ஆஸ்திரேலியாவில் வேலைச் செய்ய முயற்சிக்கும் பெரும்பான்மையான இந்தியர்களுக்கு துணையாக இருந்தது ‘457 விசா நடைமுறை’. ஆஸ்திரேலியர்களுக்கு வேலையில் முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த நடைமுறையினை முடிவிற்குக் கொண்டு வந்துள்ள ஆஸ்திரேலிய அரசு, அதற்குப் பதிலாக Temporary Skills Shortage visa என்ற ‘தற்காலிக விசா’வை மார்ச் 18 முதல் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
இந்தியர்களிடையே பிரபலமான இந்த ‘457 விசா நடைமுறை’யின் மூலம் 19,400 இந்தியர்கள் இதுவரை பயன்பெற்றிருக்கின்றனர். இந்த நடைமுறை முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதினால், வேலையின் அடிப்படையில் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேற நினைத்த இந்தியர்கள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகின்றது.
இந்த விசாவின் மூலம் இங்கிலாந்தைச் சேர்ந்த 16,800 பேரும், சீனாவைச் சேர்ந்த சுமார் 18,000 பேரும், அமெரிக்காவைச் சேர்ந்த 5,100 பேரும் இதுவரை பயனடைந்திருக்கின்றனர்.
புதிய விசா நடைமுறைகள் மூலம், ஆஸ்திரேலியாவில நிரந்தர குடியுரிமைப் பெறுவது கடினமானதாக மாற்றப்பட்டுள்ளது. 457 விசாவை முடிவிற்குக் கொண்டு வருவது பற்றி கடந்த ஏப்ரல் 2017யில் அறிவித்த ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், ஆஸ்திரேலியாவில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்குவதற்கான வழியாக இதனை அடையாளப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.