சொந்தமென்று எவருமில்லை
சொத்து சுகம் ஏதுமில்லை
அரவணைக்க தந்தையில்லை
ஆதரிக்க உறவுமில்லை
தாய்ப்பால் குடித்ததில்லை
தாயின் முகம் பார்த்ததில்லை
கூடப் பிறந்தோர் யாருமில்லை
கூடி வாழ யோகமில்லை
சமுதாயம் என்னை மதிக்கவில்லை
சாக மனம் துணியவில்லை
அநாதை இல்லம் கைவிடவில்லை
அன்போடு அணைக்கத் தவறவில்லை
தனிமையை நான் உணர்ந்ததில்லை
தனித்து இருக்க நேர்ந்ததில்லை
கால ஓட்டத்தைக் கவனிக்கவில்லை
காலமும் தொடர்ந்திருக்க அதிஷ்டமில்லை
வேலை தேடி அலையவில்லை
வேண்டிக் கேட்க மறுக்கவில்லை
கழுத்தில் தாலி தொங்கவில்லை
கணவன் துணை கிடைக்கவில்லை
தாயாய் சுமந்தேன் கலங்கவில்லை
காலால் உதைத்தாய் வலிக்கவில்லை
உணர்வை வடிக்க வார்த்தையில்லை
பத்துமாத பந்தம் திகட்டவில்லை
பிரசவித்த போது நினைவுயில்லை
நினைவு தெளிய நீயருகிலில்லை
உன்முக அழகைப் பார்க்கவில்லை
ஸ்பரிசம் உணர்ந்து அணைக்கவில்லை
எங்கே சென்றாய் சொல்லவில்லை
நீயின்றி இருப்பேனோ தெரியவில்லை
வயிற்றில் சுமந்தாலும் உரிமையில்லை
வாடகைத்தாய்க்கு என்றும் சொந்தமில்லை
.
.
.
.
விமல் பரம்
.
ஓவியம் : இந்து பரா | கனடா