இயக்குவர் லிங்குசாமி இயக்கத்தில் தயாராகி வரும் ‘தி வாரியர்’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தெலுங்கின் முன்னணி நடிகரான ராம் கதையின் நாயகனாக தமிழில் அறிமுகமாகும் திரைப்படம் ‘தி வாரியர்’. இவருடன் நடிகர் ஆதி, நடிகை கீர்த்தி ஷெட்டி ,அக்ஷரா கவுடா, நதியா, பாரதிராஜா, ‘காப்பான்’ பட புகழ் ஜானி சிராக், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரம்மாண்டமான பொருட்செலவில் ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்க்ரீன் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சீனிவாச சித்தூரி தயாரித்திருக்கும் இப்படத்தை ‘சண்டக்கோழி 2’ படத்திற்கு பிறகு இயக்குநர் லிங்குசாமி இயக்கியிருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் ஜூலை மாதம் 14ஆம் திகதியன்று ‘தி வாரியர்’ தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தெலுங்கின் முன்னணி நடிகர்களான ‘பாகுபலி ‘பிரபாஸ், ‘ஸ்பைடர்’ மகேஷ் பாபு, ‘நோட்டா’ விஜய் தேவரகொண்டா ஆகியோரைத் தொடர்ந்து, அன்மையில் ‘ஆர் ஆர் ஆர்’ படத்தின் மூலம் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் தமிழ் திரை உலக ரசிகர்களுக்கு நட்சத்திர அந்தஸ்துடன் நடிகர்களாக அறிமுகமானார்கள்.
இந்த பட்டியலில் தற்போது தெலுங்கின் மற்றொரு முன்னணி நடிகரான ராம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகிறார். இவருக்கு தமிழ் ரசிகர்கள் ஆதரவு கிடைக்குமா? கிடைக்காதா? என்பது ஜூலை 14ஆம் திகதியன்று தெரியவரும் என திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.