நடிகர் உமாபதி ராமையா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘பித்தல மாத்தி’ எனும் திரைப்படம், ஜூன் 14-ஆம் திகதியன்று பட மாளிகையில் மீண்டும் வெளியிடப்படுகிறது.
அறிமுக இயக்குநர் மாணிக் வித்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பித்தல மாத்தி’ எனும் திரைப்படத்தில் உமாபதி ராமையா, பால சரவணன், வினிதா லால், தம்பி ராமையா, தேவதர்ஷினி, ஆடுகளம் நரேன், காதல் சுகுமார், வித்யூலேகா ராமன், முல்லை, கோதண்டம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். என். வெங்கட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மோசஸ் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி.சரவணன் தயாரித்திருக்கிறார்.
இந்தத் திரைப்படம் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் வெளியிடப்பட்ட பல திரைப்படங்களில் தண்ணி வண்டி எனும் திரைப்படமும் இடம்பெற்றது. இந்த திரைப்படம் குறைவான பட மாளிகையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர தவறியது. இந்த கதையின் மீது தயாரிப்பாளர் மற்றும் படக் குழுவினர் கொண்டிருந்த நம்பிக்கை காரணமாக இந்த திரைப்படத்தில் சில காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட்டு, ‘பித்தல மாத்தி’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது அதிகமான படமாளிகைகளில் வெளியிடப்படுகிறது. மேலும் இப்படத்தின் நாயகனான உமாபதி ராமையாவிற்கும், அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும் திருமணம் நடைபெற்றிருக்கும் தருணத்தில் இந்த திரைப்படம் மீண்டும் படமாளிகையில் வெளியிடப்படுவதால் வெற்றி பெறும் என படக் குழுவினர் கருதுகிறார்கள்.
இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் சரவணன் பேசுகையில், ” இப்படத்தின் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருணத்தில் உடல் நல குறைவு காரணமாக வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தேன். புதுமுக கலைஞர்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டதால் இப்படத்தை வெளியிடுவதற்கு உடலளவில் ஆரோக்கியம் இல்லை என்றாலும் அந்த தருணத்தில் எம்மால் முடிந்த அளவு உதவினேன்.
மிகக் குறைவான பட மாளிகையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவரவில்லை. இதனால் தற்போது வெளியிடுவதற்கு விரிவான ஏற்பாடுகளை செய்து, அதிகமான படமாளிகையில் வெளியிடுகிறோம். தற்போது இந்த திரைப்படத்திற்கு குறைந்தபட்ச வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ‘பித்தல மாத்தி’ என்ற திரைப்படத்தை தொடர்ந்து, யோகி பாபு நடிக்கும் ‘ஜோரா கையத்தட்டுங்க’ என்ற படத்தையும் தயாரித்திருக்கிறேன். விரைவில் அதனை வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபடவிருக்கிறேன்” என்றார்.