செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை “தமிழர் நலன் விவகாரத்தைக் கைவிட்டு விட்டது இந்தியா”

“தமிழர் நலன் விவகாரத்தைக் கைவிட்டு விட்டது இந்தியா”

2 minutes read

வடக்கு, கிழக்கு தமிழர்களை மையப்படுத்திய மூலோபாயத்தை இந்தியா கைவிட்டுள்ளது என்பதற்கான மிகப்பெரிய சமிக்ஞையாகவுள்ளது என்று இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜயதிலக சுட்டிக்காட்டினார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயம் சம்பந்தமாகவும், அவருடனான தமிழ்த் தலைமைகளின் சந்திப்புத் தொடர்பாகவும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“1987ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் வருகைக்கும், 2025இல் நரேந்திர மோடியின் வருகைக்கும் இடையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 1987இல் இந்தியப்படைகள் நிலை கொண்டிருக்கையில், மிராஜ் விமானங்கள் வட்டமிட்டுக்கொண்டிருக்கையில்தான் ராஜீவ் காந்தியின் வருகை நிகழ்ந்தபோது அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் அச்சமடைந்த நிலையில் இருந்தார்.

ஆனால், இந்திய எதிர்ப்புவாதக் கொள்கையில் செயற்பட்ட ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார ஆட்சியில் அமர்ந்திருக்கின்ற தருணத்தில் பிரதமர் மோடியின் வருகை நிகழ்ந்திருக்கின்ற நிலையில் அது அமைதியாகவும் சுமுகமாகவும் நடைபெற்றிருக்கின்றது.

அதேபோன்று ராஜீவ் காந்தியின் வருகையானது, அது இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை மையப்படுத்தியதாக இருந்தது. குறிப்பாக, தமிழ் மக்களின் பூர்வீகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தியதாகவே விவகாரம் இருந்தது. ஆனால், பிரதமர் மோடியின் விஜயமானது, ஒட்டுமொத்தமாக பொருளாதாரத்தை மையப்படுத்தியதாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவின் எதிர்கால பொருளாதார மூலோபயத் திட்டங்களை மையப்படுத்தியதாகவே உள்ளது.

அதனடிப்படையில்தான் கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அந்தவகையில் பார்க்கின்றபோது, இந்தியா தற்போது பொறுமையிழந்துவிட்டது என்றே கொள்ளவேண்டியுள்ளது.

ஏனென்றால், பிரதமர் மோடி தனது இலங்கை விஜயத்தின்போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேசிய பிரச்சினை தொடர்பிலோ, அதிகாரப்பகிர்வு தொடர்பிலோ உத்தியோக பூர்வமாக எந்த விடயங்களையும் குறிப்பிடவில்லை.

அவர் ஆகக்குறைந்தது 13ஆவது திருத்தச் சட்டம் சம்பந்தமாகக் கூட நேரடியாகக் கூறாது, இலங்கையின் அரசமைப்பு முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என்றே கூறியிருக்கின்றார். மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

இந்த நிலைமைக்கு முழுக்க முழுக்க காரணமாக இருப்பவர்கள் வடக்கு, கிழக்கு தமிழ்த் தலைவர்களே. ஏனென்றால் இவர்கள் 1987ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டபோது அதனை ஏற்றுக்கொண்டு மாகாண சபை முறையில் பங்கேற்கவில்லை. குறிப்பிட்ட விடுதலை இயக்கங்கள் மட்டுமே பங்கேற்றன. பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகளும் பங்கேற்கவில்லை.
அதன் பின்னர் புலிகளின் தனிநாட்டுக் கொள்கையை தலைவர்கள் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டு பயணித்தார்கள். பிரபாகரனின் தீர்மானங்களையும் செயற்பாடுகளையும் அங்கீகரித்தார்கள்.

போரின் முடிவின் பின்னர் அவர்கள் தங்களுடைய எதிர்காலச் செயற்பாடுகள் சம்பந்தமாக மீளாய்வு செய்வில்லை.
மாறாக, டில்லி வழங்கிய அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் தொடர்ச்சியாக ஏற்றுக்கொள்ளாது அவர்களுக்கு கிடைத்த அத்தனை சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தாது வரலாற்றுத் தவறிழைத்தார்கள்.

டில்லியை விடவும் புலம்பெயர் தமிழர்களையும் மேற்குலகத்தையும் அபரிதமாக நம்பிக்கொண்டு 13ஆவது திருத்தச் சட்டம், அதிகாரப் பகிர்வு, தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு உள்ளிட்ட விடயங்களை முறையாக கையாளாது அவற்றை ஒற்றையாட்சிக்குள் பெறமுடியாதென நிராகரித்துவிட்டு, பொறுப்புக்கூறல், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம், வெளிநாட்டு விசாரணையாளர்கள் என்று நடைமுறைச்சாத்தியமற்ற விடயங்களின் மீது காலத்தினைக் கடத்தினார்கள்.

இதன் விளைவாக, தமிழ் மக்களுக்காக இலங்கை – இந்திய ஒப்பந்தத்தினை மேற்கொண்டிருந்த இந்தியாவுக்கும் தமிழ்த் தலைவர்களுக்கமான இடைவெளி அதிகரித்து விட்டது. அந்நிலைமையானது, நான்கு தசாப்த இந்தியாவின் காத்திருப்புக்குப் பின்னர் ‘பொருளாதாரத்தினை மட்டும் மையப்படுத்தியதாக’ தனது மூலோபாயத்தினை மாற்றியமைத்துள்ளது.

அதனை அநுரகுமார தலைமையிலான அரசாங்கமும் நன்கு புரிந்துகொண்டுள்ளது. இந்த நிலைமையானது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மிகவும் ஆபத்தானதொரு சூழலாகும். ஏனென்றால், அநுரகுமார அரசாங்கம் புதிய அரசமைப்பு உருவாக்கச் செயற்பாட்டை கையிலெடுத்தால் மாகாண சபை முறைமையை நீக்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளன.

அவ்விதமானதொரு சூழல் ஏற்பட்டால் பிரதமர் மோடியின் அடுத்த இலங்கைக்கான பயணத்தின்போது அவர் அரசமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என்று கூடக் கோரிக்கை விடுக்காத்ச் நிலைமைகளே ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.

ஆகவே, தற்போதைய சூழலை தமிழ்த் தலைவர்கள் புரிந்துகொண்டு, தமது பழைய சித்தாதந்தங்களை கைவிட்டு, நடைமுறைச் சாத்தியமான விடயங்களுக்காக டில்லியுடன் மீள் ஊடாட்டத்துக்குச் செல்ல வேண்டியது அவசியமாகின்றது.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More