கார்த்தி நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படத்திற்கு ‘வா வாத்தியார்’ என பெயரிடப்பட்டு, அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வா வாத்தியார்’ எனும் திரைப்படத்தில் கார்த்தி, கிருத்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், ஜி. எம். குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜோர்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. கார்த்தி காக்கி உடை அணிந்து ஸ்டைலான தோற்றத்தில் தோன்றுவதால் ரசிகர்களிடத்தில் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.