மும்பையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய தொடர் விசாரணைக்கு பிறகு, முன்னணி நடிகர், நடிகைகளின் செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.
பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து, இந்தி திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ளது. போதைப்பொருள் கோணத்திலும் இந்த வழக்கின் விசாரணை நடைபெறுகிறது. போதைப்பொருளை பயன்படுத்தியது மற்றும் தனது காதலன் சுஷாந்த் சிங்கிற்காக போதைப்பொருள் வாங்கியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நடிகை ரியா சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டார்.
ரியாவின் தம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் உள்பட பலர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், திரையுலகை சேர்ந்த சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையின் போது நடிகைகளான ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோனே, இந்தி நடிகைகள் சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணைக்கு பிறகு தீபிகா படுகோனே, ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான், ரகுல் பிரீத் சிங், கரிஷ்மா பிரகாஷ், ஆடை வடிவமைப்பாளர் சிமோன் கம்பட்டா மற்றும் சுஷாந்தின் திறன் மேலாளர் ஜெயா ஷா ஆகியோரின் செல்போன்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அதில் உள்ள வாட்ஸ் அப் உரையாடல்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்க உள்ளனர்.
போதைப்பொருள் சப்ளை செய்யும் பெரிய விற்பனையாளர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் களமிறங்கி உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், இதற்காக பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களை வைத்து காய்நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது விசாரணை வளையத்தில் உள்ள நடிகர்-நடிகைகள் யாரும் போதைப்பொருள் வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்படவில்லை என்றும், விசாரணை மட்டுமே நடத்தப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.