ஒவ்வொரு காட்சியிலும், வசனத்திலும் தனித்துவத்தை காட்டுகிறார் எஸ்.ஜே.சூர்யா என்று விக்ரம் தெரிவித்துள்ளார்.
மார்ச் 27-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘வீர தீர சூரன்’. இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஹைதராபாத்தில் நடைபெற்ற விளம்பரப்படுத்தும் நிகழ்வில் விக்ரம் பேசும்போது, “’தூள்’, ‘சாமி’ என மாஸாக ரசிகர்கள் ரசிக்கும் வகையில் நடித்திருக்கிறேன். தற்போது கூட மாஸாகத்தான் நடித்து வருகிறேன். இருந்தாலும் ரஸ்டிக்காக நடிக்க வேண்டும் என விரும்பினேன்.
இதைத்தான் இயக்குநர் அருண்குமாரிடம் என்னுடைய ரசிகர்கள் எதிர்பார்ப்பதை போல் படம் கொடுக்க வேண்டும் என்று சொன்னேன். ரசிகர்களுக்காக அவர்கள் ரசிக்கும் படத்தை கொடுப்பதற்காக நானும், அருண்குமாரும் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். இது எமோஷனலான படம். அனைத்தும் உணர்வுபூர்வமாக இருக்கும்.
இந்தப் படத்தில் எஸ் ஜே சூர்யா நடிக்கிறார் என்று சொன்னவுடன் மகிழ்ச்சி அடைந்தேன். இந்தப் படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் வெவ்வேறு பரிமாணங்கள் இருக்கும். நல்லவர்களாகவும் இருப்பார்கள். கெட்டவர்களாகவும் இருப்பார்கள்.
நானும், எஸ் ஜே சூர்யாவும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். அவரது இயக்கத்தில் வெளியான ‘வாலி’ படமும், என்னுடைய நடிப்பில் வெளியான ‘சேது’ படமும் சமகாலகட்டத்தில் வெளியானது. நாங்கள் இருவரும் பல விருதுகளை சமமாக வென்றோம். அதன் பிறகு அவர் நடிக்க வந்து விட்டார். அவருடைய நடிப்பை பார்த்தேன். ரசித்தேன். ‘ஸ்பைடர்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றபோது அந்த வழியாக கடந்து சென்றேன். அப்போது அவர் மகேஷ்பாபு உடன் நடிப்பதாக சொன்னார்கள்.
அதன் பிறகு ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நடித்து தன்னை மெருகேற்றிக் கொண்டிருக்கிறார். அவர் நடிப்பில் வெளியான ‘மார்க் ஆண்டனி’, ‘மாநாடு’, ‘டான்’ என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். இதை பார்க்கும் போது ஹாலிவுட் நடிகர்களான ராபர்ட் டி நிரோ, அல்பசினோ போன்ற நடிகர்கள் தான் நினைவுக்கு வரூகிறார்கள். எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு முழுவதும் வித்தியாசமாக இருக்கிறது. அவரிடமிருந்து நான் சில விஷயங்களை கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு வசனத்திலும் தனித்துவத்தை காட்டுகிறார். அவருடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது.
இது ஒரு கமர்ஷியல் படம்தான் என்றாலும் ஒவ்வொரு நடிகர்களுக்கும் அவர்களுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் படமாகவும் இருக்கிறது. இந்தப் படம் பக்கா மாஸான கமர்ஷியல் படம் அல்ல. ஆனால் மாஸான காட்சிகள் இருக்கிறது. கமர்ஷியல் எலிமெண்ட் இருக்கிறது. ஆனால் அவை நேரடியாக இருக்காது. ஆனாலும் படம் பார்க்கும் ரசிகர்களை உணர்வுபூர்வமாக தொடர்பு கொள்ளக்கூடிய படமாக இருக்கும். தெலுங்கில் அருண்குமார் இயக்கிய ‘சேதுபதி’ படமும், ‘சித்தா’ படமும் வெளியாகி இருக்கிறது. இந்த இரண்டு படங்களின் கலவையாக இந்த ‘வீரதீர சூரன் ‘ இருக்கும்” என்று தெரிவித்துள்ளார் விக்ரம்.
அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சுரமுடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘வீர தீர சூரன்’. ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
நன்றி : இந்து தமிழ் திசை