உலகின் அதிகளவில் பாவிக்கப்படும் சமூக வலைத்தளமாக இருக்கும் பேஸ்புக் பயனர்களின் கணக்குகள் செயல்படும் முறையில் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு இருந்ததை கண்டுபிடித்திருப்பதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த பாதுகாப்பு குறைபாட்டினால் சுமார் 5 கோடி பேரின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 4 கோடி பேரின் கணக்குகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் தங்கள் பயனர்களின் கணக்குகள் தவறாக பயன்படுத்தப்பட்டதா அல்லது தகவல்கள் திருடப்பட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் ஹேக் செய்தவர்களின் இடம், எந்தக் குழுவினர் என்பது குறித்து கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க நிலை தகவல்களின் படி, மிகப்பெரிய அளவில் ஹேக் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸுக்கர்பெர்க், ஹேக் விவகாரம் மிகவும் மோசமான ஒன்று. தலைமைச் செயல் அதிகாரி ஷெர்ல் சாண்ட்பெர்க் பேஸ்புக் கணக்குடன், தனது கணக்கும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் காரணமாக பேஸ்புக்கின் பங்குகள் 2.6% சரிவைச் சந்தித்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.