திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு உதவும் குணம் கொண்ட நட்சத்திர நடிகரான விஜய் ஆண்டனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.
ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், சரத்குமார், மேகா ஆகாஷ், டாலி தனஞ்செயா, முரளி சர்மா, சரண்யா பொன்வண்ணன், பிருத்வி அம்பர், ‘தலைவாசல்’ விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அச்சு ராஜாமணி -விஜய் ஆண்டனி ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். கிரைம் திரில்லர் வகைமையிலான இந்த திரைப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கமல் போஹ்ரா+ லலிதா தனஞ்ஜெயன் +பிரதீப் +பங்கஜ் போஹ்ரா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ,டீசர், இரண்டு பாடல்கள் ஆகியவை வெளியாகி பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம்பெற்ற எக்சன் காட்சிகளும் முத்தாய்ப்பான வசனங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்நிலையில் இந்தத் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள்.
இதனிடையே இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா நிகழ்விற்கு பங்குபற்றுவதில் தாமதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக , வேறொரு படத்தின் படப்பிடிப்பில் பணியாற்றிக் கொண்டிருந்த விஜய் ஆண்டனி – அந்த திரைப்படத்திற்கான ஒப்பனையை கூட கலைக்காமல் (கலைப்பதற்கான கால அவகாசம் அதிகரிக்கும் என்பதால்) அதே ஒப்பனையுடன் விழாவில் பங்கு பற்றி திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு உதவும் தன்னுடைய இயல்பை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.