கண் மூடிடாத பொழுதுகளை கழித்து
கனவுகளும் கிழிந்த காகிதங்களாய்
பறந்தது கூட புரியவில்லை
கதிரவன் வெளிச்சம் காணாது
இருள்களை சூழ்ந்திட்ட கார்மேகங்கள்
மழை பொழிவா இல்லை
குண்டுகள் இறங்கிய நிலத்தினுள்
நஞ்சிகளாய் மேவிடும் புகார் வியூகம் -குண்டு மழை
கொட்டியவன் ஆடிய தேசமிது
அன்று விசேட விடுமுறை போலும் மிஞ்சிய
மான்களை ஏற்ற வரிசைகட்டி புதிய சேனை
உருவாகியது ஓநாய்கள்
யாருக்கு என்ன தெரியும் மாயத்தோற்றம் பூசி
ஏற்றியது எவனோ
மான்களை வேட்டையயாடி காடுகள்
தனிமையில் உறைந்தது
ஓநாய்களின் வெறியாட்டம் ஓய்ந்தது
புண்பட்ட உயிர்கள் ஓலமிட ஓநாய்கள்
காப்பாற்றிடுமா கண்ட இடங்களில்
கல்லறை காட்டியது மிஞ்சியது எல்லாம்
கூண்டுக்குள் சிக்குண்டது
அது ஒரு புதிய காடு
போகும் வழியில் ஓநாய்குட்டிகளின்
பேரானந்தம்
கூண்டுக்குள் அடைபட்டழும் மான்களுக்கு
புதிய உபசரிப்புக்கள்
ஓடிய களைப்பில் கிடைத்தது அடிசில்
பாவம் திக்குத்தெரியாக்காட்டில்
வசமாக சிக்கியது புரியவில்லை
பருந்துகளும் ஓநாய்களும் மிச்சம் விட்ட
துண்டுகளை நரிகள் புதைத்தழித்தது.
காகங்களும் பருந்துகளும் கூடி கழித்து
கொண்டாடி தீர்த்தது
மானினகளின் தேசத்தினை கொன்று
கொள்ளையடித்த திருப்தியில்
திமிரெடுத்தாடியது ஓநாய்கள்
பல மையில் தூரம் கடந்தது
முள்வேலிச் சட்டத்தில் அடைத்தது
மானினத்தை
பூர்விக காடுகள் அசைவற்று கிடக்கிறது
ஓநாய்களின் வெறியாட்டம் மேலோங்கி கிடக்கிறது
நிம்மதியை குலைத்து நிர்கதியாகிய நிலையில்
பாசாங்கு செய்தது.
மீண்டும் மீண்டும் இயலாமைகளை தொடரமுடியாமல்
கூடாரத்தை கிழித்தெறிந்து பூர்விக தேசத்தை
நோக்கி செல்ல முனைகிறது.
முள்வேலியை தாண்டி கடந்திட முடியாமல்
மண்டியிட்ட கண்களினோரம் கசிந்திடும் துளிகளை
துடைத்திட முடியாமல் நீறு படிந்த நிலத்தின் புழுக்களாய் நெளிகிறது.
கேசுதன்