செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் பல் சொத்தை ஏற்பட காரணங்கள்

பல் சொத்தை ஏற்பட காரணங்கள்

6 minutes read

மனிதர்களுக்கு கடவுள் கொடுத்த வரம் சிரிப்பு என்பார்கள்! அந்த சிரிப்பு அழகாக இருப்பதற்கு காரணம் பற்கள் மட்டுமே. சிரிப்பதற்கு மட்டுமல்ல சாப்பிடுவதிலிருந்து இருந்து பல விஷயங்களுக்கும் இந்த பற்களின் ஆரோக்கியம் அவசியம்.ஆனால் இன்று மிகவும் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல் சொத்தை பிரச்சினையால் அவதிப்படுகின்றனர். பல் வலியை விட கொடுமையான வலி எதுவுமில்லை என்று கேள்விப்பட்டிருப்போம். இது மாதிரி எல்லாம் சிரமப்படாமல் இருக்க வருமுன் காப்பது நல்லது.

இந்த பதிவில் பல் சொத்தை ஏற்படுவதற்கான காரணங்கள், அதைத் தடுப்பதற்கான வழிகள் மற்றும் பாட்டி வைத்திய குறிப்புகள் பலதையும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

பல் சொத்தை என்றால் என்ன ?
எந்த உணவைச் சாப்பிட்ட பிறகும் வாயைச் சுத்தமாகக் கழுவிக் கொள்ளுதல் அவசியம். அப்படி சுத்தமாக வாயைக் கழுவாத இருக்கும்பொழுது கிருமிகள்(பாக்டீரியாக்கள்) பற்களைச் சென்று தாக்கும். இதனால் பல் சொத்தை பாதிப்பு ஏற்படும். பல் சொத்தை ஏற்பட்ட ஆரம்பக்கட்டத்தில் சாதாரண கரும்புள்ளி தென்படும். பிறகு பல்லில் சிறு ஓட்டை ஏற்படும்.

பல் சொத்தை எதனால் ஏற்படுகிறது?
சரியான முறையில் பற்களைத் துலக்காது.
இரண்டு வேளைகளும் பல் துலக்குவது.
உணவு சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிக்கும் பழக்கத்தைக் கடைப்பிடிக்காமல் இருத்தல்.
அதிகளவு இனிப்பு வகைகளைச் சாப்பிடுதல்.
பால் அருந்திய பின் வாயைச் சுத்தம் செய்யாமல் குழந்தைகளைத் தூங்க வைத்தல்.

பல் சொத்தை ஏற்பட்டால் வேறு என்னென்ன பாதிப்புகள் வரக்கூடும்?
பல் சொத்தையைச் சரியாகக் கவனிக்காவிட்டால், அது அதிகமாகி, மற்ற பற்களிலும் பரவிவிடும்.
நாளடைவில் இது ஆழமாகி, பற்களின் வேர்களையும் தாக்கும்.
ஈறுகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.
பற்களின் எனாமல் பாதிக்கப்படும்.
பற்களில் குழிகள் ஏற்படும். பற்கள் உடைந்து போய்விடும்.
இதனால் பற்கள் மற்றும் ஈறுகளுக்கு இடையே நிலையான அமைப்பு இல்லாமல் போய் விடும்.
லேசான பல் வலி என்ற அளவில் ஆரம்பித்து மிகவும் கடுமையான வலி ஏற்படும்.
ஈறுகளில் சீல் ஏற்படும்.
கிருமிகளின் தாக்குதல் அதிகமாக அதிகமாகப் பற்களைத் தாங்கும் எலும்புகள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றன. இதற்குச் சரியான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உயிருக்கே ஆபத்து வரும் சூழல் உள்ளது.
நாளடைவில் சொத்தைப் பல்லைப் பிடுங்கி,நீக்க வேண்டிய நிலை உருவாகிவிடும்.
பல் சொத்தைக்கான மருத்துவச் சிகிச்சை என்ன?
எனாமல் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அந்தப் பகுதியைச் சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு மருத்துவர் நிரந்தரமாகப் பல் ஓட்டையை அடைத்து விடுவார்.ஒருவேளை ஓட்டை மிகவும் ஆழமாக இருந்தால் தற்காலிக அடைப்பை(சிமெண்ட் அடைப்பு) ஏற்படுத்தி மேலும் சொத்தை பரவாமல் தடுத்து விடுவார்.

ஒரு சிலருக்குப் பல் சொத்தை கடுமையான அளவு ஏற்பட்டிருக்கும். இதனால் பற்களை அகற்ற வேண்டிய சூழல் ஏற்படும்.ஆனால் தற்போது ரூட் கேனல் சிகிச்சை முறை வந்துள்ளது. இந்த முறையில் பற்களை அகற்றாமல் பற்களின் வேர்களில் சிகிச்சை அளித்துக் குணப்படுத்துவதாக முடியும்.

பல் வலி/பல் சொத்தை சரியாக பாட்டி வைத்திய குறிப்புகள்
பல் வலிக்கு மூலகாரணம் பற்சொத்தை என்று பார்த்தோம். அந்தவகையில் கீழே பல் வலியைக் குறைக்க உள்ள பாட்டி வைத்திய குறிப்புகளைப் பார்க்கலாம்.

துளசி இலை

சிறிதளவு துளசி இலைகள் ,உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றை வலி உள்ள இடத்தில் வைத்துத் தேய்க்கவேண்டும். இவ்வாறு செய்தால் பல் வலி குணமாகும்.

கிராம்பு

சொத்தையான பல்லில் கிராம்பை வைத்து சிறிது நேரம் அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது சிறிது நேரத்தில் பல் வலி சரியாகிவிடும்.

உப்புத்தண்ணீர்

மிதமான சுடுநீரில் கல் உப்பைக் கலந்து கொள்ள வேண்டும். தினமும் ஒரு வேளை இந்த நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கிருமிகள் கொல்லப்படும். பல் சொத்தையில் இருந்து விடுபடலாம்.

மஞ்சள்

மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி. பல் சொத்தையான இடத்தில் மஞ்சளைத் தடவிக்கொள்ள வேண்டும். சில நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் வாய் கொப்பளித்துக் கொள்ளுதல் அவசியம். இதைத் தினமும் செய்து வர பல் சொத்தை குணமாகும்.

வேப்பிலை

வேப்பிலை சாற்றைப் பல் சொத்தை உள்ள இடத்தில் தடவ வேண்டும். சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு சற்று மிதமான சுடுநீரில் வாய் கொப்பளித்தல் வேண்டும். வேம்பு இயற்கையாகவே கிருமிகளை அழிக்கும் குணம் கொண்டது. இவ்வாறு செய்வதன் மூலம் பல் சொத்தை குணமாகும். பல்வலி தீரும். அந்த காலத்தில் இந்த வேப்பிலையின் மகத்துவத்தை அறிந்துதான் நம் முன்னோர்கள் வேப்பங்குச்சியில் பல் துலக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பல் சொத்தை ஏற்படாமல் இருக்க என்ன வழி?
இனிப்புகளைத் தவிருங்கள்

இனிப்பு பண்டங்களைச் சாப்பிட்டு விட்டு சரியாக வாய் கொப்பளிக்காமல் இருப்பதே பல் சொத்தை ஏற்படுவதற்கான மூலகாரணம். சாக்லேட் ,இனிப்பு பலகாரங்கள் , ஐஸ்கிரீம் ,கேக் போன்ற உணவுகளில் சர்க்கரை அதிக அளவு காணப்படும். இவற்றைச் சாப்பிடும் பொழுது இதன் துகள்கள் பல் இடுக்கில் ஒட்டிக்கொள்ளும்.வாயில் ஏற்கனவே உள்ள பாக்டீரியா இவற்றுடன் செயல்பட்டு லாக்டிக் அமிலத்தைச் சுரக்கச் செய்து விடும்.இந்த அமிலமே பற்களின் வெளிப்பூச்சான எனாமலை அழிக்கத் தொடங்கும். இதன் அடுத்தகட்ட நிலையாகப் பற்கள் சொத்தையாகி விடும்.

பூண்டு

பூண்டில் அதிகளவு சல்பர் உள்ளது.இது பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி கொண்டது. இந்த பூண்டை லேசாக தட்டி உப்பில் கலந்து சொத்தையான பல்லின் மீது வைத்து அழுத்தவும். இதைத் தினமும் செய்து வர பல் சொத்தை நீங்கி நல்ல பலன் கிட்டும்.

எருக்கம்பால்

எருக்கம் பாலை எடுத்து பல் சொத்தை உள்ள இடத்தில் தடவ வேண்டும். இந்த முறையைச் சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் பல் சொத்தை சரியாகும்.

இலவங்கப் பொடி

பல் சொத்தை உள்ள இடத்தில் இலவங்கப் பொடியைத் தடவ வேண்டும். சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு மிதமான சுடுநீரில் வாய் கொப்பளித்துக் கொள்வது அவசியம். இதைத் தினமும் செய்து வர பல் சொத்தை, பல்வலி போன்ற பிரச்சனைகள் தீரும்.

ஆயில் புல்லிங்

தினமும் நல்லெண்ணெய் வாயில் ஊற்றி பத்து நிமிடம் அளவிற்கு வைத்துக் கொப்பளிக்க வேண்டும். இதன் மூலம் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு பல் ஆரோக்கியம் மேம்படும்.

கொய்யா இலைகள்

கொய்யா இலைகளைப் பறித்து தண்ணீரில் போட்டுக் காய்ச்ச வேண்டும்.இந்த நீரைக் கொண்டு தினமும் வாய்கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது பல்வலி ,பல் சொத்தைச் சரியாகும்.

அறுகம்புல்

அறுகம்புல் சாற்றைப் பல் சொத்தை ஏற்பட இடத்தில் தடவ வேண்டும். சுமார் 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும்.இதைத் தினமும் செய்து வரும் பொழுது பல்நோய் குணமடையும்.

பல் சொத்தை ஏற்படாமல் இருக்க சில வழிகள்
சுத்தமாகப் பராமரியுங்கள்

பற்களைச் சுத்தமாகப் பராமரிக்காவிட்டால் பற்களில் சொத்தை ஏற்படும். அதனால் பற்களைச் சுத்தமாகப் பராமரிப்பது மிக முக்கியம். காலை எழுந்தவுடனும் இரவு தூங்கும் முன்பும் மறக்காமல் பற்களைச் சுத்தமாகத் துலக்க வேண்டும். பற்களில் கறை படியாமல் பார்த்துக் கொள்வது மிக அவசியம். அதேபோல பற்களை அரைகுறையாகத் துலக்கக் கூடாது. சரியான வழியில் துலக்கினால் மட்டுமே இடுக்குகளில் புகுந்து அழுக்குகள் அனைத்தும் வெளியேறும்.

இவற்றைச் செய்யாதீர்கள்

குண்டூசி,ஹேர் பின் போன்ற கூர்மையான பொருட்களை வைத்து பற்களை நோண்ட வேண்டாம். இது பற்களையும் வேர்களையும் பாதிக்கும். சில சமயம் ஈறுகளில் புண் ஏற்பட்டு வீக்கம் வந்து விடும். சில சமயங்களில் சீழ் கூட பிடித்துவிடும். எனவே இவற்றைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

அதேபோல வெற்றிலை ,பான்மசாலா ,புகையிலை போன்றவை பற்களின் ஆரோக்கியத்தைச் சிதைக்கும். இவை அனைத்துமே முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.

பரிசோதனை

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை என்ற அளவில் பல் மருத்துவரைச் சந்தித்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். எந்த பிரச்சனையையும் முளையிலே கிள்ளி விட்டால் பெரிய பிரச்சனைகள் வராமல் தடுத்துக் கொள்ள முடியும்.

பழ வகைகள்

அன்னாசி ,ஆரஞ்சு மற்றும் திராட்சைப் பழங்களைத் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். பற்களில் சொத்தை ஏற்படாமல் தடுக்கப்படும். இந்த பழ வகைகளில் நிறைந்துள்ள விட்டமின் சி சத்து பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அதிகளவு கைகொடுக்கும்.

ஆலம் விழுது

ஆலம் விழுதுகளைக் கொண்டு தினமும் பல் தேய்க்கலாம். இதன்மூலம் பற்கள் உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் என்பது நிச்சயம்.

நன்றி | tamil.babydestination

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More