எழுத்தாளர் தீபச்செல்வன் அவர்களது ‘நடுகல்’ நூல் கனடாவிலும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. ஏற்கெனவே தமிழ்நாட்டிலும் தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் வெளியீடு செய்யப்பெற்று வாசகர்களின் கவனத்தை ஈர்த்த நடுகல் எமது வலிகளின் ஆவணமாக கனடா மண்ணிலும் இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், வாசகர்கள் என பலர் கூடிய பொழுதினில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இன்று, ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் தமிழர்கள் பெரிதும் செறிந்து வாழும் ஸ்காபரோ நகரில் கவிஞரும் எழுத்தாளரும் ஊடகவியலாளருமாகிய திரு பொன்னையா விவேகானந்தன் அவர்களது தலைமையில் நடைபெற்றது.
அகவணக்கம், தாய்மொழி வணக்கம், கனேடிய தேசியப் பண் என்பனவற்றுடன் ஆரம்பமாகி தொடர்ந்து வழமையான அறிமுக, திறனாய்வு, வெளியீட்டு உரைகளுடன் சிறப்பாக நடந்தேறியது. சினம்கொள் திரைப்பட இயக்குனரும் நூலாசிரியரின் நண்பனுமாகிய திரு ரஞ்சித் ஜோசெப் அவர்கள் நூலையும் விருந்தினரையும் வரவேற்று பேச்சாளர்கள் நடுநிலைமை என்று கூறி தப்பித்து கொள்ளாமல் நடுகல் சொல்லும் செய்தியை மனம் திறந்து பேசும்படி வேண்டுகோள் விடுத்து சென்றார்.
தொடர்ந்து அறிமுகவுரையினை திரு ரதன் அவர்கள் நிகழ்த்தினார். அவர் தனதுரையில் நூலாசிரியருடன் சில இடங்களில் உடன்பாடு இல்லையாகினும் கட்டாயமாக பதியப்பட வேண்டிய ஒரு பதிவாக ‘நடுகல்’லை பார்க்கிறேன் எனவும் ‘நடுகல்’லுக்கான விளக்கத்தினையும் அவை முன்னைய காலங்களில் பயன்படுத்தப் பெற்ற இடங்களையும் குறிப்பிட்டு இருந்தார். ‘மாதாவை தாங்கிப் பிடித்த பாலகன்’ போன்ற உவமைகளால் நாங்கள் பட்ட துன்பங்கள் சொல்லாலும் எழுத்தாலும் விபரிக்க முடியாதது. மடுக்கோவிலில் இருந்த ‘மாதா’ சுருவத்தை அடுட்தந்தையர் தாங்கிப் பிடித்து காத்து சென்ற காட்சியை விபரிப்பதன் மூலம் அறிய கூடியதாக உள்ளது. இறுதிவரை முள்ளிவாய்க்காலில் நின்றவர்கள் தங்களது வாழ்க்கையை பதிவு செய்ய முடியாது மறைந்து போயினர். இப்படி தீபச்செல்வன் போன்ற எழுத்தாளர்கள் மூலம்தான் எமது துயர வரலாறு எழுதப்பட்டு வருகிறது. இவையெல்லாம் எமது ஆவணங்களாக பேணி வைக்க வேண்டும். என மிகவும் உணர்வு மிகுதியுடன் ‘காலம்’ சஞ்சிகையின் ஆசிரியர் காலம் செல்வம் அவர்கள் தனது கருத்தினை பதிவு செய்தார்.
தொடர்ந்து நடுகல் நூலுக்கான ஆய்வுரையினை அன்பு அவர்கள் மேற்கொண்டார். இங்கு பதியப்பட்டுள்ள விடயங்கள் அத்தனையும் ஈழத் தமிழர்களின் வரலாறும், வலியும், வாழ்க்கையும், முப்பது ஆண்டு காலம் அவர்கள் கடந்து வந்த பாதையின் சுவடுகளுமாகும். இங்கே சொல்லப்ட்ட ஒவ்வொரு பாத்திரங்களும் எதோ வகையில் உண்மை வாழ்வை வாழ்ந்தவர்களின் வழித்தடங்களாக இருக்கின்றது என உரையாற்றினார்.
தொடர்ந்து ஆசிரியரும் இனப்பற்றாளருமாகிய மெர்லின் இம்மானுவேல் அவர்கள் 95 இடப்பெயர்வு பொழுதுகளில் நாங்கள் பட்ட துன்பங்களுக்கு பல மடங்கு மேலான சொல்லனாத் துன்பங்களை இந்த இறுதி யுத்தம் எமக்கு விட்டு சென்றுள்ளது. இதன் வடுக்கள் ஆறப்போவதில்லை. காலங்கலாமாக எமது சந்ததியினர் அனுபவித்து வருகின்றனர். அதுவும் இடர் நடந்த இடத்தில இருந்து கொண்டு உயிருக்கு அச்சுறுத்தல் வரும் என்று தெரிந்தும் இவற்றை பதிவு செய்தல் என்பது தீபச்செல்வனுக்கு இருக்கும் துணிச்சலை காட்டி நிற்கிறது. இவற்றை பதிவு செய்யாது தவறுவோமாயின் நாமே எமது கண்களை காயப்படுத்துபவராக இருந்து விடுவோம் என உணர்வு மேலீட்டால் பேச முடியாது உரையாற்றி சென்றார்.
இறுதியில், நூலாசிரியரின் ஆசிரியர்களில் ஒருவரும் கவிஞருமாகிய பண்டிதர் ச.வே. பஞ்சாச்சரம் அவர்கள் இவ்வாறான வரலாற்று ஆவணங்கள் ஒருவர் மட்டுமன்றி பலரும் வாசித்து அறியும்படியும் இளைய சமுதாயத்துக்கு எமது இருள் சூழ்ந்த வாழ்வை கற்பிக்கும் வண்ணம் அறிய செய்தலும் வேண்டும் என நூலை வெளியீடு செய்து வைத்து உரையாற்றினார்.
காணொளி வாயிலாக தனது ஏற்புரையினை நூலாசிரியர் தீபச்செல்வன் வழங்கினார்.