Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் புலி நிலத்தின் கதை

புலி நிலத்தின் கதை

3 minutes read

பா. தெய்வீகன்

விடுதலைப்புலிகள் அமைப்பினுள் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட பிளவு, தமிழர்களது ஆயுதப்போராட்டத்துக்கு மாத்திரமல்ல, தமிழ்த்தேசிய அரசியலுக்கே பெரும் சாபமானது. அந்த கொடிய ஆரம்பத்தின் வழியாக, அறுந்து விழத்தொடங்கிய நம்பிக்கைகளின் துயர நெடியை தமிழர்களின் இதயங்கள் இன்றுவரை உள்வாங்கவேண்டியிருக்கிறது. கருணா தலைமையில் ஏற்பட்ட இந்த பிளவின் பின்னர் இடம்பெற்ற சம்பவங்களை, இன்று எழுத நினைத்தாலும், விரல்கள் விறைத்துவிடுகின்றன. மனம் சூனியத்திற்குள் மூச்சறுந்துவிடுகிறது. அந்தளவுக்கு அக்காலகட்டம் சடலங்களால் இட்டு நிரப்பப்பட்டது. துப்பாக்கி ஒலிகளால் விடிந்து, இருண்டது.

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து, “விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா நீக்கப்படுகிறார்” – என்று சிரித்தபடி தமிழ்ச்செல்வன் அறிவித்தபோது, இதை எப்படி செய்தியாக்குவது என்று, திரும்பி சிவராம் அண்ணனை தேடினேன். அவர் ஏற்கனவே தயா மாஸ்டரின் அலுவலகத்திற்கு சென்று, அங்கிருந்து தமிழ் நெற்றுக்கு செய்தியை எழுதிக்கொண்டிருந்தார். கரிகாலனை தவிர, அனைத்து கிழக்கு தளபதிகளும் அங்கு தமிழ்ச்செல்வனுக்கு அருகிலிருந்து கருணாவின் பிளவை உறுதி செய்தார்கள். தமிழ் ஊடகவியலாளர்கள் மாத்திரமல்ல, வெளிநாட்டு ஊடகவியலாளர்களும்கூட அந்த மாமரத்தின் கீழ் அதிர்ச்சியில் உறைந்திருந்தார்கள்.

அன்றிரவு கொழும்பு திரும்பிக்கொண்டிருந்தபோது, வாகனத்தில் – எப்பொழுதும் வெடித்துச் சிரித்துக்கொண்டிருக்கும் – ஜோய் அண்ணனும், “சண்டே ரைம்ஸ்” கிறிஸ் கமலேந்திரனும் தனித்தனி மூலைகளில் – வெறித்த பார்வையோடு – கண்ணாடியில் முகம் புதைத்துக் கிடந்தார்கள். அவ்வப்போது வந்து போன தொலைபேசி அழைப்புக்கள்தான், அளவுக்கதிகமாக அங்கு நிலவிய அமைதியை சமன் செய்தன.

அந்தக்கரிய நாளுக்குப் பிறகு, கிழக்கில் ஒவ்வொன்றாக ஆரம்பமான படுகொலைகள் கணக்கின்றித் தொடர்ந்தன. ஒவ்வொரு நாளும் “புதினம்” இணையத்தளம் “அன்றைய கொலைகள்” என்று சடலங்களின் பெயர்களை பட்டியில் போட்டுக்கொண்டிருந்தது. இணையத்தை திறந்தாலே தினம் தினம் இரத்தநெடிதான் வீசியது. ஓட்டோ ஓட்டுனர்கள், சிகை அலங்கரிப்பாளர்கள், கடை வைத்திருந்தவர்கள் என்று எண்ணுக்கணக்கற்றவர்கள் காலையில் சடலங்களாக மீட்கப்பட்டார்கள். அதற்குப்பிறகு, பிரமுகர்களும் பலர் ஒவ்வொன்றாகப் போட்டுத்தள்ளப்பட்டார்கள். அப்போது நடந்த தேர்தலில் போட்டியிடவிருந்த ராஜன் சத்தியமூர்த்தியை ஒருதரப்பு சுட்டுக்கொல்ல, மறுதரப்பு புதைத்த சடலத்தை கிளறி எடுக்குமளவுக்கு, அந்த அகோர நாட்கள் பீதியைக் கிளப்பிக்கொண்டிருந்தன. கிங்ஸ்லி ராஜநாயகம், ஜோசப் பரராஜசிங்கம் என்று அரசியல்வாதிகள் துடிக்கத் துடிக்கக் கொலையுண்டு விழ, இன்னொரு பக்கத்தில் ஊடகலியலாளர்களான நடேசன், சிவராம் ஆகியோரின் மரணங்களும் இந்தப்பிளவின் நீட்சியாக நடந்தேறி முடிந்தன.

அந்தக்காலப்பகுதியில், மக்கள் காலையில் விழித்து சுற்று முற்றும் திரும்பிப் பார்த்துத்தான், பக்கத்தில் படுத்திருப்பவர்கள் முதல்நாளிரவு கொல்லப்படவில்லை என்பதை உறுதிசெய்யவேண்டியிருந்தது.

ஆனால், இந்தக்கொடிய பிளவும் இரத்தவெறியாட்டமும் சமூகத்தின் பல்வேறு மட்டங்களையும் எவ்வாறு சீரழித்துச்சென்றது என்பது தொடர்பில் ஆதாரத்துடனான சமூக ஆய்வுகளோ, உளவியல் விசாரணைகளோ காலம் தாழ்த்திக்கூட ஆழமாக மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. இலக்கியத்தில் துண்டு துண்டாகவும் மேலோட்டமாகவும் கிழக்கின் இரத்த வெறியாட்டம் பதிவுசெய்யப்பட்டிருக்கிறதே தவிர, வெருகல் படுகொலைகள் உட்பட எத்தனையோ சம்பவங்கள் இன்றுவரைக்கும் பத்திரிகைகளுக்குள்கூட முழுமையாக நுழையவில்லை. முள்ளிவாய்க்கால் யுத்தம் என்பது பேரழிவின் படுகுழியாக – இன அழிப்பின் இறுதிச் சகதியாக – இன்றுவரைக்குமான வலியின் வரைபடமாக காணப்பட்டாலும், கிழக்கில் இடம்பெற்ற பேரழிவு மறக்கமுடியாதது.

தமிழ் புதினச்சமூகம், மூத்த தளபதிகளினதும் அரசியல் பிரமுகர்களினதும் பெருந்தலைகளதும் அழிவுகளை செய்திகளாக – விடுப்புக்களாக – நீண்ட தொடர்களாக வாசித்து – பேசி – அதிகம் சமிபாடு அடைந்திருக்கிறதே தவிர, அங்கு இடம்பெற்ற பேரழிவின் நீட்சியில் இன்றைக்கும் பல வலிகளால் துயருறும் மக்களை அறிய முயற்சித்திருக்கிறதா? அவர்களது இழப்பின் கனபரிமாணங்கள் என்ன என்பது புரியுமா? அந்தக் கொலைச்சகதிகளுக்குள் இரத்தம் தோய்ந்த பிஞ்சு விரல்களோடு விட்டுச்செல்லப்பட்ட குழந்தைகளின் இன்றைய நிலை என்ன? அவர்கள் இன்று அடைந்திருக்கும் உளச்சிதைவு எத்தகையது என்பதாவது எங்களுக்குத் தெரியுமா?

இவ்வாறு சபிக்கப்பட்ட சாதாரணர்களின் கதைகளை மிகுந்த உளக்கொதிப்போடு “சுருக்கப்பட்ட நெடுங்கதைகள்” – என்ற ஒரு சிறுதொகுப்பாக எழுதியிருக்கிறார் குமாரி என்ற சிங்களப் பெண். தமிழ் தெரியாதவராக தெற்கிலிருந்து கிழக்குக்குச் சென்ற குமாரி தொண்ணூறுகளின் இறுதிமுதல் அந்த மண்ணிலேயே வாழ்ந்திருக்கிறார். துப்பாக்கிகள் இரக்கம் காண்பித்து விட்டுச்சென்ற எஞ்சிய மக்களின் கண்ணீரை துடைத்துவிடுகின்ற மனிநேயமுள்ளவராக பணிபுரிந்திருக்கிறார். அழுவதற்கு மாத்திரமே ஆயுளைத் தாங்கிக்கொண்டிருந்த பல உயிருள்ள சடலங்களுக்குப் பக்கத்திலிருந்து, ஆறுதலாக சில வார்த்தைகளைப் பேசியிருக்கிறார். இவ்வாறு தான் அணைத்து ஆறுதல் சொன்னவர்கள் பற்றிய கதைகளை, ஆவணமாக்கியிருக்கிறார்.

தனது ஆன்மாவில் ஆழக்கலந்துவிட்ட அந்த மக்களின் வார்த்தைகளை அவர்களின் குரல்களிலேயே பேசுவதைப்போல குமாரி எழுதியுள்ள இந்தக்கதைகளை, இலக்கிய குவளைகளுக்குள் ஊற்றி, தரம் நிர்ணயம் செய்யமுடியவில்லை. புனைவா – அபுனைவா என்று பாசித்தாள் பரிசோதனை செய்யமுடியவில்லை. எல்லாவற்றையும் மீறியதொரு வலியும் குற்ற உணர்வும் ஒவ்வொரு கதைகளின் முடிவிலும் சூழ்ந்துகொள்கிறது. ஓடிச்சென்று இருண்ட குளிர் நிலமொன்றில், தனியாகக் குந்தியிருந்து அழுவதைப்போன்ற உணர்வு எழுவதை தவிர்க்கமுடியவில்லை.

நூல் – சுருக்கப்பட்ட நெடுங்கதைகள்
நூலாசிரியர் – குமாரி
தமிழில் – எம்.ரிஷான் ஷெரிப்
பதிப்பகம் – வம்சி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More