0
விஜய்யின் 65-வது படம் குறித்த செய்திகள் பரவிவரும் நிலையில், அது குறித்து இயக்குனர் பேரரசு விளக்கம் அளித்துள்ளார்.
அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பிகில்’.’பிகில்’ தொடர்பான தனது அனைத்துப் பணிகளையும் முடித்துக் கொடுத்துவிட்டார் விஜய். இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அக்டோபர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதற்காக விஜய்யுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது விஜய் நடிப்பில் உருவாகும் 64-வது படமாகும். இதனைத் தொடர்ந்து 65-வது படத்தை இயக்குநர் பேரரசுவும், 66-வது படத்தை இயக்குநர் ரமணாவும் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவலை உடனடியாக இயக்குநர் ரமணா தனது பேஸ்புக் பக்கத்தில் மறுத்தார். ஆனால், இயக்குநர் பேரரசு தரப்பில் எந்தவொரு மறுப்பும் வெளியாகாத காரணத்தால், இருவரும் இணைவது உறுதி என்று பலரும் செய்திகளை வெளியிடத் தொடங்கினார்கள்.
தற்போது இந்தச் செய்தி தொடர்பாக இயக்குநர் பேரரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ’விஜய் 65 படத்தை நான் இயக்கப் போவதாக பத்திரிகையில் செய்தி வந்தது. அது ஒரு செய்தியாகவே கடந்து போய் விடும் என்று நினைத்தேன். ஆனால் அந்த செய்தி தொடர்ந்து வந்து தற்போது உறுதியான செய்தியாக வந்தவண்ணம் இருக்கிறது.
நான் விஜய்க்காகக் கதை தயார் செய்து வைத்திருக்கிறேன் என்பது உண்மை. நானும் என் கதையும் விஜய்க்காகக் காத்திருக்கிறோம் என்பதும் உண்மை. மற்றபடி எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இச்செய்தி உண்மையிலேயே உறுதி செய்யப்பட்டால், நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன்” என்று தெரிவித்துள்ளார்.