தயாரிப்பு: ஜி ஸ்டூடியோஸ் & கிரண் கொரப்புடி
நடிகர்கள்: சமுத்திரகனி, மாஸ்டர் துருவன், ராகுல் ராமகிருஷ்ணா, அனுசுயா பரத்வாஜ், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர்.
இயக்கம்: சிவ பிரசாத் யெனலா
மதிப்பீடு: 2/5
தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கும் சமுத்திரக்கனி- கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம். இந்த திரைப்படம் அவரது வழக்கமான திரைப்படமாக அமைந்திருக்கிறதா? அல்லது புதுமையாக அமைந்திருக்கிறதா? என்பதனை தொடர்ந்து காண்போம்.
சென்னை மாநகரின் குடிசை பகுதிகளில் கட்டண கழிப்பறையை நடத்தி வருவாய் ஈட்டும் மாற்று திறனாளி கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவரது மகனாக -பாடசாலையில் பயிலும் மாணவனாக- மாஸ்டர் துருவன் நடித்திருக்கிறார். துருவனுக்கு விமானம் என்றால் விருப்பம். அதிலும் விமானத்தில் பயணம் செய்வது என்றால் பெரு விருப்பம். விமான நிலைய வெளிப்புற சுவரோரம் நின்று, விமானம் புறப்படுவதையும்… தரையிறங்குவதையும்.. விமானம் பறப்பதையும்.. கண் கொட்டாமல் கண்டு ரசிக்கிறார். மேலும் விமானத்தை இயக்க வேண்டும் என்ற கனவும் காண்கிறார். சக்திக்கு மீறிய இவரின் கனவை ஏழை தந்தையான சமுத்திரக்கனி நிறைவேற்றுகிறாரா? இல்லையா? என்பதை உணர்வு பூர்வமாக விவரிப்பதுதான் தான் இப்படத்தின் கதை.
ஏழையான மாற்றுத்திறனாளி தந்தை கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி தன்னை பொருத்திக் கொள்ள தடுமாறுகிறார். படம் முழுவதும் அவருடைய நடிப்பில் படு செயற்கைத் தனம் அப்பட்டமாக தெரிகிறது. கதையிலும், திரைக்கதையிலும், தந்தை- மகனுக்கு இடையேயான பாசத்தை காண்பிக்கிறோம் என்கிற போர்வையில் சினிமாத்தனமான காட்சிகள் இடம்பெறுகிறது. ஜீவனுள்ள ஒரு காட்சியும் இடம்பெறாதது பெருங்குறை.
சமுத்திரக்கனியின் மகனாக நடித்திருக்கும் மாஸ்டர் துருவன், இயக்குநர் என்ன சொன்னாரோ…! அதை செய்து தன் நடிப்பின் திறமையை காண்பிக்கிறார்.
குடிசை பகுதி என்றால் அங்கு ஒரு பாலியல் தொழிலாளி இடம்பெறுவது பக்கா சினிமாடிக், வலிந்து திணிக்கப்பட்ட கதாபாத்திரமும் கூட. நகைச்சுவைக்காக இயக்குநர் அமைத்திருக்கும் காட்சிகளில்… சிரிப்பு வருவதற்கு பதில் எரிச்சல் தான் ஏற்படுகிறது.
சிறிய இடைவெளிக்குப் பிறகு திரையில் விமான பணிப்பெண்ணாக மூத்த நடிகை மீரா ஜாஸ்மின் தோன்றுகிறார். அந்த கதாபாத்திரமும் சினிமாவிற்காக வளைக்கப்பட்டிருப்பதால் வீரியமிழக்கிறது.
படத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கும் அரங்கம் செயற்கை என்பது அப்பட்டமாக தெரிகிறது. பின்னணி இசை குறைந்தபட்ச தரத்தில் இருக்கிறது. ஒளிப்பதிவு மட்டுமே உயர் தரத்தில் அமைந்து, இயக்குநருக்கு ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறது.
மகன் – விமான ஆகாய விமான பயணத்தை மேற்கொள்ள விரும்புகிறார். இதனை நிறைவேற்றுவதற்கு தந்தை எடுக்கும் முயற்சிகள்… பாராட்டை பெறுவதற்கும் பதிலாக, மனதிற்குள் நகைப்பை உண்டாக்குகிறது. வலிமையற்ற திரைக்கதை எழுத்தால் பார்வையாளர்களை சோர்வடைய வைக்கிறார் இயக்குநர்.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிக்கு அரசின் உதவித்தொகை இந்திய மதிப்பில்1500 ரூபாய் என்றிருக்க… ஆனால் திரையில் வேறு ஒரு தொகையை கூறி, அவர்களையும் எரிச்சலடைய செய்கிறார் இயக்குநர்.
சோக சுவையை திரையில் நேர்த்தியாக செதுக்கி காண்பிக்க வேண்டும் என்ற இயக்குநரின் கற்பனை.. சோக அவல சுவையாக மாறி, பார்வையாளர்களை தொய்வடைய வைக்கிறது.
சமுத்திரக்கனி வழக்கம்போல் நாலு கோடி ரூபாய் சம்பளம் பெற்றுக் கொண்டு, 40 கோடி ரூபாய்க்கு நடித்திருக்கிறார்.
உச்சகட்ட காட்சி பார்வையாளர்கள் யூகித்ததை போல் அமைந்திருப்பதால்…, எந்த அதிர்வையும் ஏற்படுத்தாமல்… இந்த விமானம் சாதாரணமாக கடந்து செல்கிறது.
விமானம் – பொம்மை