சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் ‘அமரன்’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பட குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கின்றனர்.
‘ரங்கூன்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அமரன்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ், ஸ்ரீ குமார், ஷியாம் மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சி ஹெச் சாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
இந்திய ராணுவத்தில் விமானப்படை வீரராக வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் ஃபிலிம்ஸ் இந்தியா ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்தது என படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள்.
மேலும் படத்தின் நாயகனான சிவகார்த்திகேயன் படக் குழுவினருக்கு சிறப்பு விருந்தளித்து விலை மதிப்பு மிக்க கை கடிகாரம் ஒன்றினை பரிசாக வழங்கி உற்சாகப்படுத்தினார். விரைவில் படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் தொடங்கும் என்றும், அதனைத் தொடர்ந்து படத்தின் டீசர் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.