தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மகேஷ் பாபுவின் தந்தையும், மூத்த நடிகருமான கிருஷ்ணா உடல் நலக்குறைவின் காரணமாக இன்று காலை காலமானார்.
தெலுங்கு திரையுலகில் முதல் சுப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர் கிருஷ்ணா. கதாநாயகனாக நடித்ததுடன் மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் திரை துறையில் பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சுப்பர் ஸ்டாராக வலம் வந்தவர்.
79 வயதாகும் இவருக்கு முதுமையின் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் நேற்று காலை அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.
சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவரது மறைவுக்கு தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த அரசியல் தலைவர்கள், சினிமா துறையினர், ரசிகர்கள், தொழிலதிபர்கள், திரையுலக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ” மூத்த தெலுங்கு நடிகர் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா மறைவெய்திய செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன். தெலுங்கு திரை உலகில் பல புதுமைகளை அறிமுகப்படுத்திய முன்னோடியாக கிருஷ்ணா திகழ்ந்தார். அவரது மறைவு இந்திய திரையுலகிற்கு ஈடு செய்யவியலாத இழப்பாகும்” என குறிப்பிட்டிருக்கிறார்.
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டரில், ” நடிகர் கிருஷ்ணாவின் மறைவு தெலுங்கு திரையூலகிற்கு ஒரு பெரிய இழப்பு. அவருடன் மூன்று படங்களில் நடித்த நினைவுகள் எப்போதும் போற்றத்தக்கது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என பதிவிட்டிருக்கிறார்.
உலக நாயகன் கமலஹாசன் தன்னுடைய டிவிட்டர் பதிவில், ” தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்த கிருஷ்ணா மறைந்துவிட்டார். அவருக்கு என் அஞ்சலி. அன்னை, சகோதரர், தந்தை என அடுத்தடுத்து இழப்புகளை சந்தித்து துக்கத்தில் வாடும் தம்பி மகேஷ்பாபுவின் துயரத்தில் பங்கெடுக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
தெலுங்கில் 300 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் நடிகர் கிருஷ்ணா, அண்மையில் சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான ‘கந்தசாமி’ எனும் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.