தயாரிப்பு : எயர் ஃபிளிக்
நடிகர்கள் : தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா, எம். எஸ். பாஸ்கர், சுனில் ரெட்டி, முனீஸ்காந்த், காளி வெங்கட், கருணாகரன், யாஷிகா ஆனந்த் மற்றும் பலர்.
இயக்கம் : மீரா மெஹதி
மதிப்பீடு : 2.5 / 5
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் அனிமேஷன் கதாபாத்திரங்களுடன் ஒரு படைப்பை உருவாக்க வேண்டும் என எண்ணியிருக்கும் அறிமுக இயக்குநர் மீரா மெஹதி, தொழில்நுட்ப தரத்துடன் உருவாக்கி இருக்கும் ‘டபுள் டக்கர்’ அனைவரையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
நாயகன் அரவிந்த் ( தீரஜ்) பால்ய பருவத்திலேயே விபத்து ஒன்றில் சிக்கி முகத்தில் தீக்காயம் ஏற்பட்டு, அவலட்சனமான முகத்துடன் வாழ்கிறார். தன்னுடைய முகத்தோற்றம் குறித்து அரவிந்திற்கு தாழ்வு மனப்பான்மையும் இருக்கிறது. திரண்ட சொத்திற்கு அதிபதியான அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் உதவி செய்து வரும் பாரு ( ஸ்மிருதி வெங்கட்)வை காதலிக்கிறார். அரவிந்த் தன் காதலை பாருவிடம் சொல்கிறார். அவரின் முகத் தோற்றத்தைப் பார்த்து முகம் சுழிக்கும் பாரு.. காதலை ஏற்றுக்கொள்ள முதலில் தயங்குகிறார். இதனால் அரவிந்த் குறிப்பிட்ட திகதி மற்றும் குறிப்பிட்ட தருணத்தில் எம்முடைய காதலை ஏற்றுக் கொள்ளாவிட்டால்… தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவிக்கிறார். தற்கொலையும் செய்து கொள்கிறார். அரவிந்தின் காதலை ஏற்றுக் கொண்டு சம்மதம் தெரிவிப்பதற்காக அங்கு சற்று தாமதமாக வரும் பாரு.. அரவிந்தை காணாமல் அதிர்ச்சியாகிறார்.
அதற்குள் காட்’ஸ் ஆர்மி எனும் கார்ட்டூன் பொம்மைகளின் உலகத்தில் லெஃப்ட் ஏஞ்சல் ( முனீஸ்காந்த்) ரைட் ஏஞ்சல் ( காளி வெங்கட்) ஆகியோர் தவறுதலாக அரவிந்தின் உயிரை எடுத்து விடுகிறார்கள்.
இந்த தருணத்தில் அரவிந்தின் திரண்ட சொத்தை கபளீகரம் செய்வதற்காக ராக்கெட் ரெட்டி – மர்டர் மணி (சுனில் ரெட்டி -ஷா ரா) தலைமையிலான கும்பல், தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கும் அரவிந்தின் உடலை கடத்திச் சென்று விடுகிறது.
லெப்ட் ஏஞ்சல் மற்றும் ரைட் ஏஞ்சல் தங்களின் தவறுகளை உணர்ந்து மீண்டும் அரவிந்துக்கு உயிர் கொடுப்பதற்காக, அவருடைய உடலை தேட.. அவரது உடல் அங்கு இல்லாதிருக்க.. அரவிந்தின் ஆன்மாவின் வேண்டுகோளுக்கு இணங்க.. அரவிந்தின் ஆவியை அவரைப்போலவே தோற்றமளிக்கும் ராஜா ( தீரஜ்) எனும் உடலுக்குள் செலுத்தி விடுகிறார்கள். ‘இது ஒரு தற்காலிகமான ஏற்பாடு’ என லெப்ட் ஏஞ்சல் மற்றும் ரைட் ஏஞ்சல் தெரிவிக்கிறார்கள். முகத்தில் வடுக்கள் இல்லாமல் அழகான தோற்றத்துடன் இருக்கும் ராஜாவின் உடலில் அரவிந்த் இருக்க.. அவர் பாருவை சந்தித்து காதலை உறுதிப்படுத்திக் கொண்டு திருமணம் செய்து கொள்ள திட்டமிடுகிறார்.
இதன்போது பாருவின் பெரியப்பாவான மன்சூர் அலிகான் தலைமையிலான கும்பல்.. அரவிந்த்- ராஜா குழப்பத்தை பொலிஸிடம் தெரிவிக்க.. கோவை சரளா தலைமையிலான காவல்துறையினர் அரவிந்த் – ராஜா தோற்ற குழப்பத்தை விசாரிக்க.. வைத்திய சாலையில் உள்ள பிணவறையில் சடலமாக அரவிந்த் இருப்பதை காணும் ஏஞ்சல்ஸ்.. அவரை மீட்பதற்கான முயற்சியில் இறங்க.. அப்போது மனநிலை தவறிய எம். எஸ். பாஸ்கர் தலைமையிலான நால்வரணி குழப்பத்தை ஏற்படுத்த… இறுதியில் பாரு அரவிந்த் காதலர்கள் இணைந்தார்களா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் கதை.
அரவிந்த்- ராஜா எனும் இரண்டு வேடத்தில் நடிகர் தீரஜ் நடித்திருக்கிறார். காமெடியில் கலக்கும் தீரஜ்.., அனுதாபத்தை ஏற்படுத்தும் அரவிந்த் கேரக்டரில் நடிப்பதற்கு சிரமப்படுவதை காண முடிகிறது.
லெப்ட் ஏஞ்சல் & ரைட் ஏஞ்சல் எனும் அனிமேஷன் கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்ததுடன் அல்லாமல் அந்த கதாபாத்திரத்திலும் நடித்திருக்கும் காளி வெங்கட் -முனீஸ்காந்த் கூட்டணி ரசிகர்களை கரவொலி எழுப்ப வைக்கிறது.
இவர்களைத் தொடர்ந்து சுனில் – ஷா ரா கூட்டணி ரசிகர்களை சிரிக்க வைக்கிறது.
இவர்களைத் தொடர்ந்து எம். எஸ். பாஸ்கர் தலைமையிலான நால்வர் அணி ரசிகர்களை கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைக்கிறது.
இவர்களைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் தலைமையிலான குழுவினர் சிரிக்க வைக்கிறார்கள்.
இவர்களைத் தொடர்ந்து கோவை சரளா தலைமையிலான காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் சிரிக்க வைக்கிறார்கள்.
நகைச்சுவைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. சில இடங்களில் வெற்றியும் பெறுகிறார்கள். சில இடங்களில் பொறுமையை சோதிக்கிறார்கள். சின்னத்திரையில் இடம்பெறும் விளம்பரம் ஒன்றில்.. ‘கோணலாக இருந்தாலும் என்னுடையதாக்கும்’ என்றொரு வசனம் இடம் பெறும். இதனை மையப்படுத்தி கதையை உருவாக்கியிருக்கிறார்கள்.
ஏஞ்சல்ஸ் எனும் கார்ட்டூன் அனிமேஷன் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு.. அதற்கு காளி வெங்கட் மற்றும் முனீஸ்காந்தின் பின்னணி குரல் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் ரோலக்ஸ் சூர்யா- கபாலி சுப்பர் ஸ்டார்- விக்ரம் கமல்ஹாசன் போன்ற கதாபாத்திரங்களை நினைவுபடுத்தும் வகையிலான வசனங்கள் சமயோஜிதமாக பயன்படுத்தப்பட்டிருப்பது ரசிக்க வைக்கிறது.
வித்யாசாகரின் பாடல்களை விட, பின்னணி இசையில் நம் மனதை கவர்கிறார். கௌதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு தரமான சம்பவமாக இருக்கிறது. படத்தொகுப்பில் சில இடங்களில் நேர்த்தியிஸம் சுப்பர்.
பிரதான கதையை விட கிளைக் கதைகள் அதிகமாகவும், வலிமையாகவும் இடம் பிடித்திருப்பதால்… இயக்குநரின் கதை சொல்லும் உத்தி ஜஸ்ட் பாஸாகிறது.v