இலட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் விஜய் முதன்முதலாக தன்னுடைய ரசிகர்களுக்கு ‘கோட்- GOAT’ படத்தில் இரட்டை பரிசினை வழங்க இருப்பதாக படக் குழுவினர் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ எனும் திரைப்படத்தில் விஜய், மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
சித்தார்த்தா நூனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். அறிவியல் புனைவு கதை அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் எக்சன் என்டர்டெய்னரான இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐந்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘விசில் போடு’ எனும் முதல் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தனியார் நிகழ்வு ஒன்றில் பங்குபற்ற வருகை தந்திருந்த இப்படத்தின் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ராஜாவிடம் படத்தின் அப்டேட் குறித்து கேட்டபோது, ” இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக தளபதி விஜய் இந்த திரைப்படத்தில் இரண்டு பாடல்களை பாடி இருக்கிறார். அந்தப் பாடலும் அற்புதமாக உருவாகி இருக்கிறது” என்றார். இது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இதனிடையே விஜயின் குரலில் உருவான அந்தப் பாடல் ஜூன் மாதம் விஜய்யின் பிறந்த நாளன்று வெளியிடப்படும் என அவரது ரசிகர்களும் ,திரையுலகினரும் எதிர்பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.