இருட்டை எழுத
முனைகிறது – என்
பேனா
முனைவின் போது
வெந்நிறத் தாளில்
தன் நிறம் கொண்டு
வரிகள்……
இருட்டை வரைய
முயலும்
இருட்டை
இருளினுள்
இருந்து எழுதும்
என் முயற்சி…
இருளின் நிறத்தை
உணர… உணர
வெண்நிறத் தாளில்
தன்னிறம் கொண்டேகும்
என் கோல்
இருட்டை வரையும்
முயற்சியில்
தொடர்பற்ற சலனங்களை
அலங்கோலக் கோடுகளாய்
கிழிக்கும்…..
இருளின் இருட்டை
உணர … உணரப்
பயம்….
அக்
காரிருள் நிறம்
அரக்க வடிவம் பூண்டு
அருகில் வரும்….
பாசக் கயிறு ஏந்தி
இருளின் உரிமையாளர்கள்
என் முன்னே… இதோ
இதோ….. இதோ……
உங்களுக்குத் தெரியாது….
அவர்கள் என்னருகில்
இருப்பதை….. இருள்
அதை மறைக்கும்…..
ஐயோ…. இதோ
இதோ…. என்னருகில்
இருளின் உரிமையாளர்கள்….
எனைக் கேள்வி கேட்கிறார்கள்..
நீ..யார்? இருட்டை வரைய…
கெக்கலிக்கும் அவர்களின்
சிரிப்பு…
வெண்நிறத் தாளில்
நான் வரைய முயன்ற
இருட்டின் கிழிப்புக்களைக்
கேலி செய்கின்றன…
உன்னாலும் முடியாது
இருட்டை வரைய….
முயன்றோர் எல்லாம்
இருட்டின் கறுப்பில்
கரைந்து போனார்கள்
உன்னால் முடியாது
இருட்டை வரைய
இருட்டை வரைய
முடியாதென் விரல்கள்
நசுங்கிப் போயின…
என் ஓலக்குரலை
இரசித்த வண்ணம்
இருள் – கரைகிறது
அந் நாளில்…
விடியலில் நான்
தொலைந்து போயிருந்தேன்….
அனாதரவாய்
அவ்வறையில்
ஓர் எழுதுகோல்
வெற்நிறத் தாள்…
ஓரிரண்டு
இரத்தத் துளிகள்……
மாயன்