செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாகவர் ஸ்டோரி நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா

நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா

3 minutes read

எப்போதோ கேட்டது. இப்போது எழுதச் சொல்லிக் கேட்டது.

எழுதும் போதே எண்ணத்தில் நெய் மணக்கும் கத்திரிக்காய். தானாக பூக்கும் காட்டு வாசத்தில் கவனமற்று திரிவது போல தென்றலின் உள்ளார்ந்த சுவீகரம் உவமையாக நேத்து வெச்ச மீன் குழம்பு என்னையும் இழுத்ததையா..

கல்லு மாதிரி இருந்த தலைவனுக்கு ஒரு விபத்தில் ஒரு கை போய் விடுகிறது. அவன் தான் எனும் தன்னில் இருந்து கீழே இறங்கி ஒரு வாசமில்லா மலரில் ஒரு முள்ளை போல தன்னை நினைத்து அலைந்து கொண்டிருக்கிறான். ஆனாலும் அவர்கள் திருமணம் நடக்கிறது. அன்றிரவு பாதி ராத்திரியில் அவன் அசந்து தூங்குகையில் பாட்டை ஆரம்பிக்கிறாள் தலைவி.

“நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா”

திருமணம் முடிந்த இரவு… ஆனாலும் அவனுள் இருக்கும் சுய கழிவிரக்கம்… காளை மாதிரி சுற்றிக் கொண்டிருந்த காளி.. ஒரு கை இல்லாமல் கவலை அவன் மேலே ஒரு சால்வையை போல எப்போதும் கவிழ்ந்தே இருக்க… அவள் பாட்டு பாடி நாசூக்காக அவனை எழுப்புகிறாள். பெண்மை பூக்கும் நாணத்தில் சொற்கள் கூட்டி வெட்கம் காட்டுகிறாள்.

முதலில் சலித்துக் கொண்டாலும்… பிறகு… அவர்களிடையே கிடந்து தவிக்கும் காதலும்… அந்த அறையில் நந்தவனம் பூக்கிறது.

தாகமும்… “சரி சரி பாடேன்… நம்ம வாழ்க்கைய பாட்டோட ஆரம்பிக்கலாமே” என்று தனக்கே உண்டான பாணியில் காளி கேட்க… அடுத்த வரி… அமர்க்களமாய் அவள் உடல்மொழியோடு கேட்கிறது. அவளுக்கு என்ன தெரியுமா அதையே பாட்டாக்குகிறாள். அவன் சலித்து கொண்டு பாவனை செய்தாலும் அவனுக்கும் பசி ருசி தேடித்தான் இருக்கிறது.

“பச்சரிசி சோறு உப்பு கருவாடு சின்னமனூரு வாய்க்கா சேலு கெண்ட மீனு
குருத்தான மொளைக்கீரை வாடாத சிறு கீரை
நெனைக்கையிலே எனக்கு இப்போ எச்சி ஊறுது
அள்ளி தின்ன ஆசை வந்து என்னை மீறுது”

அவள் அவளுக்கு தெரிந்த மொழியில் காதலை பிசைகிறாள். அது பச்சரிசி சோறோடும்… உப்பு கருவாடோடும் நாக்கு சப்பு கொட்ட … உள்ளார்ந்த பெண்மை பூக்கும் கள்ளூறும் பார்வையும் இடையே சின்னமனூரு வாய்க்கா சேலு கெண்ட மீனாக துள்ளுவதை காண காண நாம் நமக்குள் சிரிக்கிறோம். காதலின் முழுமையில் கலவியின் யதார்த்தம் சிறுபிள்ளை விளையாட்டு போல.. நமட்டு சிரிப்பு தான் நமக்கு. அவள் அமர்ந்தபடியே கண்களாலும் தன் சமைத்த மொழியாலும் நாட்டியம் செய்வது.. உடன் இருக்கும் காளிக்கு உண்மையில் பிடித்து தான் இருக்கும். ஆனாலும் என்னடி இது என்பது போல பார்வையும்… பாவனையும்… அங்கே ஒரு அப்பா அம்மா கூத்துக்கு மேடை போடுகிறார்கள்.

“பாவக்கா கூட்டு பருப்போட சேத்து பக்குவத்த பாத்து ஆக்கி முடிச்சாச்சு”

இந்த வரிக்கு காளியின் நமட்டு சிரிப்பு அது நம்ம சிரிப்பு. தலைவன் தலைவிக்கான இடைவெளி குறையும் நேரம். சிறு கசப்பில் பெரு ருசி அறிய அவளுக்கு ஆர்வம். அது அது அப்படித்தான் என்று அவனும் ஆறடி வெட்கத்தை அனாயசமாக தருவது தட்டு நிறையும் ஆதி பசி.

“சிறுகால வறுத்தாச்சு பதம் பாத்து எடுத்தாச்சு
கேழ்வெரகு கூழுக்கது ரொம்ப பொருத்தமையா
தெனங்குடிச்சா ஒடம்பு இது ரொம்ப பெறுக்குமையா”

இப்போது அவள் தன்னை விடுவிக்கும் தானை ஆட விட்டு அவன் தோள் தொட்டு தொங்குகிறாள். கேழ்வரகு பலம் பற்றிய பவுசான சொல்லாடலில் அவள் பாதி சொல்லி விட்டாள். போதும் போதும் சேதி என்றாலும் மீதிக்கு அவன் காத்திருக்கிறான்.

திடும்மென ஒரு அமைதி. அட லூசு… கதவு திறந்து கிடக்குடி என்பது போல ஓடி சென்று கதவை அடைத்து விட்டு ஆள பாரு என்பதாக மென்று கொண்டிருக்கும் வெற்றிலையை வாயில் இரு விரலை அழுத்தி அவள் மீது துப்புவது போல ஒரு பாவனை செய்கிறான். மாறி மாறி வாய்க்குள் நீர் வைத்து கொப்பளித்து விளையாடும் களியாட்டத்தின் ஒரு பகுதியை முன் குறிப்பாக செய்திருப்பது காதலின் திருப்தி.

“பழயதுக்கு தோதா புளிச்சி இருக்கும் மோரு
பொட்டுகல்ல தேங்கா பொட்டரச்ச தொவயலு
சாம்பாரு வெங்காயம் சலிக்காது தின்னாலும்
அதுக்கு எண ஒலகத்துல இல்லவே இல்ல
அள்ளி தின்னு எனக்கு இன்னும் அலுக்கவே இல்ல”

அவள் சமையல் வழியே சாமத்தை தூவுகிறாள். அவள் வாய் ருசியே அவள் அன்பை பரிமாறுகிறது. அவன் மெல்ல அவள் மடியில் தலை சாய்க்கிறான். இத்தனை நேரம் சொன்ன சமையல் வாசத்தை அரூப நெடியில் அனுபூதி மடியில் நாமும் ஆராய்கிறோம். அதுக்கு எண ஒலகத்துல இல்லவே இல்ல அள்ளி தின்னு எனக்கு இன்னும் அலுக்கவே இல்ல” அத்தனை ஒரு தீர்க்கம். அத்தனையும் அவள் தேக மூர்க்கம். சமையல் போகிற போக்கில் நடக்கும் சம்ப்ரதாயம் அல்ல. அது தினம் தினம் உடல் வழியே உயிர் வாழ செய்து அதன் வழியே உளம் பூக்க செய்யும் தியானம். அதன் வழியே தான் அத்தனை யோகமும்… கூடவே வாழ்நாள் போகமும்.

“இத்தனைக்கும் மேலிருக்கு நெஞ்சுக்குள்ள ஆச ஒன்னு
சூசகமா சொல்ல போறேன் பொம்பள தாங்க
சூடாக இருக்குறப்போ சாப்பிட வாங்க”

மொத்த பாடலும் முடிச்சை இந்த முடிந்த வரியில் அவிழ்க்கும் அந்த தலைவியின் தாகம் தலைவனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு தலையை தடவ ஆரம்பிக்கிறது. நமக்கு கண்களை மூடிக்கொண்டாள் தேவலை என்றாகிறது. பெருமூச்சு விட்டு பேரின்பம் நம் வெட்கத்தின் வழியே திரை தாண்ட… அவள் வரியை மீண்டும் சொல்லலாம்.

“இத்தனைக்கும் மேலிருக்கு நெஞ்சுக்குள்ள ஆச ஒன்னு
சூசகமா சொல்ல போறேன் பொம்பள தாங்க
சூடாக இருக்குறப்போ சாப்பிட வாங்க”

எத்தனை பெரிய கள்ளி அவள். சூசகமா பாடி ஆடி… காளியும் கள்ளன் தான்… நெஞ்சோடு சாய்ந்த அவன் கண்கள் மெல்ல மேலேறி மெய்ம்மறந்து மலர் வசிக்கும் அவள் முகத்தை காணுகிறான். இளையராஜா போட்டு வெளுத்து வாங்க… இனி மேலே வண்ண திரையில்… ஹாஹ்.

“நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா”

– கவிஜி

 

நன்றி : கீற்று இணையம்.காம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More