எம்.ஆர்.ராதாவின் மகன் ராதாரவி தன் அப்பாவைத் தெலுங்கராக அடையாளப்படுத்தி அவர் சாதனைகளைச் சொல்லியிருக்கிறார். சாதி, மொழி என்ற இந்தச் சின்னச் சிமிழ்களுக்குள் அடைபடக்கூடியவரா எம்.ஆர்.ராதா என்ற காட்டாறு?
வரலாற்றில் செயற்கரிய செய்த ஆளுமைகளை `என் சாதிக்காரர்’, `என் மதத்துக்காரர்’ என்று ஒரு குமிழுக்குள் அடைப்பது சமகால அவலம். பழங்கால மன்னர்களுக்குத் தாங்களே சாதிச்சான்றிதழ் தந்து, ‘ஆண்ட ஜாதி’ என்று பெருமை பேசிக்கொள்வது ஒருவிதமான மனநோய். கூகுளில் ஏதாவது ஒரு திரை நட்சத்திரத்தின் பெயரை அடித்தாலே, அவர் சாதி என்ன என்ற கேள்வியும் கூடவே வந்துவிடுகிறது. காரணம், அத்தனைபேர் அவரின் சாதியைத் தேடியிருக்கிறார்கள். சாதி உணர்வற்ற கலைஞர்களை இப்படி சாதிரீதியாக அடையாளப்படுத்துவது துயரம் என்றால் வாழ்நாள் முழுவதும் சாதிக்கு எதிராகச் செயற்பட்டவர்களையும் சாதிரீதியாக அடையாளப்படுத்துவது நமக்கு நாமே இழைத்துக்கொள்ளும் அவமானம். அப்படியான ஓர் அவமானம்தான் நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கும் ஏற்பட்டிருக்கிறது.
எம். ஆர். ராதாவுக்கு சாதியோ மதமோ மொழியோ இன்னும் சொல்லப்போனால் அவர் புகழடைவதற்குக் காரணமான சினிமாவோகூட பொருட்படுத்தத்தக்கவை அல்ல.
நடிகவேள் எம்.ஆர்.ராதா இந்திய வரலாற்றிலேயே ஒப்பிட முடியாத தனித்துவம் மிக்க தைரியக்கலைஞன். அவர் வெறுமனே நடிப்பால் பெயர் பெற்றவரல்ல. கலகங்களை நிகழ்த்திய துணிச்சலாலும் தான் நம்பிய கொள்கைகளுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட நேர்மைக்காகவும் பெயர் பெற்றவர். கதாநாயகர்கள் தொடங்கி தயாரிப்பாளர்கள் வரைக்கும் யாருக்கும் பயப்படாதவர்; பணிந்துபோகாதவர். அவரை எந்த நடிகரோடும் ஒப்பிடவே முடியாது. அவருக்கு சாதியோ மதமோ மொழியோ இன்னும் சொல்லப்போனால் அவர் புகழடைவதற்குக் காரணமான சினிமாவோகூட பொருட்படுத்தத்தக்கவை அல்ல.
அவர் 125 சினிமாக்கள் நடித்திருக்கிறார். ஆனால் சினிமா வாழ்க்கையை `ரிட்டயர்ட் லைஃப்’ என்றே குறிப்பிட்டார். தான் நடித்த எந்தப் படத்தின் வெற்றிவிழாக்களிலும் அவர் கலந்துகொள்ளவில்லை காரணம் கேட்டால் `வியாபார ரீதியாக வசூலைக்குவித்த படங்களுக்கே விழா கொண்டாடப்படுகிறதே தவிர, நன்றாக நடித்திருக்கிறோம் என்று விழா கொண்டாடப்படுவதில்லையே’ என்றார். 1966 -ல் தமிழக அரசின் சார்பில் சிறந்த நடிகருக்கான விருதுக்கு ராதா தேர்ந்தெடுக்கப்பட்டு கவர்னர் பரிசளிப்பதாய் இருந்தது. ஆனால், `மொழி தெரியாத கவர்னர் என் படத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. எனவே, விருது வாங்கமாட்டேன்’ என்று மறுத்துவிட்டார்.
முதல்படத்திலேயே படத்தை இயக்கிய பிரகாஷ் என்பவருக்கும் ராதாவிற்கும் மோதல் ஆரம்பித்தது. இயக்குநர் என்ற தோரணையில் அவரின் ஆணவமான நடவடிக்கைகள் ராதாவிற்கு ஒத்துவரவில்லை. 1937ல் ராஜசேகரன் வெளியானது. அதன்பிறகு 1942 வரை ஐந்தாண்டுகள் ஐந்து படங்கள் நடித்த ராதா, அதன்பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு நாடகத்துறைக்கே திரும்பினார்.
`சங்கரதாஸ் சுவாமிகள் நல்ல நாடகக்கலைஞர். ஆனால் அவர் வேறு கலைஞர்களை உருவாக்கியதில்லை. எனவே அவரை நாடக உலகின் தந்தை என்று அழைப்பது தவறு. ஜெகந்நாதய்யரைத்தான் அப்படி அழைக்கவேண்டும்’ –எம்.ஆர்.ராதா
சிறுவயதில் நாடக கம்பெனியில் பார்ப்பன ஆதிக்கத்தையும் வைதீக மூடத்தனங்களையும் சந்தித்திருக்கிறார். சமயம் கிடைக்கும்போதெல்லாம் அதை எதிர்த்துக் கலகமும் செய்திருக்கிறார். நாடக கம்பெனிகளில் பார்ப்பனருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் தனித்தனியாக உணவும் காபியும் தயாரிக்கப்பட்டபோது, முடிந்தபோதெல்லாம் அதை எச்சில் படுத்தியிருக்கிறார்.
பார்ப்பனியத்தை, சாதிய ஏற்றத்தாழ்வை, சகமனிதர்களை அவமானப்படுத்தும் ஆணவத்தை அவர் எதிர்த்திருக்கிறாரே தவிர அவர் தனிமனித வெறுப்பாளர் அல்ல. ஜெகந்நாதய்யரின் நாடகக்குழுவில் நடித்துவந்த ராதா அவரைப் பெரிதும் மதித்திருக்கிறார். ஜெகந்நாதய்யர் பெரும்பாலும் இந்த சாதிபேதத்திற்கு அப்பாற்பட்டே வாழ்ந்துவந்திருக்கிறார். ‘சங்கரதாஸ் சுவாமிகள் நல்ல நாடகக்கலைஞர். ஆனால் அவர் வேறு கலைஞர்களை உருவாக்கியதில்லை. எனவே அவரை நாடக உலகின் தந்தை என்று அழைப்பது தவறு. ஜெகந்நாதய்யரைத்தான் அப்படி அழைக்கவேண்டும்’ என்றார் எம்.ஆர்.ராதா.
இப்படிப்பட்ட ஜனநாயக உணர்வுள்ளவரையா உங்கள் சாதிய மனத்தோடு அணுகுகிறீர்கள்? பெரியாரின் இயக்கத்திற்கு வருமுன்பே இடதுசாரிச் சிந்தனையாளராக இருந்தவர் எம்.ஆர்.ராதா. பகத்சிங்கின் பார்வர்டு கட்சியின் அனுதாபியாக இருந்த அவர் முதன்முதல் நாடகசபாவை ஆரம்பித்து நாடகத்தை நடத்தும்போது நாடகத்திரைச்சீலைகளில் ‘உலகப் பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்’ என்னும் வாசகம் இடம்பெற்றிருந்தது. பிறகு பெரியாரின் இயக்கத்தில் இணைந்தபிறகு ‘திராவிடப் பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்’ என்று அந்த வாசகம் மாறியது.
ராமாயண நாடக நோட்டீசில் ‘உள்ளே வராதே’ என்று அச்சடிக்கப்பட்டிருக்கும். அதன்கீழ் ‘இந்துக்கள் தங்கள் மனம் புண்படுகிறது என்று கருதினால் நாடகத்திற்கு வரவேண்டாம். அப்படி மீறிவந்து மனம் புண்பட்டால் நான் ஜவாப்தாரியல்ல’ என்னும் வாசகமும் அச்சடிக்கப்பட்டிருந்தது.
அதன்பிறகு ராதாவின் ‘விமலா அல்லது விதவையின் கண்ணீர்’ நாடகத்திற்கு பெரியாரும் அண்ணாவும் தாங்களாகவே டிக்கெட் எடுத்துக்கொண்டு நாடகம் பார்த்தார்களாம். நாடகம் முடிந்ததும் இருவரும் மேடை ஏறினர். அண்ணா “நாங்கள் நூறு மாநாடுகள் நடத்துவதும் ராதா ஒரு நாடகம் நடத்துவதும் சமம்” என்று புகழ்ந்தார். அன்றிலிருந்து பெரியார் பற்றாளராக மாறிய ராதா சாகும்வரை பெரியாரின் மீது தீராத நேசம் கொண்டிருந்தார். சாதி ஒழிப்பில் பெரியாரின் அசல் தளபதியாய் விளங்கிய எம்.ஆர்.ராதாவை சாதியின் பெயராலும் மொழியின் பெயராலும் அடையாளப்படுத்துவது கொடுமை. ராமாயணத்தில் மூடநம்பிக்கைகளும் சாதியமும் இருக்கிறது என்று ‘ராமாயணம்’ நாடகத்தை நடத்தினார். அந்த நாடகம் தடை செய்யப்பட்டபோது அதே நாடகத்தை ‘கீமாயணம்’ என்னும் பெயரால் நடத்தினார்.
வெறுமனே சட்டரீதியான தடைகள் மட்டுமல்ல, முகத்துக்கு நேரே வன்முறைகளைச் சந்தித்தவர் ராதா. அவருடைய நாடகம் என்பது பொழுதுபோக்குக் களமல்ல; போர்க்களம். எத்தனையோ கலாட்டாக்கள் நடக்கும். நாடகத்திலும் மேடைகளிலும் கலகம் செய்பவர்களைக் களத்திலே இறங்கிச் சந்திப்பார் ராதா. சிலம்புச்சண்டை, துப்பாக்கிசுடுதல், குதிரையேற்றம் போன்ற பல கலைகளைத் தெரிந்துவைத்திருந்தார். எலெக்ட்ரிக்கல் வேலைகள் பார்ப்பதிலும் நிபுணர். ராதாவின் மேடையில் எப்போதும் கலைஞர்களும் எதிர் வன்முறைக்குத் தயாராக இருப்பார்கள், ஆயுதங்களும் தயாராக இருக்கும்.
எம்.ஆர்.ராதாவே சாதியைத் தாண்டிய காதலராக வாழ்ந்தவர். இப்போது அவரைத் தெலுங்கராக அடையாளப்படுத்துகிறார் ராதாரவி. ஆனால் எம்.ஆர்.ராதா தன் குழந்தைக்குத் தமிழரசன் என்று பெயர் சூட்டியவர்!
நெருக்கடிநிலைகாலகட்டத்தின்போது மிசாவில் கைதான ஒரே நடிகர் ராதா மட்டுமே.
கம்யூனிசத் தத்துவத்தில் ஈர்ப்பு கொண்ட ராதா கம்யூனிஸ்ட் கட்சியையும் ஆதரித்திருக்கிறார். கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்டபோது ஜீவாவிற்கு அடைக்கலம் தந்தார். அவரை மொட்டையடிக்க வைத்து பட்டை அணிவித்து சாமியார் என்று போலீஸை ஏமாற்றியிருக்கிறார். அப்போது ஜீவா தரும் கடிதங்களை ஓரிடத்தில் ரகசியமாகக் கொண்டு சேர்ப்பித்திருக்கிறார். அந்தக் கடிதங்கள் புரட்சிகரத் தகவல் அடங்கிய ரகசியக் கடிதங்களென்றே ராதா கருதிவந்தார். ஆனால் அதன்பிறகுதான் தெரிந்திருக்கிறது, அவை ஜீவா தன் காதலி பத்மாவதிக்கு எழுதிய கடிதங்கள் என்று. எம்.ஆர்.ராதாவே சாதியைத் தாண்டிய காதலராக வாழ்ந்தவர். இப்போது அவரைத் தெலுங்கராக அடையாளப்படுத்துகிறார் ராதாரவி. ஆனால் எம்.ஆர்.ராதா தன் குழந்தைக்குத் தமிழரசன் என்று பெயர் சூட்டியவர். மறைந்துபோன தன் மனைவி பிரேமாவதிக்கும் குழந்தை தமிழரசனுக்கும் நினைவுச்சின்னம் எழுப்பியவர். நெருக்கடிநிலைகாலகட்டத்தின்போது மிசாவில் கைதான ஒரே நடிகர் ராதா மட்டுமே.
அவரது இரண்டு சிறைச்சாலைச் சம்பவங்கள் சுவாரசியமானவை. எம்.ஜி.ஆரைச் சுட்ட வழக்கில் ராதாவிற்கு ஏழரையாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டன. ஆனால் நாலரை ஆண்டுகளிலேயே அவரை விடுவிக்கச் சொல்லி உத்தரவு வந்துவிட்டது. இது தெரியாத ராதா, அன்று காலையில் வழக்கம்போல குளிப்பதற்காக துண்டு, வாளி சகிதம் கிளம்பியிருக்கிறார். சிறை அதிகாரி வந்து , “உங்களை விடுதலை செய்தாச்சு, கிளம்பலாம்’ என்றிருக்கிறார். ஆனால் ராதாவோ, கொஞ்சமும் பதற்றப்படாமல் ‘குளித்துவிட்டுத்தான் கிளம்புவேன்’ என்று பதிலளித்திருக்கிறார். மிசாகாலத்தின்போது யாரை எதற்குக் கைது செய்கிறோம் என்று தெரிவிக்கவேண்டிய அவசியமில்லாத சூழல் நிலவியது. அப்படித்தான் ராதாவையும் கைதுசெய்திருந்தார்கள்.
சிறையிலே நேர்காணலுக்கு உறவினர்கள் வரும்போது பின்னாலிருந்து அதிகாரிகள் குறிப்பெடுப்பது வழக்கம். ராதாவின் மனைவி அவரைக் காணவந்திருக்கிறார். ‘என்ன மாமா, நிறையபேர் விடுதலையாகி வெளியே வர்றாங்க. நீங்களும் எழுதிக்கொடுத்துவிட்டு வெளியே வரலாமே’ என்றிருக்கிறார். உடனே ராதா, ‘என்ன எழுதிக்கொடுப்பது?’ என்று கேட்டிருக்கிறார். ‘இனிமேல் அந்தத் தப்பைச் செய்யமாட்டேன் என்று எழுதிக்கொடுக்க வேண்டியதுதானே’ என்று மனைவியும் பதிலளிக்க. உடனே ராதா, ‘இதோ பாரம்மா. என்னையேன் கைது செய்திருக்காங்கன்னு எனக்கும் தெரியாது. இங்க இருக்கிறவங்களுக்கும் தெரியாது. கைதுசெய்தவங்களுக்கும் தெரியாது. அதுதான் மிசா. நான்பாட்டுக்குத் தூங்கிக்கொண்டிருந்தேன். பிடிச்சு உள்ளே தள்ளிட்டாங்க. நான் செய்த ஒரே தப்பு அதுதான். அப்ப நான் இனிமே வாழ்நாள் முழுதும் தூங்காமலே இருக்கணுமா?’ என்றிருக்கிறார். குறிப்பெடுத்துக்கொண்டிருந்த அதிகாரியும் சிரித்துவிட்டாராம். இப்படி யாருக்கும் பயப்படாமல், கலாசாரப் போலித்தனங்களை எதிர்த்து, தன் சொந்த சிந்தனையில் வாழ்ந்தவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா. அவருடைய போக்கைத் தெரிந்துகொள்ள அவருடைய நேர்காணலில் இருந்து சில பகுதிகளை வாசிக்கலாம்.
இப்போது நடிகர்களுக்குப் பொன்னாடை போர்த்தும் வழக்கம் அதிகமாகிவிட்டதே. இதுபற்றித் தங்கள் அபிப்பிராயம் என்ன?
பொன்னாடை போர்த்தவேண்டியது பிணத்திற்குத்தான்.
நீங்கள் எதில் அதிகம் இன்பம் காண்கிறீர்கள்?
எதிர்ப்பில்தான். மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை எதிர்த்து ஒரு தோற்றத்தைத் தருவதுதான் என்னுடைய பழக்கம்.
நீங்கள் ஏன் சினிமாவில் தொடர்ந்து நடிக்கவில்லை?
நடிகர்கள் தேயிலைத்தோட்டக் கூலிகள் போல நடத்தப்பட்டனர். போதிய சவுகரியங்கள் இல்லை. முடிவாக நான் படவுலகை அடியோடு வெறுக்க மாடர்ன் தியேட்டர்தான் காரணம். ஒரு நடிகன் நடிகையோடு பேசினால் கட்டிவைத்து அடிப்பார்கள். இந்நிலை எனக்கு மிக்க வெறுப்பையும் அவமானத்தையும் அளித்தது.
நேரு, பெரியார், ராஜாஜி, அண்ணாதுரை இவர்களில் பொதுப்படையான பொருளைக் கருத்தாழத்தோடு பேசுபவர்களை வரிசைப்படுத்தவும்.
பெரியார்தான். வரிசை தேவையில்லை.
நான் எங்கள் ஊரில் தங்கள் பெயரில் மன்றம் அமைக்க முயற்சி செய்தேன். ஆனால் எங்கள் ஊர்த் திராவிடர்கழகப் பிரமுகர் ஒருவர், தன் பெயரில் மன்றம் அமைவதை அவர் விரும்பமாட்டார் என்கிறார். இது உண்மைதானா?
உண்மைதான்.
எல்லாப் படங்களிலும் வில்லனாகவும் கொடூரமாகவும் காட்சியளிக்கிறீர்களே, இல்லத்தில் மனைவி மக்களோடும் சுற்றத்தோடும் எப்படிப் பழகுவீர்கள் என்பதை அறிய ஆவல்.
அது தங்களுக்குத் தேவையில்லை.
தாங்கள் இந்த நாட்டின் முதன்மந்திரியானால்..?
இதுமாதிரிக் கேள்விகேட்பவர்களைத் தூக்கில் போட சட்டம் கொண்டுவருவேன்.
முதலமைச்சர் ஆகும் ஆசையில் சினிமா நட்சத்திரங்கள் அலையும் காலத்தில் பெரியாரின் கொள்கைக்காகவே தன்னை அர்ப்பணித்து, பெரியார் பிறந்த அதே செப்டம்பர் 17ல் இறந்துபோன இணையற்ற கலைஞன் எம்.ஆர்.ராதா. உங்கள் சாதி, மொழி விளையாட்டுக்கு சாமான்யர்கள் எவ்வளோபேர் இருப்பார்கள். பூமியின் தலைமீது நின்றுகொண்டிருக்கும் எம்.ஆர். ராதா என்ற கலகச்சூரியனில் உங்கள் சுருட்டைப் பற்றவைக்க முயல வேண்டாம்.