உலகம் முழுவதும் பெப்ரவரி மாதம் 21ம் தேதி சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகின்றது. கடந்த 1952ம் ஆண்டு அப்போதைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் வங்கதேச மொழியை ஆட்சி மொழியாக ஆக்கக்கோரி போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தின் போது, உயிரிழந்தமாணவர்களின் நினைவாக இந்த நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் சிறப்பு நாளாக கொண்டாடப்படுகிறது.
யுனெஸ்கோ சார்பில் கடந்த 1999ம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடந்த பொது மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்த நாள் அனைத்து உலக தாய்மொழி தினமாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 2000ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் பெப்ரவரி 21ம் தேதி சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாடு, கலாசாரம் என்பவற்றின் தனித்தன்மையை பேணிப் பாதுகாக்கும் நோக்கிலான கவசமாக இன்றைய நாள் கொண்டாடப்படுகின்றது.