ஏம்பா நேத்து வந்த டெலிபோன் பில் எங்கேப்பா? இங்கேதான வச்சேன். என்னிக்கு டியூ டேட்னு தெரியலையே…இப்படி சின்ன விஷயத்தை கூட சரியாக எடுத்து வைக்காமல் பிறகு தடுமாறுவது நமக்கெல்லாம் சகஜமான விஷயம்.
ஆனால், கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய திரைத்துறையில் வெளியான பல்லாயிரக் கணக்கான திரைப்படங்களைப் பற்றிய புள்ளி விவரங்களை, விரல் நுணியில் வைத்திருக்கும் விந்தையான மனிதர்தான் பிலிம் நியூஸ் ஆனந்தன். ஊமைப் படத்தில் தொடங்கி நாளை வெளியாகப் போகும் படங்கள் வரை வெளியான ஆண்டு, மாதம், தேதி, நடிகர்/நடிகைகள், இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர்…என்று அத்தனை விவரங்களையும் துல்லியமாக ஆவணப்படுத்தி வைத்திருக்கும்
இவர்…தென்னிந்திய திரையுலகின் ‘நடமாடும் வைகிபீடியாவாக’ கொடிகட்டிப் பறந்து வருகிறார். பத்திரிகையாளர், புகைப்படக் கலைஞர், மக்கள் தொடர்பு அதிகாரி, கண்காட்சி அமைப்பாளர்…என்று இவரது பன்முகத் திறமைகளின் அணிவகுப்பு மலைப்பூட்டுகிறது. தியாகராஜ பாகவதர், கலைவாணர், எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித்…இவர் பழகாத, இவரைத் தெரியாத நட்சத்திரங்களே திரை உலகில் இருக்க முடியாது.!
தமிழ் சினிமாவின் முதல் பிஆர்ஓ என்ற அந்தஸ்தும் இவருக்கே சொந்தம். அதிலும்…எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி, நடித்த மகத்தான திரைக் காவியம் ‘நாடோடி மன்னன்’ படத்தில்தான் இவர் முதல் முறையாக பிஆர்ஓவாக பணியாற்றினார் என்ற தகவல் இவர் மீதான மதிப்பை பன்மடங்காக உயர்த்துகிறது. கலா பீடம், கலைமாமணி விருதுகள், திரையுலக ஜாம்பவான்கள் எல்.வி.பிரசாத், எஸ்.எஸ்.வாசன், எம்ஜிஆர் பெயர்களிலான விருகள், விஜிபி, லயன்ஸ் கிளப், அஜந்தா, மதி ஆர்ட்ஸ் அகடமி, தம்ஸ் அப்…என்று நீளும் விருதுகளின் பட்டியல் இவரது சேவைக்கான தேவையை அழுத்தம் திருத்தமாக அடித்துச் சொல்கின்றன.
கம்ப்யூட்டர் இல்லாத காலத்திலேயே ஒரு பிரம்மாண்டமான பணியை பிரமிப்பூட்டும் வகையில் சாதித்துக் காட்டியிருக்கும் இந்த சாதனையாளர், 1930களில் தொடங்கி இன்று வரையிலான தமது விலை மதிக்க முடியாத பொக்கிஷத் தொகுப்புகளை, லஷ்மண் ஸ்ருதி இணையதளத்தில் வெளியிட மனம் உவந்து அனுமதி அளித்துள்ளார் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு லஷ்மண் ஸ்ருதியின் இதயங்கனிந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறோம்.
இந்த அரிய தகவல்கள், உங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியை தருவதுடன், பல வகையிலும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம். இந்த பக்கங்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை, ஆரோக்கியமான ஆலோசனைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ள அழைக்கிறோம்.
அன்புடன்
லஷ்மண் ஸ்ருதி
நன்றி பிலிம் நியூஸ் ஆனந்தன்
– lakshmansruthi.com