செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாகவர் ஸ்டோரி கே. பாக்யராஜின் படைப்புகள்

கே. பாக்யராஜின் படைப்புகள்

5 minutes read

திருமணம் என்பதில் நமது சமூகப் பார்வை என்ன என்பதையும் தாலியின் புனிதத்தையும் அந்த 7 நாட்கள் படத்திலும், ‘இது நம்ம ஆளு’ சாதிப் பிரிவினை எந்த அளவுக்கு சமூகத்தைப் பாதித்திருக்கிறது என்பதையும், அதிகப் பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்தின் பரிதாப நிலையைத் ‘தாவணிக் கனவுகள்’ படத்திலும், ஏழையின் காதல் படும் பாட்டை ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்திலும், கணவன் மனைவி இடையே ஏற்படும் பிணக்குகளை மையமாக்கி ‘மௌன கீதங்கள்’ படத்திலும் இப்படி இவரது படைப்புகள் எல்லாம் ஏனோதானோ என்றில்லாமல் படம் பார்ப்பவரைப் பாதிக்கும் அளவுக்கு இருக்கும்.

பாமா ருக்குமணி, சின்னவீடு சிரிப்போடு சிந்திக்க வைத்தவை. சிவன் தலையிலேயே சின்னவீடு என்று காட்டிண துணிச்சல் யாருக்கு வரும்?

டார்லிங்…டார்லிங்…டார்லிங்…. திரைப்படம் அவரது சொந்த வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்ததை நாம் மறக்க முடியுமா?

இமயத்தோடு இணைகிறோம் என்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பெருமைப்படுத்திய பாங்கு, என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே’ என்று முதுபெரும் நடிகர் நம்பியார் அவர்களுடன் போதையில் ஆடிப்பாடிய தூறல் நின்னுப் போச்சு திரைப்படத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

மாணவி ஆசிரியரோடு தவறான உறவை வைத்துக் கொள்ளக் கூடாது என்ற படிப்பினையைச் சுந்தரகாண்டத்திலும், மனநிலை சரியில்லாப் பெண்ணின் அவலத்தை ‘ஆராரோ ஆரிராரோ’ படத்திலும் படம் பிடித்துக் காட்டிய விதம். நண்பன் மரணத்தை மறைத்து அவன் குடும்பத்தின் மகிழ்ச்சி பாதிக்காத வகையில் நடக்க. அதுவே பெரும் புயலாய் மாறி கதாநாயகனை எல்லோரும் தப்பா நினைக்கும் சூழலை அற்புதமாகப் ‘பவுனு பவுனுதான்’ திரைப்படத்தில் கையாண்ட விதம் இவரது திறமைக்குச் சான்று.

ஒரு கைதியின் டயரி:

கதை, திரைக்கதை தனக்கே உரிய பாணியில் பழி வாங்கும் கதை. அதையே “ஆக்கிரி ராஸ்தா” என்று இந்தியில் இயக்கமும் செய்து முடிவை மாற்றித் தான் ஒரு சிறந்த கற்பனை வளம் உள்ளவர் என்று நிரூபித்தார்.

சிறந்த வசனம்:

கணக்கிட முடியாத அளவுக்குச் சிறந்த வசனங்களைத் தந்தவர். தாவணிக் கனவுகள் அண்ணன் தங்கையிடம் பேசும் வசனம் “நான் திருமணத்திற்கு நாள் குறிச்சிட்டு வந்திருக்கேன். நீ வளைகாப்புக்கு நாள் பார்க்குறே”. பத்தினி யாருங்கற கேள்விக்கு ஒருத்தரும் தன் மனைவி பெயரைச் சொல்லததை இடித்துக் காட்டும் வசனம், தாலியைக் கழட்டச் சொல்லும் பகுதி வசனம் அந்த 7 நாட்கள் படத்தில் இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.

சிறந்த இயக்கம்:

முந்தானை முடிச்சு படத்தில் கைக் குழந்தையைக் கதாநாயகி தாண்டும் இடம், டார்லிங்…டார்லிங்…டார்லிங் படத்தில் இறுதிக்காட்சி ‘விடியும் வரைக் காத்திரு’ படத்தில் சமையல் கேஸ் வழியாகக் கொலை செய்யும் யுக்தி, அந்த 7 நாட்கள் படத்தில் காதலனையே மணமுடிக்கத் தீவிரம் காட்டும் பெண்ணுக்குத் திருமணத்தைப் புரிய வைக்கும் பகுதி, சொகக்த்தங்கம் படத்தில் பிரகாஷ்ராஜை அறிமுகப்படுத்தும் விதம் – என்று நீண்ட பட்டியல் உண்டு.

பிறமொழிப் படங்கள்:

இந்தியாவில் இவரது கதைகள் படங்கள்தான் பல்வேறு மொழிகளில் – இந்தி, தெலுங்கு, கன்னடம், ஒரியா என்று பல மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளன. தலைசிறந்த திரைக்கதை அமைப்பாளர் என்றும் பாராட்டுப் பெற்றவர்.

படைப்பாளி:

திரைப்படத் துறையோடு எழுத்துலகிலும் தன் முத்திரையைப் பதித்தவர். கடந்த 18 ஆண்டுகளாக பாக்யா வார  இதழின் ஆசிரியர். 7 நாவல்கள் எழுதியுள்ளார். தொலைக்காட்சியில் தூர்தர்ஷனில் இவரது ரூல்ஸ் ரங்காச்சாரிதான் மிகவும் பிரபலமானத் தொடர் என்று பாராட்டப்படுகின்றது. இது ஒரு கதையின் கதை -டிடியில் 390 பகுதிகளாக ஒளிபரப்பப்பட்டது.

விருதுகள்:

தமிழ்நாடு அரசின் சிறந்த வசனத்திற்காகப் புதிய வார்ப்புகள் படத்திற்கு. சிறந்த திரைக்கதைக்காக தாய்க்குலமே தாய்க்குலமே படத்திற்கு, சிறந்த திரைப்படத்திற்கான சிறப்புப் பரிசு ‘இது நம்ம ஆளு’ படத்திற்கு, சிறந்த நடிகருக்கான பரிசு ‘ஒரு கை ஓசை’ படத்திற்கு மற்றும் பிலிம்பேர் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் பலமுறை பெற்றவர். அவர் சிறந்த விருதாகக் கருதுவது உரிமையோடு உங்கள் பாக்யராஜ் என்று தன்னை ஒவ்வொரு படத்திலும் அறிமுகம் செய்து கொள்வது என்பதுதான். நல்ல திரைப்படம் இரண்டு வல்லுனர்களின் மேஜையில் பார்க்கப்படுகின்றது. ஒன்றை திரைக்கதை எழுதுபவர் மேஜை. இரண்டாவது எடிட்டரின் மேஜை என திரைக்கதையின் பெருமையைப் பற்றி அன்றே பிரபல பிரிட்டன் இயக்குனர் ஆல்பர்ட் ஹிட்சாக் கூறியுள்ளார். அந்தப் பாணியில் இன்று இந்தியாவிலேயே திரைக்கதை அமைப்பதில் சிறந்தவர் என இயக்குநர் மணிரத்னம் ஏன் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் வரை பாராட்டுப் பெற்றவர் நமது புரட்சித் திலகம் கே. பாக்யராஜ் அவர்கள்.

சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம் அடுத்தவரை சந்தோஷப்படுத்திப் பார்ப்பதுதான் என்ற கொள்கையைப் பரவலாக்கிய ஒரு தர்ம சிந்தனையாளர், பண்பாளர் பாக்யராஜ் அவர்கள்.

ஆக்ரோஷமாகவும், மிகவும் உணர்ச்சி வசப்பட்டும், நடிகர்கள் நடித்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் இயல்பாக சராசரி அடுத்த வீட்டு வாலிபனாக நம் கண் முன்னே கொண்டு வந்து காண்பித்து இயல்பான நடிப்பால் நம்மையெல்லாம் கவர்ந்தவர்.

சின்ன வாரியார் எனும் பட்டத்திற்கு உரிய வகையில் கேள்வி – பதில் பகுதியில் பல சிறு சிறு கதைகள், நகைச்சுவையுடன் கூடிய பதில்கள் என்று படிக்கும் எல்லோரையுமே கவர்ந்தவர் பாக்யராஜ் அவர்கள்.

நடிகர் திலகம் சிவாஜியை வைத்து இயக்கிய  பாக்யராஜ் அவர்கள் அதன்பிறகு மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்து பாதியில் நின்றுப் போன திரைப்படத்தைப் பிடிதய பொலிவுடன்  கே. பாக்யராஜ் அவர்கள் நடித்து இயக்கி “அவசர போலீஸ் – 100” என பெயரிட்டு திரையுலகத்திற்கு கொடுத்த பெருமையும் அதில் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த காட்சிகளை வைத்து அவர் மறைந்தும் மீண்டும் சினிமாவில் பார்க்க முடியும் என்று செய்து காட்டியவர் கே.பாக்யராஜ் அவர்கள்.

இவர் சாதனைகளுக்கு ஆதாரமாக இருக்கும் விசயம் ‘சென்னை தரமணி திரைப்படக் கல்லூரியில் ஸ்கீரின் ப்ளே, டைரக்ஷன் படிக்கும் மாணவர்கள் பாக்யராஜின் திரைப்படங்களை மீண்டும் மீண்டம் பார்த்து, ஆய்வு செய்து பயிற்சிப் பெறுகிறார்கள் என்பதுதான்.

“சுவரில்லாத சித்திரங்கள் முதல் சொக்கத்தங்கம் வரை” ஒவ்வொரு படமாக அலசி ஆராய்ந்த பார்த்தோம் என்றால் திரைக்கதை அமைப்பில் இவரது புதிய உத்திகளும், மண்வாசனை வீசும் கிராமத்து கலாச்சாரத்தின் மனித நேய மனிதர்களின் வாழ்க்கைப் பதிவுகளும் அழகியல் நளினமாய் பரவி கிடப்பதைக் காணலாம்.

ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தன் முக்கியத்துவம் தருவதே நல்ல திரைக்கதையின் அடையாளம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தால்தான் இவரால் நிறைய வெள்ளி விழா படங்களை கொடுக்க முடிந்தது. இதை மனதில் கொண்டு பிரமித்துப் போய்தான் ‘ரைட்டர்னா என்னைப் பொறுத்த வரைக்கும் பாக்யராஜ் தான் டைரட்டர்’ என்று இயக்குநர் பாரதிராஜா கூறினார். ‘ஜனங்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காதுன்னு முழுசா மாஸோட பல்ஸ்ஸை தெரிஞ்சு வச்சிருக்கிறது பாக்யராஜ்தான்’ என்று பாலச்சந்தர் கூறினார்.

“சிறந்த திரைக்கதை எப்படி இருக்கனும்னா” அந்த ஏழு நாட்கள் போலன்னு நான் ஒர வரையறையே வச்சிருக்கேன்” என்று மணிரத்னம் கூறினார்கள். சிறு சிறு சம்பவங்கள் மூலம் கோர்வையாக நகைச்சுவையாக கதை சொல்லும் பாணி பாக்யராஜ் உடையது. இவரது திரைக்கதை திறமை, வியப்பு ஏற்படுத்தும் விசயம். போரான கதை காட்சிகளை முறையான அழகான திரைக்கதை மூலம் சுவராஸ்யமாக்க முடியும் என்பதற்கு இவர் நல்ல உதாரணம்” என்று  விக்ரமன் அவர்கள் கூறினார்கள்.

“வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம்” என்ற நூல் நூறு டைரக்டர்களிடம் பணியாற்றிய அனுபவத்தை தர வல்லது. தமிழ் சினிமாவின் வெற்றியின் இரகசியங்களை பகிரங்கமாகப் போட்டு உடைத்த முதல் நூல் இது. தற்போது வெற்றிப் படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் இளைய தலைமுறை இயக்குநர்கள் இந்த நூலை நிச்சயம் படித்து பயன் பெறுகிறார்கள் என்பது சத்தியம்.

நன்றி : lakshmansruthi.com

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More