நாளையும் மறுதினமும் இலண்டனில் நடைபெற இருக்கின்ற இலண்டன் தமிழர் சந்தை நிகழ்வினை முன்னிட்டு தமிழர் புலம்பெயர்ந்த தேசங்களில் உள்ள முக்கியமான இரண்டு வர்த்தகர்களின் கூட்டமைப்புகள் நேற்றைய தினம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளனர்.
மலேசியாவின் செலங்கோர் இந்திய வர்த்தகர் மற்றும் தொழில் முனைவோர் சம்மேளனத்திற்கும் பிரித்தானிய தமிழர் வர்த்தகர்களின் சம்மேளனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை நேற்று மாலை பிரித்தானிய பாராளுமண்றத்தில் தமிழ்ப் பாராளுமண்ற உறுப்பினர் உமா குமரன் முன்னிலையில் இரு அமைப்புகளினதும் தலைவர்கள் டாக்டர் டத்தோ சன்முகநாதன் மற்றும் திரு ராச்குமார் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இரு அமைப்புக்களுக்குமிடையில் இரு பக்க வியாபார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் பிரித்தானிய தமிழ் வர்த்தகர்களுக்கும் மலேசிய தமிழ் வர்த்தகர்களுக்குமிடையே வியாபார முயற்சிகளை மேம்படுத்துவதுடன் தமிழ் சமூகத்துடனான வலுவான உறவினை உருவாக்கலாமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிகழ்வின் இறுதியில் பேராசிரியர் கனேசராஜா அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றது.
மலேசியாவில் இருந்து ஒன்பது பேர் அடங்கிய வர்த்தகர்கள் குழு டாக்டர் டத்தோ சன்முகநாதன் தலைமையில் இலண்டன் வருகை தந்த நிலையில் இலண்டன் தமிழர் சந்தையிலும் கலந்துகொள்ள இருக்கின்றார்கள்.