கர்ப்பக் காலத்தில் கூடுதலாக ஹார்மோன் உற்பத்திகள் அதிகமாக இருக்கும். தாயின் இரத்த அளவும் அதிகரிக்கும். இரத்த அளவுக்கு ஏற்ப இரத்த சர்க்கரையின் அளவும் அதிகரிக்கும்.
இந்த அளவை ஈடுசெய்வதற்காக அதிகமான இன்சுலினை கணையம் சுரக்கவேண்டியிருக்கும். இந்த செயல்பாட்டில் குறைபாடு தோன்றி கணையம் போதுமான இன்சுலினை சுரக்காவிட்டால் இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இவ்வாறுதான் கர்ப்பக் காலத்தில் சர்க்கரைவியாதி தோன்றுகிறது. இதைப் பரிசோதனை செய்யாவிட்டால் தாய்க்கு சர்க்கரை வியாதி இருப்பது தெரியாது. குழந்தை பிறந்ததும் இந்தப் பிரச்சனை சரியாகிவிடும்.
பாதிப்புகள்:
கர்ப்பக் காலத்தில் சுமார் பதினாறு முதல் பதினேழு விழுக்காடு பெண்கள் சர்க்கரை வியாதியால் பாதிக்கப் படுகிறார்கள்.
கருத்தரித்த காலத்தில் சர்க்கரை வியாதி இருந்து குழந்தை பிறக்க நேரிட்டால் குறை பிரசவம், அதிக எடையுடன் குழந்தை இறந்துவிடுதல், பிறவிலேயே ஊனமாகப் பிறத்தல் ஆகியவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
கர்ப்பக் கால பரிசோதனை:
ஒவ்வொரு மாதமும் பெண்ணின் கரு வளர்வதால் தாய்க்கு அதிக ஊட்டம் தேவைப்படுகிறது. இரத்த அளவும் அதிகரிக்கிறது.
இன்சுலின் சுரப்பும் அதிகரிக்கிறது. எனவே மூன்று மாதத்திற்கு ஒருமுறை வீதம் குழந்தை பிறக்கும் வரை கர்பிணிகள் சர்க்கரை வியாதிக்கான பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும்.
குறிப்பாக, கர்ப்பம் தரித்த பதினாறாவது வாரம் (நான்காம் மாதம்), இருபத்து நான்காம் வாரம் (ஆறாவது மாதம்), முப்பத்திரண்டாவது வாரம் (எட்டாம் மாதம்).
இந்த வாரங்களில் கண்டிப்பாக இரத்த சர்க்கரைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
கர்ப்பிணிக்கு இரத்தத்தில் சர்க்கரை அதிகமாக இருத்தல்:
கர்ப்பக் காலத்தில் ஊசி மருந்து போடக்கூடாது எனக் கூறப் படுவதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இன்சுலின் ஊசிகள் குழந்தைக்கு எவ்வித சேதத்தையும் ஏற்படுத்துவது இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்சுலின் ஊசி மருந்து எடுத்துக்கொள்வதில் எவ்விதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை.
ஆனால் மாத்திரை எடுத்துக்கொள்வதைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.
சர்க்கரை வியாதி:
கர்ப்பத்தின் போது ஏற்பட்டு குழந்தை பிறந்தவுடன் மறைந்து விடுகிறது. இந்நோய் கண்டவர்களுக்கு பிற்காலத்தில் இரண்டாம் வகை சர்க்கரை வியாதி வரும் வாய்ப்புகள் அதிகம். கர்ப்ப காலத்தில் இந்நோயை கட்டுப்படுத்தாமல் இருந்தால் பிறக்கும் குழந்தை ஊனமாகப் பிறக்க வாய்ப்புகள் உள்ளன.
நன்றி : தமிழ்க் குரல்