செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிறீஸ் பூதம் ஏவப்பட்டதைப் போன்ற சூழலை மீண்டும் உருவாக்க அரசாங்கம் திட்டமிடுகிறதா? – ஸ்ரீகாந் பன்னீர்ச்செல்வம் சந்தேகம்

கிறீஸ் பூதம் ஏவப்பட்டதைப் போன்ற சூழலை மீண்டும் உருவாக்க அரசாங்கம் திட்டமிடுகிறதா? – ஸ்ரீகாந் பன்னீர்ச்செல்வம் சந்தேகம்

2 minutes read

கடந்த காலங்களில் வடக்கில் கிறீஸ் பூதம் ஏவப்பட்டது போன்ற சூழலை உருவாக்க அரசாங்கம் திட்டமிடுகிறதா என்று சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இது தொடர்பாக மக்களும் ஊடகங்களும் விழிப்பாக இருக்க வேணடும் எனவும் ஈ.பி.டி.பி. கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்ச்செல்வம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை (5) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் அரசியல் தரப்புக்களுக்கு இடையிலான மக்கள் நலன் சார்ந்த நிலைப்பாடுகளில் இணைந்து செயற்படுவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் தயாராக இருப்பதான சமிக்ஞை எம்மால் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், பல்வேறு தரப்புக்களும் உத்தியோக பற்றற்ற முறையில் எம்மை தொடர்புகொண்டு வருகின்றனர். அது தொடர்பாக கட்சி மட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

அதேவேளை, கடந்த காலங்களைப் போன்று தனித்துவமான முறையில் வீணை சின்னத்தில் போட்டியிடுவதற்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

அது ஒருபுறமிருக்க, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை பொறுத்தவரையில், தற்போதைய அரசாங்கத்தை கண்மூடித்தனமாக விமர்சிக்கும் நோக்கம் இல்லாத போதிலும், சரியான விடயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய தார்மீக கடப்பாடு இருப்பதாக கருதுகிறோம்.

அந்த வகையில், யாழ் மாவட்டத்திலிருந்து ஜே.வி.பி. சார்பில் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகி இருக்கின்ற, ஜெயசந்திரமூர்த்தி ரஜீவனின் உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் ஒரு செய்தி வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதாவது, யாழ். மாவட்டத்தில் காணப்படுகின்ற போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு தொடர்பாக தனிநபர் பிரேரணையை இன்று கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான செயற்பாடுகள் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்றவா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகின்றபோது எமது பிரதேசங்களில் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருக்கிறது. சமூக சீர்கேடுகள் அதிகரித்துள்ளன. அவை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், நாடாளுமன்றில் தனிநபர் பிரேரணை கொண்டுவரும் அளவுக்கு யாழ்ப்பாணத்துக்கு தனித்துவமான பிரச்சினை அல்ல.

போதைப்பொருள் பாவனை என்பது நாடளாவிய ரீதியில் இருக்கின்ற பிரச்சினை கடந்த வாரம் கூட, கொழும்பில் நீதிமன்றத்தினுள் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறான சூழலில் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருப்பதாக தனிநபர் பிரேரணை கொண்டு வருவது யாழ்ப்பாணத்தின் தனித்துவங்களையும் கௌரவத்தினையும் மலினப்படுத்தும் நிகழ்ச்சி நிரலை அடிப்படையாக கொண்டதோ என்ற சந்தேகத்தினை ஏற்படுத்துகிறது.

அதேபோன்று, தேர்தல் காலங்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையிலே தற்போதைய அரசாங்கம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது.

எமது மக்களைப் பொறுத்தவரையில், காணிகள் விடுவிக்கப்படும், காணாமல் போனோர் விவகாரத்துக்கு தீர்வு காணப்படும். அரசியல் கைதிகள் விடுதலை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்குதல் போன்ற விடயங்கள் சொல்லப்பட்டபோதிலும், இதுவரையில் அவை தொடர்பான முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், கடந்த வாரம் நாடாளுமன்றில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், வடக்கு கிழக்கு பிரதேசங்களிலும் ஆயுத ரீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அடிப்படைவாத அமைப்புக்கள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவற்றை அடிப்படையாக வைத்துப் பார்க்கின்றபோது வடக்கில் கடந்த காலங்களில் கிறிஸ் பூதங்கள் ஏவி விடப்பட்டதைப் போன்று மீண்டும் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்களும் ஊடகங்களும் விழிப்பாக இருக்க வேண்டும்.

எனவே, தற்போதைய அரசாங்கம் தங்களுடைய இயலாமைகளை மறைப்பதற்காக, எமது மக்களை மலினப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளையும், சுமுகமான சூழலுக்கு குழப்பங்களை ஏற்படுத்தும் கருத்துக்களையும் வெளிப்படுத்தக் கூடாது என தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More