‘உலகநாயகன்’ கமல்ஹாசன் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘இந்தியன் 2’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘இந்தியன் 2’ எனும் திரைப்படத்தில் ‘உலகநாயகன்’ கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ். ஜே. சூர்யா, பொபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரித்திருக்கிறார். இதனை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வழங்குகிறது.
இந்த திரைப்படத்தின் இடம்பெற்ற முதல் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இடம்பெற்ற ‘நீலோற்பம்..’ எனும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘நீலோற்பம் நீரில் இல்லை ஏன் தாண்டினாய் எல்லை இனி ஏதும் தடங்கல் இல்லை..’ எனத் தொடங்கும் இந்தப் பாடலை பாடலாசிரியை தாமரை எழுத, பின்னணி பாடகர் வி. அபி மற்றும் பின்னணி பாடகி ஸ்ருத்திகா சமுத்ரலா ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். மெல்லிசையும், காதல் உணர்வும் இணைந்திருக்கும் இந்த பாடல் இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.