாய்வுக்கு உட்படுத்தி சீர்செய்யுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
மேலும் இந்தப் புதிய பெயர் மாற்றத்துக்கான அறிவித்தலில் கூட தமிழ்மொழி மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளமையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இலங்கை அரசின் அரசமைப்பின் 16 ஆவது இலக்க திருத்தத்தின்படி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழியே நிர்வாக மொழியாகும். சிங்களம் அடுத்த நிர்வாக மொழியாகவும், ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கும் என்பது அரசமைப்பின் ஏற்பாடாக இருக்கையில் சிங்கள மொழியில் முதலாவதாகவும், ஆங்கில மொழியில் இரண்டாவதாகவும், தமிழ் மொழியில் மூன்றாவதாகவும் பெயர்ப்பலகை எழுதப்பட்டிருப்பது இந்த ஏற்பாடுகளை மீறும் செயலாகும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்பே நல்லுறவைப் பாதிப்பின்றி பேணும் பொருட்டு இந்த மீளாய்வுக் கோரிக்கை சமர்ப்பிக்கப்படுகின்றது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றாம்.
தங்களது துரிதமான செயற்பாட்டுக்கு நன்றியுடையவராவோம்.” – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடிதத்தின் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ். மாவட்ட பதில் அரச அதிபர் ம.பிரதீபன், யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையார் ச.கிறிஸ்நேந்திரன் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.