‘ஓட்டு போட்டா ரஜினிக்குதான் போடுவேன்’ என 28 ஆண்டுகளாக வாக்களிக்காமல் காத்திருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மகேந்திரன், வரும் சட்டமன்றதேர்தலில் ரஜினிக்கு ஓட்டு போடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினியின் மீது கொண்ட ஈர்ப்பால் அவரது ரசிகர்கள், அவரின் பெயரை தங்களது உடலில் பச்சை குத்திக் கொள்வது, மொட்டை அடித்துக் கொள்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதை பார்த்திருப்போம். ஆனால் நடிகர் ரஜினிகாந் அரசியலுக்கு வரும் வரை வாக்களிக்க மாட்டேன் என கடந்த 28 ஆண்டுகளாக
வாக்களிக்காமல் காத்திருக்கும் ரஜினி ரசிகர் ஒருவருக்கு ரஜினியின் தற்போதைய அரசியல் பிரவேச அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் மகேந்திரன். தற்போது 46 வயதாகும் மகேந்திரன் பள்ளிப் பருவ காலத்தில் இருந்தே நடிகர் ரஜினிகாந்த் மீது தீராத காதல் கொண்டுள்ளார். அதன் விளைவாக 18 வயது பூர்த்தியாகியும் வாக்களிக்காமல், தனது ஹீரோ எப்போது அரசியலுக்கு வருவாரோ அன்றுதான் வாக்களிப்பேன் என்று விடாப்பிடியாக 28 ஆண்டுகளை நம்பிக்கையோடு கடந்து வந்துவிட்டார் மகேந்திரன்.
இந்நிலையில்தான் இந்த மாத இறுதியில் தான் தொடங்கப் போகும் அரசியல் கட்சி குறித்து அறிவிக்கப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளது மகேந்திரனை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து மகேந்திரன் கூறுகையில் “சிறுவயது முதலே நான் தீவிர ரஜினி ரசிகன். ரஜினி மீது தான் அளவற்ற பாசம் கொண்டுள்ளேன். ரஜினி ஒரு ஆன்மீகவாதி என்பதால் தமது அன்பு இன்னும் கூடுதலானது. அதனால்தான் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்த பிறகுதான் வாக்களிக்க வேண்டும் என்ற முடிவை 28
ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தேன்.
என் மனைவி ஒரு தேர்தலில் போட்டியிட்ட போது கூட நான் வாக்களிக்கவில்லை. என் வாக்கு என்று ஒன்று அளித்தால் அது என் ரஜினிகாந்திற்காகவே மட்டும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அப்போது வாக்களிக்கவில்லை. நடிகர் ரஜினிகாந்தால்தான் யாரும் எதிர்பார்க்க முடியாத
அரசியல் மாற்றத்தைக் கொடுக்க முடியும். காமராஜர், எம்ஜிஆர் விட்டுச் சென்ற இடத்தை எனது தலைவர் ரஜினிகாந்த் நிரப்புவார்.
ரஜினிகாந்தின் அரசியல்பிரவேசம் அறிவிப்பு தன்னை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இதுவரையில் 15-க்கும் மேற்பட்ட தேர்தல்களை கடந்து வந்த நிலையிலும் கூட நான் வாக்களிக்க
வில்லை. வருகிற சட்டப்பேரவை தேர்தலில்தான் நடிகர் ரஜினிகாந்த் தொடங்கப் போகும் கட்சிக்கு வாக்களிக்கப் போகிறேன்” என நெகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார் மகேந்திரன்.
நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் அவர்மீது அளவற்ற அன்பு கொண்டு இருப்பார்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அதையும் கடந்து தனது நாயகன் அரசியல் கட்சி தொடங்கினால்தான் வாக்களிப்பேன் என்று புதுக்கோட்டை சேர்ந்த ஒரு ரசிகர் 28 ஆண்டு காலமாக வாக்கே செலுத்தாமல் காத்திருந்தது
காண்போருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.