அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணிகளுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்டுமானப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாக அமையவிருக்கும் ராமா் கோவிலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற்ற பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்று கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார். கோவில் கட்டுமான பணிகளுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
கோவிலில் அமைக்கப்படும் பிரதான மணி, உத்தர பிரதேச மாநிலம் ஜலேசர் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 2100 கிலோ எடை உள்ள இந்த மணியின் ஒலி 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு கேட்கும் என்பது இதன் சிறப்பு.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோவிலுக்காக தமிழகத்தில் இருந்தும் ஒரு பெரிய வெண்கல மணி அனுப்பி வைக்கப்பட உள்ளதாக வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த மணி ஏரல் ராமகிருஷ்ண நாடார் பாத்திரக்கடையில் இருந்து அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும், இந்த மணியின் எடை 600 கிலோ எனவும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மணியை சுத்தியால் அடித்து அதன் ஒலியை ஊழியர் ஒருவர் சோதனை செய்வதுபோல அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள், எல் அண்ட் டி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மூன்றரை ஆண்டுகளில் கோவில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கோவில் திறந்து வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.