இலண்டனில் வருடாவருடம் ஆவணி புரட்டாதி ஐப்பசி என்று வந்து விட்டால் திருவிழாகளைட்டுவது போல அரங்கேற்றங்கள் களைகட்டத் தொடங்கிவிடும். இவை வாய்ப்பாடு, நடனம், வயலின், வீணை, புல்லாங்குழல், மிருதங்கம் என நீண்ட பட்டியல் உண்டு. பெண்பிள்ளைகளிடையே பிரபல்யமானது நடனம், ஆண்பிள்ளைகளிடையே பிரபல்யமானது மிருதங்கம். வாய்ப்பாட்டில் எமது அடுத்த சந்ததியினர் பாண்டித்தியம் அடைய முயற்சிப்பது மிக அரிது, இவற்றிக்குப் பல காரணங்கள் உண்டு.
புலம் பெயர் இரண்டாம் தலைமுறையினர் தமிழை சரியாக உச்சரிக்க முடியாமல் இருப்பதால் தமிழ்ச்சாகித்தியங்களை சரிவர கையாளத்தயங்குவது ஒரு காரணம்.
எமது கர்நாடக சங்கீதம் 7 சுரங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த 7 சுரங்களின் மாற்றங்களினால் உண்டான தாய் ராகங்கள் (மேளகர்த்தா ராகங்கள்) மட்டும் 72. இவையின் ஜன்ய அல்லது சேய் ராகங்கள் கணக்கில் அடங்கா. இந்த சுர வேறுபாடுகளை வாய் ஓசை மூலம் கொண்டு வருவது என்பது பல வருட பயிற்சியின் பின்னரே சாத்தியமாகும். உதாரணத்திற்கு ரிஷபம் என்ற சுரம், சுத்தரிஷபம், சதுஷ்ரரிஷபம் என இரண்டு வகைப்படும். சட்சமம், பஞ்சமத்தைத் தவிர இப்படியே மிகுதி சுரங்களும் மாறுபடும். இது இரண்டாவது காரணம்.
.
நரம்பு வாத்தியங்களிலோ அல்லது துளைவாத்தியங்களிலோ இந்த சுரவேறுபாடுகளை இலகுவாகக் கையாண்டு விடலாம். எனவே வாத்தியங்களின் புலமை அடைவது, வாய்ப்பாட்டுடன் ஒப்பிடும்போது சுலபம். இது காரணம் மூன்று.
எமது கர்நாடக இசையின் தனித்துவமே, இது கற்பனைகளும், மனோதர்மத்திற்கும், இனிமைக்கும் நிறைய இடம் கொடுப்பது. இவற்றை வாய்ப்பாட்டில் கொண்டு வருவது மிகக்கடினம் என்பது மற்றுமொரு காரணம்.
இவற்றையெல்லாம் தெரிந்து தானோ பாட்டிற்கு ஒரு புலவன் (ஒரு என்றால் ஒப்புவமையற்றவன் என்று பொருள்படும்) பாரதி பின்வருமாறு கூறினான்.
“காட்டு நெடுவானம் கடலெல்லாம் விந்தையெனில்
பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா
பூதங்கள் ஒத்து புதுமைதரல் விந்தையெனில்
நாதங்கள் சேரும் நயத்திற்கு நேராமோ?
ஆசைதரும் கோடி அதியங்கள் கண்டதிலே
ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ.”
எனப்பாடி வைத்துப் போனான்.
நான் Oriental Fine Arts Academy of London (OFAAL ) என்ற மிகப்பெரிய பரீட்சை ஸ்தாபனத்தின் கௌரவ காரியதரிசி என்பதால் அரங்கேற்றங்களிற்கு பல அழைப்புக்கள் வரும். இந்த அரங்கேற்றம் அதற்கு விதிவிலக்கு. அரங்கேறியவர் செல்வி சுகனி சுகந்தன், அவரின் அப்பா சுகந்தன் புகழ்பூத்த யாழ் இந்துவின் பழைய மாணவர். ஒரு அடிப்படைத் தொண்டன். பிரித்தானியக் கிளையின் முன்னைநாள் தலைவர். சுகந்தனுக்கும் எனக்குமான தொடர்பு யாழ் இந்துவினூடாக 30 வருடங்களிற்கு மேற்பட்டது. நட்பின் காரணமான அழைப்பு. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பாகவே சொல்லி வைத்திருந்தார்.
சுகனியின் அரங்கேற்றம் புரட்டாதி 1ஆம் திகதி சனிக்கிழமை The Beck Theatre இல் மிகக் கோலகலமாக நடந்தேறியது. லண்டனில் அரங்கேற்றங்கள் ஆவணி புரட்டாதி ஐப்பசி இல் பிரதி சனி, ஞாயிற்றுகிழமைகளில் நடப்பதால் அரங்கேற்றங்களில் சலிப்பு ஏற்பட்டு வருவோர் தொகை குறைந்து கொண்டே போகிறது. இதற்கு விதிவிலக்கு சுகனியின் அரங்கேற்றம்.
அரங்கேற்றம் தொடங்கும்போது மண்டபம் நிறைந்துவிட்டது. சுகனி தனது முதல் உருப்படியே வனயாக்ஷி என்ற கல்யாணி ராகத்தில் அமைந்த வர்ணத்துடன் எடுப்பாகத் தொடங்கினார். கல்யாணி ராகம் ஒரு சம்பூர்ணராகம் (7 சுரங்களும் கொண்டது) இது ஒரு தமிழிசைப்பண். ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு பாவம் உண்டு. கல்யாணி ராகம் ஒரு மங்களகரமான ராகம். திருமணங்கள் கோவில் திருவிழாக்களில் வாசிப்பது அதன் மங்களகரமான தனித் தன்மையினாலேயே. கல்யாணி போன்ற சம்பூரணராகங்கள் பலவித பாவங்களை வெளிப்படுத்தும். இது 65வது மேளகர்த்தா ராகம். 72 மேளகர்த்தா ராகங்களில்இ முதல் 36 ராகங்களும் பூர்வ மேளகர்த்தா ராகங்கள் எனப்படும். இந்த முதல் 36 ராகங்களும் சுத்த மத்திமத்தைக்கொண்டன. மிகுதி 36 ராகங்களும் (37 -72)இ உத்தர மேளகர்த்தா ராகங்கள் எனப்படும். இவை பிரதிமத்திமத்தைக் கொண்டன. கல்யாணி ராகத்தின் தனிச் சிறப்பே இந்த பிரதிமதிமம் தான். பாடகரின் குரல்வளம் சரியாக அமையப்பெறவிடில் கல்யாணி ராகம் சோபிக்காது. மிகத்திறமையாகவும், லாவண்யமாகவும் சுகனி இந்த கடுமையான வர்ணத்தைக் கையாண்டு சபையோரை நிமிர்ந்து உட்கார வைத்தார்.
வர்ணத்தைத் தொடர்ந்து நாட்டையில் அமைந்த ஸ்ரீமகாகணபதேம், தியாகராஜ சுவாமிகளின்; பஞ்சரதனக் கிருதியில் பிரபல்யமான ஆரபியில் அமைந்த சாருஞ்சனே. இப்படியே ஒவ்வொரு உருப்படிகளிலும் தன்தனித்துவத்தைக் காட்டி பின் பாடகர்களின் திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் பிரதான உருப்படியான ராகம், தானம், பல்லவியை லதாங்கி ராகத்தில் மிகக் சிறப்பாக பாடினார். மிகக்கடுமையான கரகரப்பிரியா ராகத்தில் அமைந்த தியாகராஐ சுவாமிகளின் பிரபல்யமான உருப்படிகளில் ஒன்றாக சக்கனிராஐ என்ற பாடலில் மிளிர்ந்தார். இதுவும் ஒரு சம்பூரணராகம். இது 22 வது மேளகர்த்தாராகம். பல பிரபல்யமான சேய்ராகங்களான ஆபேரி, ஆபோகி, கானடா, பிருந்தாவன சாரங்கா போன்ற ராகங்களுக்கு உயிரூட்டம் கொடுக்கும் தாய்ராகம். வாய்ப்பாட்டிலே பெரிய வித்துவான்களிற்கே சவாலான கரகரப்பிரியா ராகத்தை மிக இலகுவாக கையாண்டு இரசிகர்களின் ஒட்டு மொத்த பாராட்டையும் கரகோசத்தையும் பெற்றார்.
வாய்ப்பாட்டில் மட்டும் சுகனி திறமை என நினைத்த எம்மை வயலின், மேற்கத்தைய சங்கீதம் என தன் பன்முகத்திறமையைக் காட்டி அசத்தி விட்டார்.
இன்றைய பரபரப்பான இயந்திர மயமான வாழ்க்கைச் சூழ்நிலையில் கல்லூரிப்படிப்பில் கவனம் செலுத்துவதே பெரிய விடயமாகக் கருதப்படும் தற்காலச் சூழ்நிலையில் தமிழர்களின் அடையாளமான வாய்ப்பாட்டு, வயலின், அதைவிட மேலைநாட்டுச்சங்கீதம் என தொட்ட துறைகளில் எல்லாம் சிறப்பாக இருப்பது என்பது பாராட்டுக்குரியதாகும்.
அவருடைய குருமார்கள் ஸ்ரீமதி சுகந்தி ஸ்ரீநேசா ஸ்ரீமதி பூஷணி கல்யாணராமன் தனிப்பாராட்டுக்குரியவர்கள். சுகனியை இந்த நிலைக்கு கொண்டு வந்த அவர்களுக்கு சிறப்புப் பாராட்டுக்கள்.
பக்கவாத்தியக்கலைஞர்கள் லண்டனில் புகழ்பூத்த கலைஞர்கள். இப்படியும் வயலின் வாசிக்கமுடியுமா என வியக்க வைக்கும் திரு. சிவகணேஷன், மிருதங்கத்தின் தனக்கென தனி இடத்தை வைத்திருக்கும் திரு. பவானி சங்கர், கடமென்றால் பிரகாஸ், பிரகாஸ் என்றால்; கடம் என கூறவைக்கும் திரு.பிரகாஸ். எந்த ஒரு அரங்கேற்றத்திலும் தவிர்க்க முடியாத கலைஞர் திரு. கந்தையா சிதம்பரநாதன் மோர்சிங்கிலும், புல்லாங்குழலில் தாரணி ரஞ்சனும் சுகனிக்கு பக்கபலமாக பக்காவா, பக்கவாத்தியம் வாசித்தார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பந்தியாக எழுதினாலும் இவர்களின் தனிச்சிறப்பைக் கூறி திருப்தி உண்டாகாது. தம்பூராவில் செல்விகள் தாரணி ரஞ்சன், சந்தியா சோதிநாதன் ஆகியோர் பங்களித்தார்கள். அரங்கத்தை தன் இனிய தமிழினால் அழகாக தொகுத்து வழங்கினார் சுகனியின் பெரியப்பா சபா வசந்தன்.
இலங்கைக் கலைஞர்கள் இந்தியாவில் காலூன்றி நிற்பது சாத்தியமற்றவர்களாகக் கருதப்படுவது வழக்கம். இதற்கு விதிவிலக்காக இருந்தவர்கள் தவில்மேதை இணுவில் தட்சணாமூர்த்தி அவர்காலத்து தவில் வித்துவான் இணுவில் சின்னராஐ, நாட்டியத்தில் இணுவில் ஏரம்பு சுப்பையா, கற்பகவல்லியின் புகழ் இணுவில் வீரமணி ஐயா போன்றவர்கள். இந்த வரிசையில் தற்போது விளங்குபவர்; வேலணை கலைமாமணி ஸ்ரீமதி பூஷணி கல்யாணராமன். அருமையான தலைமை சிறப்புரை நிகழ்த்தினார்.
இசையை ரசிக்காத மனிதர்களே இல்லை இசைக்கு இறைவனும் அடிமை. இதனால் தான் சிவனுக்கு சாமகானப்பிரியன் என்ற பெயரும் உண்டு. ஓசையுடன் மனிதன் பின்னிப் பிணைந்திருக்கிறான். பிறக்கும் போது “ஆ” என்ற உயிரெழுத்து ஓசையுடன் பிறந்து, வாழும் காலத்தில் பலவித ஓசைகளும் பிரிக்க முடியாதவாறு பின்னிப்பிணைந்து. பின் இறக்கும் போது தாரை, தம்பட்டங்களுடன் அனுப்பி வைக்கப்படுகிறான். ஆக இசை என்பது தமிழர்களின் வாழ்கை முறையோடு கலாச்சாரத்தோடு ஊறிப்போன ஒன்றாகவும், உணர்வோடும் வாழ்வுமரபோடு கலந்து விட்ட ஒன்றாகவும் மாறிப்போய் விட்டது. தமிழர்கள் இறைவழிபாட்டிலும் இசை தனித்துவம் பெறுகிறது.
இத்துனைச்சிறப்புகளும் கொண்ட இசையை தமது மகள் சுகனிக்கு ஊட்டிய திரு. திருமதி சுகந்தன் பாராட்டுக்குரியவர்கள்.
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்.
-நாவுக்கரசர்-
அரங்கேற்றம் என்பது இசைப்பயணத்தில் ஒரு ஆரம்பமே. குரல்வளம், மொழிவளம், இசை, நுட்பம் அனைத்தும் கைவரப் பெற்ற சுகனி இந்த அற்புத தெய்வீகக்கலையை மேலும் மெருகேற்றி, ஒரு தலைசிறந்த வாய்ப்பாட்டுக் கலைஞராக வரவேண்டும். இதுவே அவர் தன் குருவிற்கும் பெற்றோருக்கும் செய்யும் கைமாறு.
இணுவையூர் பதஞ்சலி நவேந்திரன்
.