நயன்தாரா-விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர். இவர்களின் இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதேசமயம் திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது சலசலப்பை கிளப்பி பல கேள்விகளை எழுப்பியது.
அதன்பின்னர் வாடகைத் தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரியவந்தது. இதிலும் சர்ச்சை எழுந்தது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க பல்வேறு விதிமுறைகள் இருக்கும் நிலையில், இந்த விதிமுறைகள் மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன பின்னரே வாடகை தாய் மூலம் குழந்தை பெற இயலும் என்றும் அவர் தெரிவித்தார். இதையடுத்து இணை இயக்குனர் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நயன்தாரா, விக்னேஷ் சிவன் சிகிச்சை பெற்ற மருத்துவமனை குறித்தான விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது என்றும், சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். மேலும், இந்த விசாரணைக் குழுவினர் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.