கடந்த சில ஆண்டுகளாக இந்திய தலைநகரான டெல்லி மனித கடத்தலின் மையப்பகுதியாக மாறிவருகின்றது. மனித கடத்தலில் ஈடுபட்டுள்ள கடத்தல்காரர்கள் சர்வதேச தொடர்புகளுடன் செயல்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2015 முதல் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட மனித கடத்தல் தொடர்பான சுமார் 535 மீட்பு நடவடிக்கைகளில் பல அப்பாவி பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த மீட்பு நடவடிக்கை தொடர்பாக பேசியுள்ள டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவர் சுவாதி மெலிவால், “நன்றாக ஒருங்கிணைக்கப்பட்ட மனித கடத்தல்காரர்கள் இலங்கை, ஈராக், ஈரான், சவுதி அரேபியா, மற்றும் இன்னும் பிற வளைகுடா நாடுகளில் தொடர்புகளை வைத்துள்ளனர். ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா உள்ளிட்ட இந்திய மாநிலங்களின் பின் தங்கிய பகுதிகளில் உள்ள பெண்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி வெளிநாட்டுக்கு கடத்துகின்றனர்” எனக் கூறியிருக்கிறார்.
அதே சமயம், டெல்லியில் நடத்தப்பட்ட மீட்பு நடவடிக்கைகளில் மீட்கப்பட்ட 60% பேர் நேபாள் நாட்டை சேர்ந்த பெண்கள் எனத் தெரிய வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நில நடுக்கத்தால் கடுமையான பாதிப்புக்கு உள்ளான நேபாள், கடுமையான வேலைவாய்ப்பு பிரச்னைகளை சந்திக்கின்றது. இதனை பயன்படுத்திக்கொண்ட கடத்தல்காரர்கள் அங்குள்ள பெண்களை குறிவைத்து வேலை வாங்கி தருவதாக சொல்லி கடத்துவது அம்பலமாகியுள்ளது.
“ஏழைப் பெண்களுக்கு, வேலையோ சம்பாதிப்பதற்கான வழியோ இல்லாத பொழுது, இவ்வாறான நரகத்துக்குள் அவர்கள் இழுத்த செல்லப்பட பெரும் வாய்ப்புள்ளது” என சுட்டிக்காட்டியிருக்கிறார் பெண்கள் ஆணையத்தின் தலைவர் சுவாதி மெலிவால்.