செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாகவர் ஸ்டோரி ‘நான் ஏழாவது பாசுண்ணே’ | செந்தில்

‘நான் ஏழாவது பாசுண்ணே’ | செந்தில்

3 minutes read

கவுண்டமணி சினிமாவுக்குள் வந்த பாட்டை பாக்யராஜ் சொல்லி இருக்கிறார். அப்படி என்றால் செந்திலின் நிலைமையை யோசித்து பாருங்கள்.

சினிமா பிழிந்தெடுத்து தான் உருமாற்றும். வாய்ப்புக்கு வாய் திறந்து காத்திருக்கும் கொக்கு போல. முகம் காட்டி விட மாட்டோமா… குரல் வந்து விடாதா… கதையின் போக்குக்கு முக்கிய திருப்பத்தில் தான் நின்று விட மாட்டோமா என்று தான் கலைஞன் தவித்திருப்பான்.

நாடகம்… நடிப்பு…..கூத்து… விவாதம்… பேச்சு… ஒத்திகை… ஒப்பனை…என்று எல்லாமும் கூடும் எல்லையில்… இல்லாத ஒன்றிலும் இருப்பவனாகவே இருக்கும் கலைஞன் பின் வாய்ப்பு கிடைக்கையில் அதை சரியாக பயன் படுத்திக் கொண்டு மிக மிக சுயநலமாக தன்னை முன்னேற்றிக் கொள்வது தான்…. வெற்றி.

அது செந்திலுக்கும் நடந்தது.

இரு வேறு துருவங்கள் தன் தன் போக்குகளில் தகவமைப்பை நிறுவிக் கொள்கையில்… ஒரு புள்ளியில் ஒரு சேர சேர்ந்தது ஆச்சரியம். கவுண்டமணி என்ற அற்புதப் புதையலோடு தன்னை அண்டாகா கசமாக்கி கொண்டது செந்திலின் சாமர்த்தியம்.

ஒரு கட்டம் வரை தனியாகவோ.. மற்ற கூட்டணியோடோ நடித்துக் கொண்டிருந்த செந்தில்.. காலத்தின் சூட்சும விதியில்.. கட்டுண்டு.. கவுண்டமணி என்ற துப்பாக்கிக்குள் புல்லட் ஆனார்.

“இதுல எப்டிண்ணே லைட் எரியும்” என கேட்டு பட்டென்று உடைத்து விட்டு ஓடு விடும் செந்திலை ‘வைதேகி காத்திருந்தாள்’ வெளிச்சம் போட்டு காட்டியது.

“உங்கள மாதிரி இல்லண்ணே உங்க பொண்டாட்டி..” என்று வாய் நிரம்ப கேட்கையில்… டக்கன…” ஆமா…. அவ கொஞ்சம் குள்ளம்…” என கவுண்டர் கொடுக்கும் கவுண்டர் மணி… காலத்தின் இடைவிடாத மணி. அதற்கு ஈடு கொடுத்து.. குண்டக்க மண்டக்க எதையாவது ஒன்றை கேட்டு எக்கு தப்பாக கவுண்டமணியை மாட்டி விட்டு ஓடி விடும் செந்தில்… சரியான ஒத்து. செமத்தையான ஒர்த்.

‘கார வெச்சிருந்த சொப்பன சுந்தரியை இப்ப யார் வெச்சிருக்கிறார்’ என்ற கேள்வியெல்லாம் கிரியேட்டிவ் இந்நோவேட்டிவ். எழுதியது யாராக வேண்டுமானால் இருக்கலாம். இருத்தியது செந்தில். கரகாட்டக்காரகாரனுக்கு நான்கு கால்கள் என்றால் நான்காவது கால் செந்திலுடையது.

‘வடக்கு பட்டி ராமசாமி’ யை மறந்திருக்க மாட்டோம். அதற்கு செந்திலின் முன் குறிப்பு காட்சிகளே பலம். கடனைத் திருப்பி தராதவன் காதை கடித்து கொண்டு வரும் செந்திலின் ரத்தம் வடியும் முகமும்.. பார்வையும்… நினைத்தாலே சிரிப்பு வரும் சித்திரங்கள். ஒரு படத்தில்… செத்த பிறகும் ஆவியாய் வந்து கவுண்டமணியை பாடாய்ப் படுத்தி எடுப்பார். வேறு வழி இன்றி இவரும் செத்து அதன் பிறகு செந்திலைப் போட்டு புரட்டி எடுப்பார்.

கனவில் வந்து படம் முழுக்க சேட்டை செய்த “ஜெய்ஹிந்த்” படத்தின் வெற்றிக்கு இவர்களின் காமெடி கூட்டணியும் ஒரு காரணம் என்றால் தகும். ஒரு படத்தில் பாடகராகும் லட்சியத்தோடு இருக்கும் கவுண்டமணியை ஒரு பெரிய வீட்டில் ஊமை பேரனாக நடிக்க சொல்லி அவரைப் படுத்தி எடுக்கும் செந்தில்… அப்பாவித்தனமான… ஆனால் வில்லங்கமான கேள்விகளை கேட்டு கவுண்டமணியை இக்கட்டான சூழலில் சிக்க வைக்கும் போது நாம் சிரிக்காமல் இருக்க முடியாது.

“நாட்டாமை” – ‘டேய் தகப்பா’ – இப்போதும் ஆடு திருடின முக பாவனையில் அவர் வரும் காட்சிகளில் கண்கள் மினுங்க சிரித்து விடுவோம்.

எத்தனை அடிகள்… அத்தனையும்… அவருக்கான விருதுகள்.

கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள் என்று எங்கேயோ படித்த செய்தி.

காமெடி மட்டுமல்லாமல் திடீரென அப்பா வேஷத்தில்… குணச்சித்திர வேஷத்தில் என்று செந்தில் தனக்கான இடத்தை மிக நயமாக பதித்திருப்பார். பெரும்பாலும்… ட்ரவுசர் போட்டுக் கொண்டே கவுண்டமணியோடு வம்பிழுத்துக் கொண்டு அலையும் செந்திலின் நடிப்புக்கு… “பாய்ஸ்” இம்பர் மேசன் இஸ் வெல்த் கதாபாத்திரம்.. செந்திலின் சினிமா வாழ்வை சமநிலை செய்திருக்கும்.

கேட்க கூடிய ஒன்றை கேட்டு விட்டு கேட்காதது போல பார்க்கும் செந்தில்… இல்லையென்றால்.. வாழைப்பழ காமெடி இந்த உயரத்துக்கு வந்திருக்குமா எனத் தெரியாது. கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் பெர்சனலாக எப்படி என்று தெரியவில்லை. ஆனால் படத்தில்.. அது ஒரு காம்போ. அது ஒரு மேஜிக்.

அது நிகழ்ந்ததுக்கு நாம் சிரித்து மகிழ்ந்தது தான் சாட்சி. இரட்டையர்களின் உலகளாவிய வெற்றி. மாற்றி மாற்றி போட்டு அடித்துக் கொண்டே பந்தை நகர்த்தி சென்று கோல் அடித்து விடும் சூட்சுமம். நகைச்சுவையில்… தங்களுக்கென்று பாணி அமைத்துக் கொண்டமைக்கு செந்திலின் ஒத்துழைப்பு முக்கியமான இடம் வகித்திருக்கும் என்று நம்புகிறேன்.

‘நட்பு’ படத்தில்… பத்து பைசா வாங்கி கொண்டு காதலுக்கு தூது செல்லும்.. செந்திலை… காதல் ஒரு போதும் மறக்காது.

“ஜெண்டில் மேன்” செந்திலை தவிர்க்கவே முடியாது. “படையப்பா” வில் ரஜினியின் சட்டையை போட்டுக் கொண்டு படும் பாடு செந்திலுக்கு… சிகரம்.

“அண்ணே நீங்க SSLC பெயிலுண்ணே.. நான் ஏழாவது பாசுண்ணே” என்று சொல்லி அவருக்கே உண்டான சிரிப்பும் நக்கலுமான அளவில் வெறுப்பேத்தும் உடல்மொழிக்கு திரையரங்கில் சிரிப்பு கியாரண்டி. ‘அண்ணே….அண்ணே’ என்று கீச் குரலில் அவர் அழைக்கையிலேயே நாம் சிரிக்கத் தயாராகி விடுகிறோம். பதிலுக்கு கவுண்டமணியின் குரல் வரத் தொடங்குகையில்…. மேஜிக் ஆரம்பம் ஆகி விடும்.

செந்தில் ஓட கவுண்டமணி விரட்ட… தமிழ் சினிமாவில் அது ஒரு சிம்பல்.

எத்தனை படங்கள்.. எத்தனை கதாபாத்திரங்கள். ஒரு கலைஞனாய் முழுதாய் பரிணமித்து விட்ட செந்திலுக்கு அவர் அளவில் அவர் உச்சம் தொட்டார் என்றே நம்பலாம்.

அலுக்கவே செய்யாத விஷமங்கள் அவர்களின் கூட்டணியில் காணத் கிடைத்திருக்கிறது.

கீழ் மட்டத்தில் இருந்து எந்த விதமான ஆடைகளும் போட்டுக் கொண்டு… எந்த விதமான கதாபாத்திரத்திலும் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட கலைஞன். அவமானம் மனதுக்குள் கொள்ளும் எத்தனையோ நிகழ்வுகள் அவருக்கான கதாபாத்திரங்களுக்கு ஸ்பாட்டில் நடந்திருக்கலாம்.

அதுவும் கவுண்டமணி திட்டுவதெல்லாம் காமெடியாக இருப்பினும் சம்பந்தப்பட்ட செந்திலுக்கு அப்படி இருக்காது தானே. ஆனாலும்… பார்க்க நன்றாக இல்லை என்ற பொதுவான பொது மொழியை வைத்துக் கொண்டு அதையே தனக்கான உடல்மொழியாய் மாற்றிக் கொண்ட செந்திலின் நோக்கமெல்லாம் சினிமாவும் திரையும் தான்.

அது அவருக்கான காலத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது… தக்க வைக்கும் என்று நம்புவோம்.

 

– கவிஜி

நன்றி : கீற்று இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More