மிக்கி மவுஸின் கதை அதன் கதை மட்டுமல்ல மொத்த டிஸ்னி நிறுவனத்தின் கதை. இன்றும் டிஸ்னியை ‘மிக்கி மவுஸ் கம்பெனி’ என்றுதான் பலரும் குறிப்பிடுகின்றனர்.
டிஸ்னி என்பது இன்றுதான் ஒரு மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனம்….100 வருடங்களுக்கு முன்னால் அது வெறும் ஒரு பெயர். அந்தப் பெயரை வைத்து ஒரு பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தையே உருவாக்கியவர் வால்ட் டிஸ்னி. இதற்குக் காரணம், ஒரு எலி என்றால் நம்பமுடிகிறதா…
ஆம், டிஸ்னியின் வெற்றிக் கதையின் ஓப்பனிங் சீன் சரியாக இந்த நாளில், ஏப்ரல் 7-ம் தேதிதான் அரங்கேறியது எனச் சொல்லலாம். 1928 ஆண்டு, இந்தத் தேதியில்தான் புகழ்பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரமான மிக்கி மவுஸை வரைந்தார் வால்ட் டிஸ்னி.
-வால்ட் டிஸ்னி
“எல்லாமே ஒரு எலியிலிருந்து தொடங்கியது என்பதை என்றும் நாங்கள் மறவாமல் இருப்போம் என நம்புகிறோம்” என டிஸ்னி நிறுவனத்தின் வெற்றி குறித்து 1954-ல் வால்ட் டிஸ்னி குறிப்பிட்டது இது. அப்படியான மிக்கி மவுஸ் வரலாற்றைத்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.
செய்தித்தாள்களில் வரும் படங்களைப் பிரதியெடுத்து வரைவது, விலங்குகளுக்கு உடை அணிவித்து கதாபாத்திரங்களாக வரைவது, வரைந்த படங்களுக்கு கலர் செய்வது எனச் சிறு வயதிலிருந்தே வரைகலை ஆர்வம் கொண்டவராகவே வளர்ந்தார் வால்ட் டிஸ்னி. தனது பள்ளிப்பருவத்தில் சொந்தச் செய்தித்தாளின் கார்ட்டூனிஸ்ட்டாக இருந்தார். ஆனால், படிப்பில் அதே அளவுக்குத் தேர்ச்சி இல்லை. வரைவதற்கே டிஸ்னிக்கு நேரம் சரியாக இருந்தது. ஆனால், அவரின் கார்ட்டூன்களுக்குச் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. நாளிதழ்கள், வார இதழ்கள் என அனைத்தும் அவரின் ஓவியங்களை நிராகரித்தன. அப்படியும் அவர் பென்சிலைக் கைவிடவில்லை. இப்படியாக வரைதலும் வரைதல் நிமித்தமுமாக இருந்த டிஸ்னியின் வாழ்க்கை திக்கு தெரியாமல் போய்க்கொண்டிருந்தது. ராணுவத்தில் சேர்ந்தார், அப்படியும் ரெட் கிராஸ் ஆம்புலன்ஸ்களில் கார்ட்டூன் வரைவது, ராணுவ இதழ்களுக்கு வரைவது எனத் துப்பாக்கியைவிட பென்சிலுக்கே அதிக வேலை வைத்துவந்தார், சக வீரர்களைத் தனது கைவண்ணம் மூலம் சந்தோஷப்படுத்திக்கொண்டே இருந்தார்.
அங்கிருந்து வரைவதுதான் நமது பிறவிப் பலன் எனத் தீர்க்கமாக முடிவெடுத்து படிப்படியாக முன்னேறினார். பல தோல்விகளைச் சந்தித்தார். பல நிறுவனங்களில் ஆர்ட்டிஸ்ட்டாக வேலைபார்த்தார். அப்போது ‘அனிமேஷன்’ என்னும் மேஜிக் பற்றி வால்ட் டிஸ்னிக்குத் தெரிய வந்தது. அதைக் கற்றுக்கொண்டார். பின்பு ஹாலிவுட் ஸ்டூடியோக்களின் கதவுகளைத் தட்டினார், யாரும் வாய்ப்பு தரவில்லை. பல போராட்டங்களுக்கு ‘வால்ட் டிஸ்னி’ என்னும் சிறிய அனிமேஷன் நிறுவனம் தொடங்கும் வரை வளர்ந்தார் வால்ட் டிஸ்னி. பிற விளம்பர நிறுவனங்களுக்காகவும் ஸ்டூடியோக்களுக்காகவும் அனிமேஷன் வேலைகள் செய்துகொடுத்தது அந்த நிறுவனம். 1920-களில் அனிமேஷன் பெரிய அளவில் வளர்ச்சி கண்டுவிடவில்லை, 2D செல் அனிமேஷன் முறைதான் உச்சம் தொடத்தொடங்கியிருந்த காலம் அது. அதாவது ஒவ்வொரு ஃப்ரேம்மாக வரைந்து அதை ஓடவிட்டு காட்சியாக்கவேண்டும். அப்படியும் டிஸ்னிக்குப் பல நிறுவனங்கள் போட்டியாகச் சந்தையில் இருந்தன.
அப்போதுதான் ‘Oswald the Lucky Rabbit’ என்ற கதாபாத்திரத்தை வைத்து கார்ட்டூன் குறும்படங்கள் எடுத்தார் டிஸ்னி. அதைப் பிரபல யுனிவர்சல் ஸ்டூடியோஸ் திரையரங்குக்கு எடுத்துச்செல்ல செம ஹிட்டடித்தது ஆஸ்வால்ட். ஆனால், காப்புரிமை பஞ்சாயத்தில் அந்தக் கதாபாத்திரம் யுனிவர்சல் ஸ்டூடியோவின் கைகளுக்குச் சென்றது.
இதனால், சோர்வடைந்த டிஸ்னி, இனி உரிமம் நம்மிடம் இருக்கும் கதாபாத்திரங்களைக் கொண்டு மட்டுமே வேலை செய்யவேண்டும் என்று தீர்மான முடிவெடுத்தார். ஆஸ்வால்டுக்கு மாற்றாக ஒரு கதாபாத்திரம் வேண்டும் என 1928, ஏப்ரல் 7-ம் தேதி வரைந்த கதாபாத்திரம்தான், மார்டிமர் மவுஸ் (Mortimer Mouse). தனது ஸ்டூடியோவில் சுற்றித்திரிந்த எலியை மையமாக வைத்து டிஸ்னி வரைந்த கதாபாத்திரம் அது. மனைவியின் அறிவுறுத்தலின் பெயரில் இந்த மார்டிமர் மவுஸ், மிக்கி மவுஸ் ஆனது. 1928-ம் ஆண்டு மே மாதம் வெளியான ‘பிளைன் கிரேசி'(Plane Crazy) என்ற முடிவுறாத அனிமேஷன் குறும்படத்தின் சோதனைத் திரையிடலில் முதல்முதலாக மிக்கி மவுஸை மக்கள் பார்த்தனர். அதன்பின் சில மாதங்களில் தனது முதல் அதிகாரபூர்வ அறிமுகத்தை ஸ்டீம் போட் வில்லி என்ற குறும்படம் மூலம் பெற்றது மிக்கி மவுஸ். அதில் கப்பல் ஓட்டிக்கொண்டே மிக்கி மவுஸ் விசிலடிக்கும் காட்சி கடந்த நூற்றாண்டுத் திரை வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த மிக முக்கியமான காட்சி.
அந்தக் குறும்படத்தில் மிக்கி மவுஸ் சிரிப்பது போன்ற சத்தங்களுக்கு வால்ட் டிஸ்னியே பின்னணி கொடுத்திருந்தார். அதன்பின் பல வருடங்களுக்கு மிக்கிமவுஸ், வால்ட் டிஸ்னி குரலுடன்தான் வெளிவந்தது. 1929-ல் வெளிவந்த ‘தி கார்னிவல் கிட்’ (The Carnival Kid) என்ற குறும்படத்தில் ‘ஹாட் டாக்ஸ், ஹாட் டாக்ஸ்’ எனத் தனது முதல் வார்த்தைகளைப் பேசியது மிக்கி மவுஸ்.
வால்ட் டிஸ்னியின் மிக்கி மவுஸ் கார்ட்டூன்களின் வெற்றிக்கு முக்கியக் காரணம், அப்போது புதிதாக வளர்ந்துகொண்டிருந்த ஒரு தொழில்நுட்பம். அது ஆடியோ. வெறும் மௌனப் படங்கள் வெளிவந்துகொண்டிருந்த காலத்தில் அனிமேஷன் காட்சிகளுக்கு சிங்க் சவுண்ட் செய்தார் வால்ட் டிஸ்னி. அதனால்தான் மிக்கி மவுஸ் விசிலடித்ததும் பிரமித்தனர் பார்வையாளர்கள். இதுமட்டுமல்லாமல் மற்ற அனைத்துச் சத்தங்களையும் ஒரே நேரத்தில் ஒவ்வொரு கலைஞரையும் வைத்து சரியாக ரெகார்டு செய்து சாதித்தார் வால்ட் டிஸ்னி. ஒலியை இன்னுமொரு கதாபாத்திரமாகப் பாவித்தார்.
இது மற்ற கார்ட்டூன்களிலிருந்து மிக்கி கார்ட்டூன்களை வேறுபடுத்தி ஸ்பெஷலாக்கியது. மிக்கியின் புகழ் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. டிஸ்னி, போட்டி நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறிக்கொண்டே இருந்தது. மிக்கி குறும்படங்கள் தொடர்ந்து ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றன. இதுமட்டுமல்ல, மிக்கியின் உருவாக்கத்திற்காகவும், அனிமேஷன் உலகில் செய்த பிற புரட்சிகளுக்காகவும் கௌரவ ஆஸ்கர் விருது வால்ட் டிஸ்னிக்குக் கொடுக்கப்பட்டது.
அப்போது குறும்படங்கள், மியூசிக் வீடியோக்கள் எனத் தொடர்ந்து தோன்றிவந்த மிக்கி கிட்டத்தட்ட ஒரு சினிமா நட்சத்திரமாகவே மாறியது. இதன் விளைவாக 1978-ம் ஆண்டு Hollywood Walk of Fame-ல் இடம்பெற்ற முதல் கார்ட்டூன் கதாபாத்திரமானது மிக்கி மவுஸ். வால்ட் டிஸ்னி மறைந்த பின்னும் முழு நீளப் படங்கள், கேம்கள், டிவி நிகழ்ச்சிகள், டிஸ்னிலேண்ட்டில் இருக்கும் பொம்மைகள் என இன்றுவரை வெவ்வேறு வடிவங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறது மிக்கி. ஏன் மிக்கியின் தோழனான டொனால்டு டக் கூட அவ்வளவுதானா மிக்கியின் கதை எனக் கேட்கிறீர்களா…இல்லை. மிக்கி மவுஸின் கதை, அதன் கதை மட்டுமல்ல மொத்த டிஸ்னி நிறுவனத்தின் கதை. இன்றும் டிஸ்னியை ‘மிக்கி மவுஸ் கம்பெனி’ என்றுதான் பலரும் குறிப்பிடுகின்றனர்.
மிக்கி கொடுத்த மைலேஜில் வால்ட் டிஸ்னி தனது பல கனவுகளை நனவாக்கினார். முழு நீள அனிமேஷன் படம் எடுக்கவேண்டும் என்பதுதான் வால்ட் டிஸ்னியின் பல நாள் கனவாக இருந்தது. அது 1937-ல் ‘Snow White and the Seven Dwarfs’ மூலம் சாத்தியமானது. ‘பொம்மை படத்தில் இத்தனை நேர்த்தியா?’ என மக்களை பிரமிக்கவைத்தது அந்தப் படம். அடுத்த படங்கள் வெளியாகியபோதும் உலகப்போரால் மீண்டும் சறுக்கத்தொடங்கியது. அப்போதும் டிஸ்னியைக் கீழே விழுந்துவிடாமல் காப்பாற்றியது மிக்கி மவுஸ்தான். அப்படி, சின்னச் சின்னத் தடைகள் வந்தாலும் தொடர்ந்து அனிமேஷன் உலகை ஆட்டிப்படைத்தது டிஸ்னி. மிக்கியும் தோற்ற அளவில் மெருகேறிக்கொண்டே இருந்தது.
வால்ட் டிஸ்னியின் மற்றொரு கனவாக இருந்தது டிஸ்னிலேண்ட் தீம் பார்க்குகள். அதுவும் மிக்கி புண்ணியத்தில் நனவானது. அனிமேஷன் தாண்டிய திரை முயற்சிகளையும் எடுக்கத்தொடங்கியது டிஸ்னி. அதன்பின் டிஸ்னியின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி என்பதே இல்லை.
இன்று கிட்டத்தட்ட பாதி ஹாலிவுட்டையே குத்தகைக்கு எடுத்துவைத்திருக்கிறது டிஸ்னி. மார்வெல் ஸ்டூடியோஸ், ஸ்டார்வார்ஸ், ஃபாக்ஸ் என முக்கிய ஹாலிவுட் ஸ்டூடியோக்கள் மற்றும் தயாரிப்புகள் இப்போது டிஸ்னி கைவசம். ஏன், நம்மூர் ஸ்டார் நெட்வொர்க் கூட டிஸ்னிக்குதான் சொந்தம். அதாவது நம்ம ஊர் லொள்ளு சபா வரைக்கும் டிஸ்னி கையில்தான் இருக்கிறது. இப்படி அவெஞ்சர்ஸ் டு சூப்பர்சிங்கர் வரை தன் கையில் வைத்துக்கொண்டு பொழுதுபோக்கு உலகையே ஆண்டுகொண்டிருக்கும் டிஸ்னியின் ஆட்டம் சரியாக இந்த நாளில், மிக்கி மவுஸ் வரையப்பட்ட நாளில்தான் தொடங்கியது.
ஒரு ஐடியா உலகையே மாற்றலாம் எனச் சொல்வார்கள் தெரியுமா…அப்படியான ஒரு ஐடியாதான் மிக்கி மவுஸ்!
நன்றி : ஆனந்த விகடன்